குமுளியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்
தேனி, டிச.18- தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியாக அமைந்துள்ள குமுளியில் புதிதாக கட்டப் பட்ட பேருந்து நிலையத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வியாழ னன்று திறந்து வைத்தார். தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் இதுவரை போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், சாலையிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்தன. குறிப் பாக சபரிமலை சீசனின் போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர் நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலி ருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இந்த வழி யாக பயணம் செய்வதால், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு மற்றும் தனி யார் பேருந்துகள் தமிழக எல்லையில் பயணி களை சாலையிலேயே இறக்கி விட்டு திரும்பிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் குமுளியில் புதிய பேருந்து நிலை யம் அமைக்க பொதுமக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் குமுளியில் பேருந்து நிலை யம் அமைக்க ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். அதன் அடிப்படையில் போக்குவரத்துத் துறை சார்பில் ரூ.5.5 கோடி மதிப்பில், வணிக வளாக வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2023 செப்டம்பர் 11-ஆம் தேதி பூமி பூஜை யுடன் தொடங்கப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் போக்குவரத்துக் கழக மதுரை மண்டல மேலாண்மை இயக்குநர் சரவணன் வரவேற்புரை நிகழ்த்தினார். கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகா ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் திட்ட விளக்க உரையாற்றினார். போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவ சங்கர் போக்குவரத்துத் துறையின் செயல் பாடுகள் குறித்து உரையாற்றினார். இறுதியாக புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்து உரையாற்றினார். புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் பயணிகள் வசதி மேம்படுவதுடன், எல்லைப் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலும் குறை யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
