tamilnadu

img

மதுரை வைகையால் உயிரூட்டப்பட்ட நகரம் மட்டுமல்ல, வரலாற்றால் உரமூட்டப்பட்ட நகரமும் கூட... மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் சு. வெங்கடேசன் பேச்சு 

இந்தியா வலதுசாரி திருப்பத்தை எதிர்கொண்டிருக்கிற இந்தக் காலம், பொருளாதாரத் தாக்குதல் மட்டுமல்லாமல், தேசத்தின் பன்மைத்துவம், சமூக நீதி, முற்போக்கு மரபுகளெல்லாம் கடும் தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருக்கிற காலமாகவும் இருக்கிறது.

இம்மாநாடு நடைபெறும் மதுரை மாநகரின் வரலாறென்பது ஒற்றைத்துவ மேலாதிக்கப் போக்கிற்கு எதிராக காலம் முழுவதும் கலகம் செய்ததாகும். எங்களின் வாழ்வும், வரலாறும், நாடும் நகரமுமென அனைத்தும் எங்களின் அரசியலோடு இணைந்தது.

இந்தியர்கள் எல்லோரும், காற்றே இல்லாமல் பலூன் ஊதும் மோடியின் தற்பெருமைக் கலைக்கு ஒவ்வொரு நாளும் காது கொடுத்து களைத்துப் போயிருக்கிறோம். இதோ… உண்மையான மக்கள் வரலாற்றால் வார்க்கப்பட்ட இம்மாமதுரையின் வரலாற்றுப் பக்கங்களை உங்களை வரவேற்கும் வண்ணம் நினைவூட்டுகிறேன்.

மாபெரும் தத்துவ ஆசான் ஏங்கெல்ஸ் எழுதிய மனித குல வரலாறு பற்றிய மகத்தான நூல்  “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்”. இந்நூலின் முன்னுரையில் ஆதி தாய்வழிச் சமூகமானது தந்தை வழிச்சமூகமாக மாறும் காலத்தையும். பழைய கண்ணோட்டத்தின் பிரதிநிதிகளான பழைய தெய்வங்களூடே புதிய கண்ணோட்டத்தின் பிரதிநிதிகளான புதிய தெய்வங்கள் எப்படி பலவந்தமாக உள் நுழைகின்றன என்பதைப் பற்றியும் விரிவாக எழுதியிருப்பார்.

”கிளிதெம்னெஸ்த்ரா தனது காதலன் எகிஸ்தசுக்காக, அப்பொழுதுதான் ட்ரோஜன் யுத்தத்திலிருந்து திரும்பி வந்த தன் கணவன் அகமெம்னானை கொன்றுவிடுவார். ஆனால் அகமெம்னான் மூலம் பெற்ற மகனாகிய ஓரெஸ்தஸ் தந்தையின் கொலைக்குப் பழிவாங்குவதற்காக தாயைக் கொலை செய்வான்”. கணவன் என்ற ஆணை கொலை செய்ததற்கான நியாயத்தையும், தாய் என்ற பெண்ணை கொலை செய்ததற்கான நியாயத்தையும் பற்றி விவாதிக்கப்படுகிறது. இரு கொலைகளையும் தூண்டியவர்கள் தெய்வங்கள். தாய்வழிச் சமூகத்தில் தாய் கொலைதான் மிகப்பெரியக் குற்றம். ஆனால் தந்தை வழிச்சமூகத்தின் பிரதிநிதிகளாக உருவாகத் துவங்கிய புதிய தெய்வங்கள் அதற்கு எதிராக வாதிடுகின்றன. நீதிமன்றத்தில் தெய்வங்கள் வாக்களிக்கின்றன. வாக்குகள் இரு பக்கமும் சம அளவில் அமைகிறது. இறுதியாக நீதிமன்றத்தின் தலைவி அதீனா “தாயைக் கொன்றது குற்றமல்ல என்ற தரப்புக்கு வாக்களிக்கிறார்”  அதுவே தீர்ப்பாக மாறுகிறது.

