tamilnadu

img

விந்திய மலைக்குக் கீழே இந்தியா இல்லையா? கலாச்சார ஆராய்ச்சிக் குழுவை கலையுங்கள்... மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி., பேச்சு

புதுதில்லி:
விந்திய மலைக்குக் கீழே இந்தியா இல்லையா என மக்களவையில் ஆவேசகேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இந்திய கலாச்சாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட குழுவினை உடனடியாக கலைத்திட வேண்டுமென வலியுறுத்தினார்.

கடந்த 12 ஆயிரம் வருட இந்தியகலாச்சாரம் குறித்து ஆராய அமைக்கப் பட்ட மத்திய அரசின் குழுவில் தென் இந்தியரோ, சிறுபான்மையினரோ, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவரோ இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்குழு தொடர்பாக, நாடாளுமன்றத்தில் கடந்த திங்களன்று ஒரு கேள்விக்கு எழுத்துமூலம் மத்தியகலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அளித்த பதிலில், தற்காலத்தி லிருந்து 12 ஆயிரம் வருடங்களுக்கு முன்புவரையிலான இந்திய கலாச்சாரம் குறித்தும் அதன் துவக்கம் குறித்தும்ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப் பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அந்தக்குழு பற்றிய விபரங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். 

யார் அந்த 16 பேர்?
16 பேரைக் கொண்ட அந்த நிபுணர் குழுவில், இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் ஜெனரல்கள் கே.என். தீக்ஷித், ஆர்.எஸ். பிஷ்ட், தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் பி.ஆர். மாணி, ஜவஹர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, லால் பகதூர் சாஸ்திரி,தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழ கத்தின் துணை வேந்தர் ரமேஷ் குமார் பாண்டே, அதே பல்கலைக்கழகத்தின் வேந்தர் முகுந்த்கம் ஷர்மா, விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷனைச் சேர்ந்த மக்கன்லால், இந்தியப் புவியியல் சர்வேயின் முன்னாள் கூடுதல்இயக்குனர் ஜெனரல், ஜி.என். ஸ்ரீவத்ஸவா, தேசிய சமஸ்கிருத சன்ஸ்தானின் துணை வேந்தர் பி.என். சாஸ்திரி, தில்லி பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் தலைவர் பி.சி.சர்மா, ஹைதராபாத் பல்கலைக்கழ கத்தின் மானுடவியல் துறையின் டீன் கே.கே. மிஸ்ரா, தில்லி பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறையைச் சேர்ந்த பல்ராம் சுக்லா, கனடாவைச் சேர்ந்த ஆசாத் கௌசிக், உலக பிராமணர்பெடரேஷனின் தலைவர் எம்.ஆர். ஷர்மா, கலாச்சாரத் துறையின் பிரதிநிதி, ஆர்க்கியாலஜிகல் சர்வேயின் பிரதிநிதி என மொத்தம் 16 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு குறித்த தகவல்கள் வெளியானவுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடும்எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் மட்டுமின்றி, கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமியும் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். கலாச்சாரம், வரலாறு குறித்து ஒரு சார்பான பார்வை கொண்டவரே இக்குழுவில் இடம்பெற்றிருப்பதால் இக்குழுவின் நோக்கம் குறித்தே சந்தேகம் எழுகிறது என்றும், முற்றிலும் வட இந்தியர்களே நிறைந்திருப்பதால் புதிய குழுவை அமைக்க வேண்டும் என்றும் எச்.டி.குமாரசாமி கூறியிருந்தார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “இந்தக் குழு 2016ஆம் ஆண்டே அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால், இது குறித்து அந்த சமயத்தில் யாரும் பெரிதாகப் பேசவில்லை. கடந்த ஆண்டில்பா.ஜ.கவின் எம்.பியான தேஜஸ்வி நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியைஎழுப்பினார். ‘இந்தியக் கலாச்சாரம்குறித்து எழுதுவதற்கு அமைக்கப் பட்ட குழு தன் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டதா, அவை நம் பாடப்புத்தகங்களில் இணைக்கப்பட்டுவிட்டனவா’ என அவர் கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சகம், குழு இன்னும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று பதிலளித்தது. இதற்குப் பிறகு தற்போது 6 பா.ஜ.க. எம்.பிக்கள் இதே கேள்வியை எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளிக்கும்போதுதான் இந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு, இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறியிருக்கிறது அமைச்சகம்”  எனத் தெரிவித்திருந்தார். பா.ஜ.க. சொல்கிற இந்துத்துவ கலாச்சாரம் தான் இந்தியக் கலாச்சாரம்என நிறுவவே இந்த குழு அமைக்கப்பட்டிருக்கிறது; இந்த 12 பேரிலும் வரலாற்று ஆசிரியர்களே இல்லாமல், தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்களே இடம்பெற்றிருப்பது எதற்காக எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மக்களவையில் பேச்சு

இந்நிலையில் செப்டம்பர் 21 திங்க ளன்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் இப்பிரச்சனையை எழுப்பிசு.வெங்கடேசன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

12 ஆயிரம் ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார்.இந்தக்குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபான்மையினரோ, தலித்தோ, பெண்ணோ இடம்பெறவில்லை. இந்து உயர் சாதியைச்சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.மத்திய அரசு செம்மொழி என்று அங்கீகரித்த தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் ஆய்வாளர்கள் யாருக்கும் இதில் இடமில்லை. ஆனால் சாதிச் சங்க தலைவருக்கு இடமிருக்கிறது.விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகத்தினைத் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதத்தை தவிர ஆதி மொழி இங்கு இல்லையா? ஜான் மார்ஷல், சுனிதிகுமார் சட்டர்ஜிதுவங்கி ஐராவதம் மகாதேவன், டோனிஜோசப், ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளையெல்லாம் நிராகரித்து புராணங்களையே வரலாறு என நிறுவுவதற்கே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.எப்படி மண்ணுக்குள் இருக்கும் வேர்களை விமானங்களில் பறந்துகொண்டு பார்க்க முடியாதோ அதேபோல இந்த மண்ணின் பண்பாட்டினை சாதியத்தின் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் ஒரு போதும் எழுத முடியாது. எனவே இந்தக்குழுவை கலைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.