நட்டம் பொதுமக்களுக்கு; லாபம் கார்ப்பரேட்டுகளுக்கா? பாஜக அரசின் பட்ஜெட் மீது ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கடும் சாடல்
புதுதில்லி, பிப். 11 - “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டை வெறுமனே ‘குறைபாடுள்ள ஆவணம்’ என்று மட்டும் சொல்லி விட முடியாது; இது கட்டமைப்பி லேயே மக்கள் விரோதமானது மற்றும் கார்ப்பரேட் ஆதரவு நிலையை கொண்டது!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் குற்றம் சாட்டினார். “தொழிலாளர்கள் வேலை இழப்பையும், விவசாயிகள் வரு மானச் சரிவையும், இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை யும், சாமானியக் குடும்பங்கள் விலைவாசி உயர்வையும் சந்தித்து வரும் வேளையில், இந்த அரசு மக்களைக் காப்பதற்குப் பதிலாக கார்ப்பரேட் லாபத்தைக் காப்பதையே தனது நோக்கமாகக் கொண்டிருப்பதையே பட்ஜெட் வெளிச்சம் போடுகிறது” என்றும் சாடியுள்ளார். மக்களவையில், ஒன்றிய பாஜக அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து, ஆர். சச்சி தானந்தம் எம்.பி. பேசினார். அப் போது அவர் மேலும் பேசியிருப்ப தாவது: தேக்க நிலையில் உழைக்கும் வர்க்கம் இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் கடந்த பல பத்தாண்டுகளில் இல்லாத மிக மோசமான பொருளா தார நெருக்கடியைச் சந்தித்து வரு கிறது. உண்மையான ஊதியம் தேக்க நிலையில் உள்ளது; அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை; இளைஞர்களிடையே வேலை யில்லாத் திண்டாட்டம் அபாயகர மான அளவில் உயர்ந்துள்ளது. பொதுச் செலவினங்களை அதி கரித்து வேலைவாய்ப்புகளை உரு வாக்கியிருக்க வேண்டிய அரசு, ஏழைகளிடம் கஞ்சத்தனம் காட்டி விட்டு, செல்வந்தர்களிடம் தாராள மயம் காட்டுகிறது. நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லை, பொதுத்துறை நிறு வனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பத் திட்டமில்லை. உழைப்பை மூலதனமாகக் கொண்ட தொழில் களை ஊக்குவிக்க எந்த முயற்சி யும் எடுக்கப்படவில்லை. சுருக்க மாகச் சொன்னால், பெரும் பணக்கா ரர்களுக்குப் பரிசுகளை வாரி வழங்கிவிட்டு, வேலையில்லாத இளைஞர்களை ‘பொறுமையாக இருங்கள்’ என்று இந்த பட்ஜெட் வஞ்சிக்கிறது. விற்கப்படும் விவசாய நலன்! வேளாண் துறை ஆழமான நெருக்கடியில் சிக்கியுள்ளது. விதைகள், உரங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் இழப்பு ஒருபுறம், கடன் சுமை மறுபுறம் என விவசாயிகள் தவிக்கிறார்கள். ஆனால் இந்த பட்ஜெட்டில், • குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் இல்லை. • பாசனம், சேமிப்புக் கிடங்கு மற்றும் கொள்முதல் ஆகியவற்றில் பெரிய பொது முதலீடு இல்லை. • உற்பத்திச் செலவைக் குறைக்க உருப்படியான நடவடிக்கைகள் இல்லை. மாறாக, விவசாயத் துறையைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப் பாட்டில் ஒப்படைக்கவே இந்த அரசு துடிக்கிறது. இது சீர்திருத்தம் அல்ல; விவசாயிகளைப் பாது காப்பின்றி சந்தையிடம் கைவிடும் துரோகம். நஷ்டம் பொதுமக்களுக்கு; லாபம் கார்ப்பரேட்டுகளுக்கு