கிரேக்க மொழியில் ஆதி காவியங்கள் எழுதப்பட்ட அதே காலத்தில் உலகத்தின் இன்னொரு மொழியில் அதற்கு நிகரான மகா காவியங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த மொழியின் பெயர் தமிழ். அந்த நிலத்தின் பெயர் தமிழகம். அந்த மண்ணின் பெயர் மதுரை. யாராலும் வெல்ல முடியாத பெண்ணரசி மீனாட்சி. உலகை வென்று முடிக்கிறாள். இறுதியாக யுத்தக் களத்துக்கு சிவன் வந்ததும் அவளது மூன்றாவது மார்பு மறைகிறது. போரிடாமலே சிவன் வென்றதாகக் கதை முடிகிறது.

தாய்வழிச் சமூகம் அதிகாரங்களை இழக்கும்போது பெண்கள் தங்களின் மார்பகங்களை இழப்பதான குறியீட்டுக் கதைகள் உலகெங்கும் உள்ள ஆதி குடிகளிடம் இன்றுமுள்ளது; ஆப்பிரிக்க கண்டத்திலும், அமேசான் காடுகளிலும் குஜராத் பழங்குடிகளிடமும், தமிழ்ச் சமூகத்தின் ஆதி நினைவிலும் இக்கதை இன்றும் உண்டு. அதுதான் அன்னை மீனாட்சியின் கதை. ஆனால், மீனாட்சியின் கதைக்கு மட்டும் ஒரு கூடுதல் சிறப்புண்டு. போர்க்களத்துக்கு வந்த சிவன் போரிடாமலே வென்று முடிக்கிறார்;

ஆண்வழிச் சமூகத்தின் அதிகார அரசியல் துவங்குகிறது. ஆனால் கதையின் ஒரு பகுதி அதன் பிறகும் மீனாட்சியின் வசமே இருக்கிறது.
ஆம் திருமணத்திற்குப் பின்னர் சொக்கர் என்று அழைக்கப்படும் சிவன் மீனாட்சியின் கணவர்தானே தவிர, மதுரையின் அரசர் அல்ல. என்றென்றும் மீனாட்சியே மதுரையின் அரசி. இந்த தனித்துவம் இந்தியாவில் வேறு எந்த தெய்வத்துக்கும் கிடையாது.

இந்நேரத்தில் இன்னொரு முக்கிய செய்தியையும் இங்கே பதிவு செய்கிறேன். மீனாட்சி அம்மன் கோவிலில் 410 கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றில் முழுமையான பாடலோடு இருப்பது 78 கல்வெட்டுக்களே. அதில் 77 கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள். ஒன்றே ஒன்று மட்டுந்தான் சமஸ்கிருத கல்வெட்டு. சமஸ்கிருதம்தான் உலகின் மூத்த மொழி, வேதப்பண்பாடே இந்தியப் பண்பாடு என்று இடைவிடாமல் கூவிக்கொண்டிருக்கும் இந்துத்துவா கூட்டத்துக்கு மதுரையிலிருந்து உரக்கச்சொல்வோம்; தமிழே எங்கள் மொழி, சமத்துவமே எங்கள் வழி, அதற்கான ஆயுதமே எங்கள் இயக்கம். அதனை வென்றடையவே எமது மாநாடு.

நான் முதலிலே குறிப்பிட்டதைப்போல பன்மைத்துவத்துக்கும், சமநீதிக்கும், சமூக நீதிக்குமான மரபே இம்மண்ணின் மரபு. அதனால் தான் “உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்று மதுரையின் புலவன் சொல்லவில்லை; அரசன் சொன்னான். அதுமட்டுமல்ல, ”கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” என்றான்.

மதங்கள் உருவாகி தெய்வங்கள் உருவானாலும், மனிதனாகி நீ முதலில் செய்ய வேண்டியது படிக்க வேண்டிய வேலையைத்தான். அதே போல எவ்வளவு ஏற்றத் தாழ்வுகளை, சாதிய படிநிலைகளை மதம் உருவாக்கினாலும் கீழ்ப்பால் உள்ளவன் கற்றால், மேற்பால் உள்ளவன் அவன் சொல் கேட்டு நட என்று உத்தரவிட்டவன் இவ்வூர் மன்னன். அறிவுலக வரலாறு நெடுகிலும் எத்தனையோ உதாரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கிக்கொண்டே போக முடியும். ஏனென்றால் உலகின் எழுத்துக்களின் ஆதி நிலம் என்று பெருமைப்படக்கூடிய நகரம் இம்மதுரை. 

ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட எழுத்துக்கள் ஒரே நகரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடத்தில் கிடைப்பது உலகிலேயே மதுரையில் மட்டுந்தான். எனவேதான் இதனை எழுத்துக்களின் ஆதி நகரம் என்றே சொல்கிறோம். 

