tamilnadu

நிகிதாவை கைது செய்ய வேண்டும்!

நிகிதாவை கைது செய்ய வேண்டும்! 

அஜித்குமாரின் தாயார் கோரிக்கை சிவகங்கை, பிப். 5 - தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான நிகிதா-வைக் கைது செய்ய வேண்டும் என்று மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமாரின் தாயார் மாலதி கோரிக்கை விடுத்துள்ளார். நகைத் திருட்டுப் புகாரில், அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமையன்று அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “அஜித்குமாா் மரணத்துக்கு காவல் துறையினரே காரணம் என்பது உறுதியாகியுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினா் 10 பேருக்குமே தொடா்பு உள்ளது. எனவே, அவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது. அதேபோல அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகைத்திருட்டு புகாரிலும் உண்மையில்லை” என்று கூறியிருந்தனர். சிபிஐ-யின் இந்த அறிக்கை, வழக்கில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இதையடுத்து, “எந்தவொரு குற்றமும் இல்லாத விவகாரத்துக்காகத் தான், ஒருவரை அடித்தே கொன்று விட்டார்களா? இதற்கு புகாா் அளித்தவரும் காரணம்தானே?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஸ்ரீமதி, வழக்கை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கொல்லப்பட்ட இளைஞர் அஜித்குமாரின் தாயார் மாலதி, மடப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், தனது மகன் சாவுக்குக் காரணமான நிகிதா-வைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “என் மகன் திருடன் இல்லை என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். இது மகிழ்ச்சி அளித்தாலும் என் மகன் இறந்து போனது தாங்க முடியாத வருத்தமாகவே இருக்கிறது. நிகிதா என்பவர் கொடுத்த பொய்ப் புகாரின் பேரில் தான், என் மகனை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். எனவே, நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதேபோல நிகிதா யார் சொல்லி புகார் கொடுத்தார்? பெரிய இடத்தில் இருந்து வந்த உத்தரவின்படி செய்ததாக அந்த 5 போலீஸ்காரர்கள் சொல்கிறார்கள். அந்த பெரிய இடம் என்பது யார்? எனக்குத் தெரிய வேண்டும்” என்று கூறியுள்ளார்.