வணிகர்கள் சங்க 42 ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம்
பாபநாசம், மே 5- பாபநாசம் வணிகர்கள் சங்க 42 ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். இதில், மாதாந்திர கணக்கீட்டின்படி மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். பாபநாசம் பேரூராட்சியில் இவ்வாண்டு முதல் பல மடங்கு தொழில் வரி, உரிமக் கட்டணம், தொழிலாளர் வரி உயர்த்தப் பட்டதை திரும்பப் பெற வேண்டும். வணிகர்களைப் பாதுகாக்க வணிகர் பாதுகாப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். உள்ளூர் வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதை அரசு தடுக்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் வியாபாரிகளிடம் காவல்துறை அச்சுறுத்தும் வகையில் செயல் படக் கூடாது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் குறைதீர் கூட்டம்: 332 மனுக்கள் அளிப்பு
திருவாரூர், மே 5- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 332 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி மோசடி: வங்கி ஊழியர் கைது
பெரம்பலூர், மே 5- பெரம்பலூர் அருகே, போலி ஆவணம் தயாரித்து ஒரு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியரை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர், சஜ்ஜன் நகர் போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் சௌகான் (29). இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், லப்பைகுடிக்காடு கனரா வங்கிக் கிளையில், நகைக்கடன் பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது, வங்கி வாடிக்கையாளர் 5 பேரின் கணக்கில், நகைக் கடன் பெறுவதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து ரூ. 1,02,20,000 கையாடல் செய்து, தனது வங்கிக் கணக்கில் செலுத்திக் கொண்டாராம். இதையறிந்த வங்கி அலுவலர்கள், ஆவணங்களை பரிசோதித்ததில் போலி ஆவணங்கள் என தெரியவந்தது. இதுகுறித்து, நாமக்கல்லில் உள்ள கனரா வங்கி மண்டல அலுவலக உதவிப் பொதுமேலாளர் லோக கிருஷ்ணகுமார்(46) அளித்த புகாரின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வங்கி ஊழியர் ஆகாஷ் சௌகானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பெரம்பலூர் குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆகர்படுத்தி, ஆகாஷ் சௌகான் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.
காரல் மார்க்ஸ் 207 ஆவது பிறந்தநாள் விழா, திருச்சி சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார்பில் திங்களன்று கொண்டாடப்பட்டது. காரல் மார்க்ஸின், தொழிலாளி வர்க்க சிந்தனைகள், தத்துவங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் பேசினார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் நடராஜன், பழனியாண்டி உட்பட சிலிண்டர் விநியோக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
லாரிகளில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு இயற்கையாக அமைந்துள்ள மணல் திட்டை பாதுகாக்க கிராம மக்கள் கோரிக்கை
பாபநாசம், மே 5- தஞ்சாவூப் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே, கொள்ளிடக் கரையோரம் உள்ள திருவைக்காவூர் ஊராட்சி எடக்குடியில் பல்லாண்டுகளுக்கு முன்பு சுமார் 12 ஏக்கருக்கும் மேல் இயற்கையாக அமைந்த மணல் திட்டு உள்ளது. கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் எடக்குடியில் இயற்கையாக அமைந்திருக்கும் மணல் திட்டில் கிராம மக்கள் ஆடு, மாடுகளுடன் தங்கியிருப்பர். இயற்கையாக அமைந்துள்ள மணல் திட்டை பாதுகாக்க அப்பகுதி கிராம மக்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் அமைந்துள்ள மணல் திட்டில் தனி நபர் சிலர், அரசுத் துறை அதிகாரிகள், சில ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆதரவுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் எடுத்து வருகின்றனர். இதைத் தடுக்க கிராம மக்கள் போராடி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சிலர் 2 ஏக்கருக்கு குறைவாக மணல் அள்ள அனுமதி பெற்று விட்டு, 10 ஏக்கருக்கும் மேல் உள்ள மணல் திட்டை கபளீகரம் செய்து வருகின்றனர். இதுவரை 40, 50 லோடு மணல் எடுத்து விட்டனர். 2003 இல் கொள்ளிடத்தில் வெள்ளம் வந்தபோது திருவைக்காவூர் ஊராட்சியைச் சேர்ந்த 12 கிராம மக்கள் மட்டுமல்லாது, அருகில் உள்ள மண்ணிக் கரையூர், வாழ்க்கை கிராம மக்களும் மணல் திட்டில் தற்காலிக குடில் அமைத்துத் தங்கினர். வெள்ளத்தால் திருவைக்காவூர் ஊராட்சிக்கு அருகில் உள்ள பட்டவர்த்தி, அனுமாநல்லூர், துரும்பூர், பாதிரிமேடு, ஆதனூர், சோழங்க நத்தம், எருமைப் பட்டி, பொன்பேத்தி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களும் பாதிப்பை சந்திக்கும். இன்னும் பத்து மாதங்களில் தேர்தலை சந்திக்க உள்ள தமிழகத்தில் ஆளும் திமுகவிற்கு இது அப்பகுதியில் பெரிய பின்னடைவைத் தரும் என்கின்றனர் அப்பகுதி ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர்.
அரசு புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா கோரி தொடர் காத்திருப்புப் போராட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று துவங்குகிறது
திருத்துறைப்பூண்டி, மே 5- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நூறு நாள் வேலையை, சட்டப்படி தொடர்ந்து நூறு நாட்களும் ஒரு குடும்பத்திற்கு வழங்கிட கோரியும், நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்கிட கோரியும், அனைத்து வகை புறம்போக்கில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்கிட கோரியும் தொடர் காத்திருப்புப் போராட்டம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாயன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. டி.வி. காரல்மார்க்ஸ் ஒன்றியச் செயலாளர் தலைமை தாங்குகிறார். மாநிலக்குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். மாவட்டச் செயலாளர் டி. முருகையன் நிகழ்வை நிறைவு செய்கிறார். நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் முழுவதும் துண்டறிக்கை ஒட்டப்பட்டுள்ளது.