அதனாலேயே இந்நகரம் எழுத்து சார்ந்தும், அறிவு சார்ந்தும், அன்பு சார்ந்துமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. எழுத்தாலும், அறிவாலும், அன்பாலும் சூழப்பட்ட மதுரை தன் இயல்பாலேயே மார்க்சியத்துக்கு இணக்கமாக உள்ளது. ஆண்டவனே ஆனாலும் அதிகாரத்துக்கு அஞ்சமாட்டேன், எனது விமர்சனமே சரியானது என வாதிட்ட நக்கீரன் நம்மவன் இல்லாமல் யாரவன்? அபலைப் பெண்ணாக உள்நுழைந்து அறச்சீற்றத்தோடு கொதித்தெழுந்து “தேரா மன்னா” என்று கர்ஜித்தது இன்றைய மோடி வரை பொருத்தமாக எதிரொலிக்கிறதே, அவளன்றோ நம் தோழி!.

வைகையில் வெள்ளம் கரை புரள, ஊரே பதற்றத்தோடு ஓடிக்கொண்டிருக்கும் போது எவ்வித பதட்டமுமின்றி தனது பணியைச் செய்து கொண்டிருந்த வைராக்கியமேறிய வந்திக்கிழவி நமது தாயல்லாமல் யாரின் தாய்? “உறுபசி நீக்கலே உயர் அறம்” என்று செயல்பட்ட அறச்செல்வி மணிமேகலையின் குரல்தானே, “பட்டினிக்கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள், பாரில் கடையரே எழுங்கள் வீறு கொண்ட தோழர்காள்” என்ற சர்வதேச கீதத்தின் ஆதி வடிவம்.

நாங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் வரலாற்றை மதுரையிலிருந்து துவக்கவில்லை; மதுரையின் வரலாற்றை கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து துவக்குகிறோம். சமத்துவமே இம்மண்ணின் மொழி, பெண்ணுரிமையே இம்மண்ணின் குரல், ஆதிக்க எதிர்ப்பே இம்மண்ணின் அடையாளம், இதனைக் கொண்டு எம் எதிரியை வெல்வோம் என சூளுரைக்கவே இம்மாநாடு.
இம்மதுரை தெருக்கள் தோறும் தமிழால் நிரம்பியது போல, திசைகள் தோறும் தியாகிகளால் நிரம்பியது. விடுதலைப் போராட்டத் தியாகிகள், சமத்துவ சமூகத்தை உருவாக்கப் போராடிய மகத்தான கம்யூனிச தியாகிகளால் தழும்பேறிய ஊர் இது.

இரட்டைத் தியாகிகள் மாரி-மணவாளன், தூக்கு மேடைத் தியாகி பாலு, பொதும்பு பொன்னையா, பூந்தோட்டம் சுப்பையா, ஐ.வி.சுப்பையா, தில்லைவனம், மாணவத் தியாகிகள் சோமு-செம்பு, ரயில்வே தியாகி ராமசாமி, குட்டி ஜெயப்பிரகாஷ், தியாகி லீலாவதி, மாடக்குளம் கருப்பு என இந்த இயக்கத்திற்காக இன்னுயிர் ஈந்த தியாகிகள் பற்பலர். எத்தனை எத்தனை அடக்குமுறைகள்.. எத்தனை எத்தனை சிறைக்கூடங்கள்…. அத்தனையும் எம் இயக்கத்தின் பேரடையாளம். வைகை, நீரால் ஓடும் நதி மட்டுமல்ல, எம் வீரத் தியாகிகளின் குருதியால் ஓடும் நதியுமாகும்.

அந்த தியாக வரலாற்றின் உச்சியில் ஒளிரும் நிகழ்வுதான் மதுரை சதி வழக்கு. தோழர்கள் பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியன், என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி, ப.மாணிக்கம், எம்.முனியாண்டி, எஸ்.பாலு, எஸ்.கிருஷ்ணசாமி, மணவாளன், பாலச்சந்திரமேனன் ஆகியோர் மதுரை சதிவழக்கில் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி இவ்வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி ஹலீம். சிறைச்சாலைக்கு நேரில் சென்று விடுதலை செய்ய உத்தரவிட்டார். இரவு 8 மணிக்கு சங்கரய்யாவையும் மற்ற தோழர்களையும் மதுரை மக்கள் சிறைச்சாலை வாயிலில் இருந்து பெருந்திரளாக வரவேற்று அழைத்து வந்தனர்.

