ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அல்காரஸ் 100 ; 87
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் போட்டி யான ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் 114ஆவது சீசனில் தற்போது ரவுண்ட்ஸ் சுற்று ஆட்டங்கள் நடை பெற்று வருகிறது. வெள்ளியன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முத லிடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசையில் 30ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸின் மவுடட்டை எதிர்கொண்டார். இது அல்காரஸுக்கு 100ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டி என்ற நிலையில், இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றார். 100ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கிடைத்த வெற்றி மூலம், 22 வயதான அல்காரஸ் இதுவரை 87 போட்டிகளில் (கிராண்ட்ஸ்லாம் மட்டும்) வெற்றியை ருசித்துள்ளார். 17 போட்டிகளில் (வெற்றி விகிதம் - 100 ; 87) மட்டுமே தோல்வியை தழுவி யுள்ளார். 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங் களை வென்றுள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய ஓபனை ஒரு முறை கூட கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள் பப்ளிக் (கஜகஸ்தான்), மெத்வ தேவ் (ரஷ்யா), டியான் (அமெரிக்கா), டி பவுல் (அமெரிக்கா).ஆனால் தரவரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் முன்னணி வீரரான ரப்லவ் 3ஆவது சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார்.
சபலென்கா திணறல்
மகளிர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, தரவரிசையில் இல்லாத ஆஸ்திரிய வீராங்கனையான அனஸ்டாசியாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 7-6 (7-4), 7-6 (9-7) என்ற செட் கணக்கில் சபலென்கா கடும் போராட்டத்துடன் வெற்றி பெற்று, 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அனஸ்டாசியா ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் முன்னணி வீராங்கனை தான். ஆனால் உக்ரைன் போருக்கு பின்னர் அனஸ்டாசியா ஆஸ்திரிய குடியுரிமை பெற்று, அந்நாட்டு குடிமகளாக விளையாடி வருகிறார். 4ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள்: விக்டோரியா (கனடா), முச்சோவா (செக் குடியரசு), சுவிட்டோலினா (உக்ரைன்), கவுப் (அமெரிக்கா). இந்த பிரிவில் அதிர்ச்சி தோல்விகள் எதுவும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : பி.வி.சிந்து தோல்வி
இந்தியாவின் நட்சத்திர பேட் மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்க நாயகியுமான பி.வி.சிந்து இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 தொடரின் 4ஆவது சுற்று ஆட்டத்தில் (மகளிர் ஒற்றையர் பிரிவு) வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இது அவருக்கு 500ஆவது வெற்றியாகும். அதாவது 732 மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் பி.வி.சிந்து 500ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்தோனோசியா மாஸ்டர்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை ஒய்.எப்.சென்-னை எதிர்கொண்ட பி.வி.சிந்து 13-21, 17-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து, தொடரில் இருந்து வெளியேறினார். அதே போல ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான லக்சயா சென் 18-21, 20-22 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.
