மோடி அரசின் ‘விபி-ஜி ராம் ஜி’ திட்டத்தால் ஏழைகளின் சுயமரியாதை பறிபோகும்! சட்டப்பேரவையில் மா. சின்னத்துரை எம்எல்ஏ பேச்சு
சென்னை, ஜன. 23 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் முத லமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மா. சின்னத்துரை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை ஒன்றிய பாஜக அரசு மாற்றியிருப்பது குறித்தும், 100 நாள் வேலை பறிபோகும் அபாயம் குறித்தும் எங்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தார். இந்த பின்ன ணியில் அரசினர் தனித் தீர்மானமாகக் கொண்டு வந்திருக்கும் முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இடதுசாரிகள் ஆதரவுடன் முன்மொழியப்பட்ட திட்டம்! இந்த தீர்மானம் இன்றைய தினத்தில் கொண்டு வரப்பட்டிருப்பது மிகவும் முக்கியமானதும், துணிச்சலான முடிவும் ஆகும். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் அவரது காதுக்கு உரக்க கேட்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது மிகவும் துணிச்ச லான முடிவு. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன், ஐக்கிய முற்போக்கு கூட்ட ணியின் முதல் அரசு ஒன்றியத்தில் அமைந்த போது முன்மொழியப்பட்டு, பிறகு ஏகமனதாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு கொண்டு வரப்பட்ட திட்டம் தான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். புதிய திட்டம் ஏமாற்று நாடகம் இப்போது அந்த திட்டத்தை மாற்றுகிறேன் என்ற பெயரில், ‘விபி-ஜி ராம் ஜி’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள னர். இது கிராமப்புற மக்களுடைய வேலை வாய்ப்பை பறிக்கும் என்பதை அறி யாமலே சிலர் ஆதரிக்கிறார்கள். கிராமப்புற ஏழை மக்களின் கடின உழைப்பையும், அந்த உழைப்பின் மதிப்பையும், ஏழைகளின் வலியையும் துன்பத்தையும், கார்ப்பரேட்டு களின் தயவில் உலகைச் சுற்றி வருபவர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. வேலைவாய்ப்பு அடிப்படை உரிமை! வேலை வாய்ப்பு என்பது ஒருவரின் உரிமை. அது ஏதோ அள்ளிப் போடும் தர்மம் அல்ல. ஆனால், அந்த உரிமையைப் பறித்து, ஒன்றிய பாஜக அரசு கோடிக்கணக்கான ஏழை மக்களின் சுயமரியாதையை அழிக்க முயற்சி செய்கிறது. 100 நாள் வேலையில் பயனடைந்தவர்கள் பெரும்பகுதி பெண்கள், மாற்றுத் திறனாளிகள், பட்டியலின மக்கள், உழைக்கும் விளிம்புநிலை மக்கள். அதில் கிடைக்கும் வருமானம் குடும்ப சுமைகளைக் குறைக்கவும், மருத்துவத் தேவைகளுக்கும், குழந்தைகளின் கல்விக்கும் உத வியாக அமைந்திருந்தது. அதனைச் சிதைத்து, பெரும்பான்மையான ஏழை - எளிய மக்களைப் பட்டினி போடவே புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 125 நாள் வேலை என்பது நகைச்சுவை நாடகம்! இந்த திட்டத்தை நாசப்படுத்தி விட்டு, 100 நாள் வேலையை 125 நாட் களாக உயர்த்துகிறோம் என்று கூறுவது மிகச்சிறந்த நகைச்சுவை நாடகம். உண்மையில் ஒன்றிய அரசு 125 நாட்களுக்கு வேலை யைக் கொடுக்கவில்லை. 60 விழுக்காடு நிதியை ஒன்றிய அரசும், 40 விழுக்காடு நிதியை மாநில அரசும் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுவதால், இதன் மூலம் 100 நாள் வேலையை 75 நாட்களாக ஒன்றிய பாஜக அரசு குறைத்திருக்கிறது என்பது தான் உண்மை. இது மிகப்பெரிய அநியாயம். இதனை நாட்டு மக்க ளுக்கு சொல்ல வேண்டும். ஏழை களைப் பாதுகாத்து வந்த, 100 நாள் வேலையை சிதைக்க வேண்டும் என்று கடந்த 11 ஆண்டு கால மாகவே ஒன்றிய பாஜக அரசு பல்வேறு வகைகளிலும் முயற்சித்து வந்தது. தற்போது அதனைச் செய்துள்ளது. ராமர் பெயரையே கோட்சேயும் உச்சரித்தான் மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு கோட்சே என்கின்ற கொடிய வன் மூலம் கொல்லப்பட்டபோது அந்த கோட்சேயும் ராமர் பெயரைத் தான் உச்சரித்தான். இன்று மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தை 125 நாட்கள் உயர்த்தியிருப்பதாக கூறிக் கொண்டு, அந்தத் திட்டத்திற்கு ராமர் பெயரையே அவர்களுடைய சீடர்களும் சொல்கிறார்கள். இதை எதிர்த்து இந்தியாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்திருப்பது துணிச்சல் மிக்கது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் அரசினர் தனித் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இவ்வாறு மா. சின்னத்துரை பேசினார்