நள்ளிரவில் திலகர் திடலில் விடுதலைக் கொண்டாட்டம் நடைபெற்றது. தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். தோழர் சங்கரய்யா முழங்கினார். அன்று அவர் எப்படி முழங்கினாரோ அதே குரலில்தான் இன்றும் கர்ஜிக்கிறார்.
சங்கம் வைத்த மதுரையின் மகத்தான அடையாளம் எங்கள் அன்புத்தோழர் சங்கரய்யா. அவரது நூற்றாண்டில் மதுரையில் கட்சியின் மாநில மாநாட்டை நடத்தித் தரும் நல்வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது அவரது தியாக வாழ்வுக்கு நாங்கள் சூட்டும் அலங்காரம்.

பிரதிநிதித் தோழர்களே, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டக் களமாக மதுரையின் வீதிகளையெல்லாம் உருமாற்றிய தோழர் சங்கரய்யாவின் மதுரைக்கு உங்களை வருக வருகவென வரவேற்கிறேன்.
1952 முதல் பொதுத் தேர்தலில் சிறையிலிருந்தவாறே மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வென்ற அன்புத்தோழர் பி.ராமமூர்த்தி சிலையாக நின்று ஒளியூட்டும் மதுரைக்கு உங்களை வரவேற்கிறேன்.
மதுரையின் கிராமம் தோறும் நிலப்பிரப்புத்துவ ஆதிக்கத்தை உழுது அகற்றிய ஜானகிஅம்மாளின் மதுரைக்கு உங்களை வரவேற்கிறேன்.

மக்கள் பிரதிநிதிகள் எப்படி பணியாற்ற வேண்டும் என்ற இலக்கணத்தை உருவாக்கிய தோழர்கள் கே.டி.கே.தங்கமணி, பி. இராமமூர்த்தி, பி. மோகன். என் நன்மாறனின் மதுரைக்கு உங்களை வரவேற்கிறேன்.
அதிகாரத்துக்கு அஞ்சமாட்டேன், ரெளடியிசம் கண்டு பின்வாங்க மாட்டேன். எங்கள் வாழ்வு மரணத்தோடு முடிவதல்ல, வரலாறு முழுவதும் வாழ்வது என வாழ்ந்து காட்டிய லீலாவதியின் மதுரைக்கு உங்களை வரவேற்கிறேன்.

வரலாற்றின் நெடிய பாதையெங்கும் மதுரை மண்ணில் செங்கொடி இயக்கம் தழைக்க பாடுபட்ட எம் தியாக முன்னோர்கள் ஒவ்வொருவரின் பெயர்களையும் நினைவுகூர்ந்து உங்களை வரவேற்கிறேன்.
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்று அமைகிறேன்.

அரசியல் மாநாட்டின் வரவேற்பில் உணவும் உபசரிப்பும் பற்றிய குறிப்பில்லாமலா? என்று நினைக்க வேண்டாம். எல்லா உணவிலும் உபசரிப்பிலும் அரசியலே இருக்கிறது.
ஆம், காட்டுக்கு வந்த இராமனை குகன் வரவேற்றதைப் பற்றி வால்மீகி எழுதுகிறார், அப்பமும், பாயாசமும் கொடுத்து வரவேற்றான் என்று. அதையே துளசிதாசர் எழுதுகிறார், பழங்களும் கிழங்குகளும் கொண்டு வரவேற்றான் என்று. ஆனால் தமிழ்ப் பெருங்கவி கம்பன் என்ன எழுதினான் தெரியுமா?

தேனும் மீனும் கொண்டு வரவேற்றான் என்று. எங்கள் உணவே, எங்கள் அரசியல்; எங்கள் அரசியலே எங்கள் உணவு.  எதை உண்ண வேண்டும், எதை உண்ணக்கூடாது என கட்டளை பிறப்பிக்கும் பாசிஸ்ட்டுகளுக்கு எதிரான மாநாட்டில் “உணவாலும் அடிப்போம்” என்று இருபொருள் மொழியச் சொல்கிறேன். மீனும், ஊனும் கொண்ட விருந்தளிக்க வரவேற்புக்குழு காத்திருக்கிறது.