tamilnadu

img

முழு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம்!

புதுதில்லி, டிச. 28 - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-கின் உடல், தில்லி நிகம்போத் காட் பகுதியில் 21 குண்டுகள் முழுங்க முழு ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது. நாட்டின் 14-ஆவது பிரதமராக 2004 முதல் 2014 வரை பத்தாண்டுகள் பதவி வகித்த டாக்டர் மன்மோகன் சிங், வியாழனன்று (டிச.26) இரவு 9.51 மணிக்கு தனது 92-ஆவது வயதில் காலமானார். வயதுமூப்பு, திடீர் மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசியல் தலைவர்கள் திரண்டு அஞ்சலி! இல்லத்தில் வைக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, தில்லி முதல்வர் அதிஷி, முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரி வால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, மன்மோகன் சிங்-கின் உடல், மலர்களால் அலங் கரிக்கப்பட்ட வாகனத்தில் சனிக்கிழ மையன்று காலை, காங்கிரஸ் அலு வலகத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. இங்கு மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர் தமது கணவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜனாதிபதி, பிரதமர்  மீண்டும் அஞ்சலி

பின்னர், காலை 10 மணிக்கு காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து, தில்லி யமுனை நதிக்கரையில் நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்திற்கு ஊர்வலமாக மன்மோகன் சிங் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக, நிகம்போத் காட் பகுதிக்கு குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு, குடியரசு துணைத் தலை வர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர  மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், தில்லி துணைநிலை ஆளு நர் வி.கே. சக்சேனா, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் உள்ளிட்டோர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

21 குண்டுகள் முழங்க எரியூட்டல்!

தலைவர்களின் இறுதி மரியாதை யை அடுத்து மன்மோகன் சிங்கின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டு, அவரது உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சந்தனக் கட்டைகள் மீது மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்பட்டு, சீக்கிய மத முறைப்படி மந்திரங்கள் உச்சாடனம் செய்யப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில், மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர், மகள்கள், நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு சடங்குகளைச் செய்தனர்.  பின்னர் மன்மோகன் சிங் உடலைச் சுற்றி கட்டைகள் வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பகல் 1 மணி அளவில் 21 குண்டுகள் முழுங்க  முழு ராணுவ மரியாதை அளிக்கப் பட்டு, மன்மோகன் சிங்கின் உடல் எரியூட்டப்பட்டது.