tamilnadu

img

நாங்குநேரி இடைத்தேர்தல் செலவு வசந்தகுமாரிடம் வசூலிக்க கோரும் மனு தள்ளுபடி

மதுரை:
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவை நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்த குமாரிடமிருந்து வசூலிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “நாங்குநேரி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். ஆகையால் நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்தத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசு கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பணிக்காக செலவு செய்கிறது. ஏற்கனவே தமிழகம் 45 ஆயிரத்து 119 கோடி கடனில் இயங்கி வருகிறது. மழையின்றி போன நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள் வது அதிகரித்து வருகிறது. அரசின் பெரும் பாலான துறைகள் கடனிலேயே இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இடைத்தேர்தல் நடத்துவது அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும்.

ஆகவே நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்கு காரணமான எச்.வசந்தகுமார் அவரிடமிருந்து  இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவை வசூலிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பி யும், பதில் இல்லை. ஆகவே, மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்கும் வகையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவை நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமாரிடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும்”எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை புதனன்று விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் புகழேந்தி அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.