தூசி பறக்கும் மாற்றுச்சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
தஞ்சாவூர், மே 2- தஞ்சை மாவட்டம் பேரா வூரணி அருகே, புதுக்கோட்டை செல்லும் வழியில் (முசிறி- சேது பாவாசத்திரம் மாநில நெடுஞ் சாலை-71) ஏனாதிக்கரம்பை பகுதி யில், கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழியில் தினந்தோறும் பேருந்து, லாரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பாலம் இடிக்கப்பட்டு வாகனங்கள் சென்றுவர தற்காலிக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றுப்பாதை மண் பாதையாக இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போது, மணல், தூசி பறந்து வருவதால் வாகனத்தில் செல்பவர்கள் கண்களில் தூசிபட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மண்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் மாற்றுப் பாதையை தார்ச் சாலையாக அமைத்தும், இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தும், விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.