வேறு வகை விவசாயத்திற்கு மாறும் திண்டுக்கல் மாவட்ட சப்போட்டா விவசாயிகள்
தேவை குறைவு ; விலை சரிவு
நிலக்கோட்டை, மே 27- கடந்த சில ஆண்டுகளாக தேவை மற்றும் விலை சரிவு (கிலோவுக்கு ரூ.20 வரை) காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான சப்போட்டா (சீமை இலுப்பை) விவசாயிகள் படிப்படியாக இந்த பழத்தை பயிரிடுவதை கைவிட்டு வருகின்றனர். அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, மாவட்டத்தில் சப்போட்டா பயிரிடப்படும் மொத்த பரப்பளவு 2011இல் 1,715 ஹெக்டேரில் இருந்து 2024இல் 800 ஹெக்டேராக குறைந்துள்ளது. இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் ஜம்னாதாதுரை கோட்டை பஞ்சாயத்தைச் சேர்ந்த விவசாயி கே. தங்கபாண்டி கூறுகையில்,”சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மரங்களைக் கொண்ட ஒரு ஏக்கர் சப்போட்டா, ஒரு டன்னுக்கு மேல் மகசூல் தரும். பழங்களுக்கு குறைந்த விலை மற்றும் பழங்களை பதப்படுத்தும் வணிக அலகுகள் இல்லாததாலும், பல சப்போட்டா விவசாயிகள் மற்ற பயிர்களுக்கான சாகுபடியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். குறிப்பாக 2018 ஆம் ஆண்டு கஜா புயலின் போது விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்தனர். இது நூற்றுக்கணக்கான ஏக்கரில் சப்போட்டா பயிரிட்ட பலரை வேறு பயிரை தேர்வு செய்ய கட்டாயப்படுத்தியது. அதனால் நான் என் நிலத்தை நெல்லிக்காய் பயிரிட மாற்றினேன்” என அவர் கூறினார். சப்போட்டா விவசாயிகள் தற்போது நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை பயிரிடுவதைத் தேர்வு செய்து வருவதை சுட்டிக்காட்டிய தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் (திண்டுக்கல்) தலைவர் கே. வடிவேல் கூறுகையில்,“நிலக்கோட்டையில் சப்போட்டா பயிரிடப்பட்ட பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் இப்போது நெல்லிக்காய் மற்றும் பிற பயிர்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அம்மையநாயக்கனூர், மேட்டூர், கமலாபுரம், ஊத்துப்பட்டி, அமலிநகர் ஆகிய இடங்களில் உள்ள பல விவசாயிகள் நெல்லிக்காய்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பல நேரங்களில், வியாபாரிகள் சப்போட்டாவிற்கு ஒரு கிலோவுக்கு ரூ.20 மட்டுமே கேட்பதால், விவசாயிகள் வேறு பயிரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது” என அவர் கூறினார்.