மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளில் இணையவழியில் நடைபெறும் இறுதி பருவத்தேர்வு தொடர்பான வழிகாட்டும்நெறிமுறைகள் வெளியிட்டப்பட்டுள்ளன.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு இளங்கலை மாணவ, மாணவிகளுக்கான ஆறாம் பருவத்தேர்வு செப்.17-ஆம் தேதியும், முதுகலை மாணவர்களுக்கு செப்.18-ஆம் தேதியும் இணையவழியில் தொடங்குகிறது.
இதுதொடர்பாக காமராஜர் பல்கலைக்கழகத்தில் திங்களன்று நடைபெற்ற கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் இணைய வழி தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அதில், தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு வினாத் தாள்கள் கல்லூரிக்கு இணையம் மூலமாக வழங்கப்படும். அதில் இருந்து மின்னஞ்சல், கட்செவி, அஞ்சல் உள்ளிட்ட சாத்தியமுள்ள வழிகளில் மாணவ, மாணவிகள் புதன்கிழமை காலை 9.45 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். காலை பத்து மணிக்கு தேர்வு தொடங்கும். மாணவ,மாணவிகள் வீட்டிலிருந்தே ஏ 4 அளவுள்ள வெள்ளைத்தாளில் தங்களது கையொப்பம் மற்றும் பெற்றோரின் கையொப்பத்தையும் பெற்று தேர்வுஎழுத வேண்டும். பகல் ஒரு மணிக்குதேர்வு நிறைவுபெறும். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாளை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் கல்லூரிக்குஅனுப்பி வைக்கலாம் அல்லது தங்களது கல்லூரியிலோ, வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்லூரியிலோ மூடிய உறையில் விடைத் தாளை வைத்து தாங்கள் படிக்கும் கல்லூரி, பாடப்பிரிவு, பதிவு எண்ஆகியவற்றை குறிப்பிட்டு நேரடியாகச் சென்று ஒப்படைக்கலாம். இவை இரண்டும் முடியாதபோது விரைவுத் பதிவுத்தபால் மூலமாக நேரடியாக பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கலாம். தேர்வு முடிந்தஒரு மணி நேரத்துக்குள் மூன்று வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை செய்துமுடிக்க வேண்டும்.