திருவில்லிபுத்தூர்:
காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் அவரது சொந்த ஊரான திருவில்லிபுத்தூரில் திங்களன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருவில்லிபுத்தூா் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டது. இக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த மாதவராவ் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். கடந்த மார்ச் 17 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த இவா், 3 நாள்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் இவர் கொரோனா அறிகுறியுடன் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரது மகள் திவ்யாராவ் மற்றும் திமுககூட்டணி கட்சியினா் மாதவராவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அவருக்கு, சிகிச்சையில் இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டது. மேலும் நுரையீரல் தொற்று பாதிப்பும் இருந்தது. தொடா்ந்து செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை பெற்று வந்தநிலையில், மாதவராவ் ஞாயிற்றுக்கிழமை காலை 7.55 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் திருவில்லிபுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து மாதவராவின் உடல் அவரது சொந்த ஊரான திருவில்லிபுத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.