tamilnadu

img

காதல் முதற்றே உலகு!

காதல் முதற்றே உலகு!

காதல் காதல் காதல் காதல் போயிற் காதல் போயிற் சாதல் என்றான் மகாகவி பாரதி. காதல் மனித இயல்பு. காதல் உலக இயல்பு.  காதல் உயிர்கள் இயல்பு. காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரியது  அல்ல. அனைத்து உயிர்களுக்குமானது. உலகம் ஈர்ப்பு விசையினால் இயங்குகிறது என்றால் உலக உயிர்கள் அனைத்தும் அப்படியே.  அது தான் காதல். அண்ட சராசரங்களும் ஒன்றையொன்று ஈர்த்தும் விலக்கியுமே இயங்குகின்றன. உலக  உயிர்கள் அனைத்தும் அது போன்றே இயங்கு கின்றன.மனித குலமும் அப்படியே ! இயற்கையின் படைப்பே ஒன்றையொன்று ஈர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளன. காதல் என்பது மனித குலத்துக்கு மட்டுமே உரியது அல்ல. உயர்திணைக்கு மட்டுமே உரிய  குணமல்ல; அஃறிணைக்கும் அதுவே குணம். அதாவது காதல் என்பது அனைத்து வகை உயிர்களின் பொதுக்குணம். நமது சங்க இலக்கியங்கள் விலங்குகளின் காதல் காட்சியையும் படம்பிடித்துள்ளன அல் லவா! பாலை நிலத்து கோடை வெயிலில் சோர்ந்து படுத்திருக்கும் தன் காதல் இணைக்காக - பெண்  மானுக்காக, ஆண்மான் தன் உடலால் வெயிலை  மறைத்து நிழலைத் தருகிற கலித்தொகை பாடல்  காட்சி அதைத்தானே உணர்த்துகிறது. அதேபோல் கோடை வெயிலில் கடும் தாகத்தில்  நாவறண்டு தவித்த நிலையில் சிறிதளவே நீர்  இருக்கும் நீர்நிலையில் பெண் யானை (பிடி)  குடிக்கட்டும் என்று ஆண்யானை (களிறு) குடிப்பது  போல் நடிக்கும் காட்சியும் அதுதானே. அதுபோல் சங்கம் மருவிய கால ஐந்திணை ஐம்பது - பெண் மான் குடிப்பதற்காக ஆண் மான்  நடிக்கும் காட்சியையும் காட்டுகிறது. காதல் இல்லாத வாழ்வில் என்ன இன்பம் / சொல்ல என்ன வெட்கம் - என்று கேட்கிறார் ஒரு  கவிஞர். மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல்  கூடுமோ? என்று வினவுகிறார் இன்னொரு கவி ஞர். “காதலினால் உயிர் தோன்றும் - இங்கு காதலினால் உயிர் வீரத்திலேறும்; காதலினால் அறிவெய்தும் - இங்கு  காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்”  என்கிறார் பாரதி. காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால் மாமலையும் ஓர் கடுகாம் காதலர்க்கு என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். காதல் மனிதர்களை நாகரிகம் உள்ளவர்கள் ஆக்குகிறது.  இருமனமும் ஒத்த காதலே இன்பம் நல்கும். ஒரு தலைக் காதல் துன்பத்தையே சுமத்தும். காத லர் இருவர் கருத்தொருமித்தால் தானே அது இயல்பாகும். இன்பமாகும். இருமனம் இணைந்த காதலர்களையே இணை  சேரவிடாமல் தடுக்கிற சமூகமாகத் தானே மனித  சமுதாயம் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டி லும் இருக்கிறது. காதலுக்கு சாதியில்லை, மதமுமில்லையே; கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே! ஆனால் இந்தக் காதலுக்குத் தான் எத்தனை எத்தனை இடையூறுகள். ஆணவக் கொலைகள். காதலர்க்கு பாதுகாப்பு  வேண்டாமா? காதலர்கள் ஒன்று சேரப் பொறுக்காத, ஒன்றாய்  வாழப் பொறுக்காத நிலை மாற வேண்டாமா? சாதியாய் மதமாய்ப் பிரிந்து கிடக்கும் சமூ கத்தில் சமத்துவ எண்ணத்தை உருவாக்குவது காதல் தானே! “காதலொருவனைக் கைபிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுத்தே “ என்பார் பாரதி யார். அந்தக் காதலுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்த வர் ஜென்னி மார்க்ஸ். இது உலகம் போற்றும் காதல்  மட்டுமல்ல; உலகம் உய்யவும் முகிழ்த்த காதல். காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை? நியூட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்  தம் எத்தனை என்று கேட்கிற ஜென் ஸி இளைய  தலைமுறை, வாழ வைக்கும் காதலுக்கு ஜே! சொல்ல வேண்டாமா? காதல் என்பது வெறும் இனக் கவர்ச்சியல்ல. அது மனித குலம் தழைக்க சிறக்கக் கிடைத்த நல்  வாய்ப்பு. எதிர்பாலினம் ஏற்பும் விலக்கும் இயல்பானது. இது அனைத்து வகை உயிர்களுக்குமானது. எனவே காதலைப் போற்றுவது மனித குலத்தின் மாபெரும் கடமையாகும். காதல் அன்பே வாழ்வை இனிமையாக்கு கிறது. வளமையாக்குகிறது. அதனால் காதலைப்  போற்றுவோம்.! பிப்ரவரி 14 என்பது மட்டுமே காத லர் தினமல்ல. எல்லா நாளுமே காதலர் தினம் தான். வாழ்வில் இறுதி வரை அந்த உறுதியுடன் இருப்பதே சிறப்பு. இளமையில் தோன்றும் காதல்  முதுமையிலும் மணம் வீசிட வேண்டும். அதுவே  முழுமை பெற்ற காதல். “அனைத்து வகை உயிர்களுக்கு எல்லாம் /காதல் முதற்றே உலகு”  காதல் போற்றுதும்! காதல் போற்றுதும்! -ப.முருகன்