இந்த பட்ஜெட்டின் சூத்திரம் மிக எளிதானது: நஷ்டம் ஏற்பட்டால் அது சமூகத்திற்கு, லாபம் கிடைத்தால் அது தனியார் கார்ப்பரேட்டு களுக்கு. கார்ப்பரேட் வரிச் சலுகைகள் நீடிக்கின்றன. உள்கட்டமைப்பு மற்றும் தளவாடத் துறையில் இருக்கும் பெரும் முதலாளி களுக்கு மானியங்கள் அள்ளித் தரப்படு கின்றன. ஆனால் உணவுப் பாது காப்பு, கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூகநலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பணவீக்கத்திற்கு ஏற்பக் கூட அதிகரிக்கப்படவில்லை. பெரும் மூலதனக் கும்பல் கேட்கும் போதெல்லாம் பணம் தரும் இந்த அரசிடம், ஏழை மக்களின் நலத் திட்டங் களுக்கு மட்டும் பணம் இல்லைஎன்பது வேடிக்கையாக இருக்கிறது. உரிமைகள் பறிக்கப்படும் தொழிலாளர்கள் ‘தொழில் செய்வதை எளிதாக்குதல்’ (Ease of doing business) என்ற பெயரில் தொழிலாளர் உரிமைகள் நசுக்கப் படுகின்றன. புதிய தொழிலாளர் சட்டங்கள் வேலை பாது காப்பைக் குறைக்கின்றன; முதலாளிகள் நினைத்தபோது வேலையை விட்டுத் துரத்த வழிவகை செய்கின்றன. கிக் (Gig) தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் திட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றி இந்த பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இல்லை. தொழிலாளர்களைத் தூக்கி எறியப்பட வேண்டிய பொருளாகவும், கார்ப்பரேட்டுகளை நாட்டின் சொத்தாகவும் இந்த அரசு கருதுகிறது. தேச பாதுகாப்பு என்பது ஆயுதங்கள் மட்டுமல்ல! பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரிக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத் தில்லை. ஆனால் உண்மையான பாதுகாப்பு என்பது வெறும் ஆயுதங்களில் மட்டும் இல்லை; அது உணவு, ஆரோக்கியம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் இருக்கிறது. அரசுப் பள்ளி களில் ஆசிரியர்கள் இல்லை, மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை, இளைஞர்களிடம் வேலை இல்லை, விவ சாயிகளிடம் வருமானம் இல்லை - இவ்வளவு பலவீனமான அடித்தளத்தை வைத்துக்கொண்டு ஒரு நாடு எப்படி வலிமை யான நாடாக இருக்க முடியும்? பசியோடும் வேலையில்லாத் திண்டாட்டத்தோடும் இருக்கும் ஒரு மக்கள் தொகையைக் கொண்டு வலிமையான தேசத்தை உருவாக்கிவிட முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மாற்றுக் கனவைக் கொண்டுள்ளது. பொது முதலீடு, வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும்; விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்; கல்வி மற்றும் சுகாதாரம் என்பது சலுகை அல்ல, அது உரிமையாக இருக்க வேண்டும்; தொழிலாளர் கள் கண்ணியத்தோடும் பாதுகாப்போடும் நடத்தப்பட வேண்டும். பொருளாதாரக் கொள்கைகள் ஒரு சிலருக்காக அல்லாமல், கோடிக்கணக்கான மக்களுக்காக இருக்க வேண்டும். இந்த பட்ஜெட் அத்தகைய பார்வையை முழுமையாகத் தவறவிட்டு விட்டது. எனவே, உழைக்கும் வர்க்கத்தை வஞ்சிக்கும் இந்த ‘கார்ப்பரேட் பட்ஜெட்டை’ நாங்கள் வன்மை யாக எதிர்க்கிறோம். இவ்வாறு ஆர். சச்சிதானந்தம் பேசியுள்ளார்.
