மதுரை:
மதுரை பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் ரமேஷின் உடலை மறுஉடற்கூராய்வு செய்யக்கோரிய வழக்கில், மதுரை மாவட்டஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்யசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை பேரையூரைச் சேர்ந்தசந்தோஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், “ எனது சகோதரர் இதயக்கனி, புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் சாப்டூர் சார்பு ஆய்வாளர் ஜெயகண்ணன் மற்றும் காவலர் புதிய ராஜா ஆகியோர்தொடர்ச்சியாக எங்கள் குடும்பத்தினரை காவல்நிலையத்திற்கு அழை த்துச் சென்று விசாரணை என்ற பெயரில் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இந்த நிலையில்கடந்த 16-ஆம் தேதி எனது இளையசகோதரர் ரமேஷை சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் மற்றும் காவலர் புதிய ராஜா ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரவு வீடு திரும்பி விடுவார் என எதிர்பார்த்த நிலையில் அதிகாலை எங்கள் வீட்டில் இருந்து 300 அடி தொலைவில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தாக்கியதன் காரணமாக எனது சகோதரர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் மீது நடவடிக்கை கோரி அரசு மருத்துவமனை முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் அன்று மாலை 5.30 மணிக்கு மேலாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. எனது சகோதரர் ரமேஷின் உடலை மதுரை, தேனி மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த மூத்த தடயவியல் துறையின் மூன்று பேராசிரியர்களைக் கொண்ட குழு மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு வியாழனன்று நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர்,” சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு தாக்கப்பட்டே ரமேஷ் உயிரிழந்துள்ளார். மாலை நான்கு மணிக்கு மேல் உடற்கூராய்வு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. ஆகவே மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறினார். அரசுத்தரப்பில், “ரமேஷின் சகோதரர் மைனர் பெண்ணை திருமணம் செய்துள்ளார். அது தொடர்பான விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் வீட்டிற்கு அருகிலேயே தூக்குப் போட்டு இறந்துள்ளார். முழு உடற்கூராய்வும்வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து நீதிபதி, “இது குறித்து மதுரை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.