tamilnadu

img

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பாம்பன் புதிய ரயில் பாலத்தை  பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஞாயிறன்று திறந்து வைத்தார்.  இராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914ஆம் ஆண்டில் கடலுக்கு மத்தியில் ரயில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் அதன்  உறுதித்தன்மையை இழந்தது. இதையடுத்து, பாம்பன் பாலத்திற்கு அருகில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிக்கு 2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி மூலம் அடிக்கல் நாட்டி, பணிகள் தொடங்கின. இருவழிப் பாதை வசதியுடன் கூடிய ரயில்வே பாலத்தின் வழியாக கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் பாலத்தின் மையப்பகுதியில் செங்குத்து வடிவிலான தூக்கு பாலமும் நிறுவப்பட்டுள்ளது. புதிய பாம்பன் பாலம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டரில் மண்டபம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், ஒன்றிய இணை அமைச்சர் முருகன்,இராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ்கனி, அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். பாலத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்தபடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரயில் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.புதிய தூக்குப் பாலம் திறக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், பாலத்தை  கடப்பதை பிரதமர் மோடி பார்வையிட் டார். மேலும், வாலாஜாபாத் - ராணிப் பேட்டை, விழுப்புரம் - புதுச்சேரி உள்ளிட்ட ரூ.7,750 கோடி மதிப்பிலான 4 வழி சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். வீட்டுக்காவலில் காங்.,நிர்வாகி முன்னதாக பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட திட்டமிட்ட காங்கிரஸ் மாநில இளைஞரணி செயலா ளர் நவுஷத் அலி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.  அவரிடம் இருந்து கருப்பு பலூன்கள் மற்றும் பதாகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  பழுதடைந்த பாலம்  செங்குத்து தூக்கு பாலத்தை பிரதமர் மோடியால் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கி மேல் நோக்கி தூக்கப்பட்டு கட லோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் கடந்து சென்றது. புதிய தொங்கு பாலம் ஒரு பாகம் இறங்கியும் மற்றொரு பக்கம் இயங்காமல் சாய்வான நிலையிலேயே நின்று போனது.இதனால் பொறி யாளர்கள் பதற்றமடைந்தனர். பின்னர் அதை சரி செய்து பாலத்தை இறக்கினர்.