சென்னை, ஏப். 9-இந்தியா மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள்தீர்மானிக்க வேண்டிய தேர்தல் வரும் மக்கள வைத் தேர்தல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கூறினார்.சென்னையில் செவ்வாயன்று (ஏப். 9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் கருவியாகச் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். மக்களைப் பிளவு படுத்தி பாசிச ஆட்சியைக் கொண்டுவர முயற்சிக்கிறது. மோடி அரசு ஆர்.எஸ்.எஸ்.சின் கட்டுப் பாட்டில் உள்ளது. மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதிகாரம் முழுவதையும் மத்தியில் குவித்து வைத்துக் கொண்டு எதேச்சதிகார அரசாக மத்திய அரசு செயல்படுகிறது. பாஜக செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க வழியில்லாததால் அயோத்தியா, சபரிமலை பிரச்சனையை முன் நிறுத்தித் தேர்தலைச் சந்திக்கிறது. நீதித்துறை, ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் என அனைத்துத் துறைகளிலும் பாஜக தலையீடு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அனைத்து துறைகளிலும் நொடிந்து போயுள்ளது. இதற்கு பாஜகவின் மோசமான கொள்கைகள்தான் காரணம். முஸ்லிம், கிறிஸ்தவர்கள் தவிர அனை வருக்கும் குடியுரிமை வழங்கப்படும் எனபாஜக கூறுகிறது. இது எவ்வளவு பெரிய ஆபத்துஎன்பதை மக்கள் உணர வேண்டும். இந்தியா மதச்சார்பற்ற நாடாகத் தொடர, பன்முகத்தன்மை நீடிக்க, மாநில உரிமைகளைக் காக்க பாஜக, அதிமுக கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்றார். அதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பரப்புரை பாடல் அடங்கிய குறுந்தகட்டினை அவர் வெளியிட்டார். இச்சந்திப்பின் போது சிபிஐ தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மு.வீரபாண்டியன், டி.எம்.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.