tamilnadu

img

இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் ஆதரவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம்!

இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் ஆதரவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம்!

சீத்தாராம் யெச்சூரி நகர்- மதுரை, ஏப். 6 - “உழைப்பாளி மக்களின் ஆதரவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலம்பொருந்திய கட்சியாக மாற்றுவோம்” என்று கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.ஏ. பேபி முழங்கினார். மதுரையில் ஞாயிறன்று நிறைவடைந்த மாநாட்டில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி, பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி பேசியது வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டிற்காக நாம் அனைவரும் மதுரையில் கூடினோம். மாநாடு நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு நமது கட்சி இருபெரும்  இழப்புகளை சந்தித்தது.  அகில இந்திய மாநாட்டுக்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நமது பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியை நாம் இழந்தோம். சில மாதங்களுக்கு முன்பு மற்றொரு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை இழந்தோம். இவர்கள் இருவரது இழப்பும் கட்சிக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மேலும் கடந்த மாநாட்டிற்கு பின்னர் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கோடியேரி பாலகிருஷ்ணனை இழந்தோம். அவரது இழப்பும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும். இயற்கையின் முடிவை மீறி நாம் ஏதும் செய்துவிட முடியாது. ஆனால் 24-ஆவது கட்சி காங்கிரசை நடத்தவேண்டும் என்ற நிலை வந்தபோது நமது கட்சிக்கு  கலங்கரை விளக்கமாக திகழ்ந்த தோழர் யெச்சூரி இல்லாத நிலையில் அரசியல் தலைமைக்குழுவும் மத்தியக் குழுவும் இணைந்து கட்சியின் அரசியல் மற்றும் ஸ்தாபனத்திற்கு எழுந்த சவாலை கூட்டாக எதிர் கொண்டு பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்துள்ளோம். 24-ஆவது அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். அரசியல் தலைமைக் குழு மற்றும் மத்தியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் அசாதாரண சூழலில் கட்சியில் கூடுதல் பொறுப்பை ஏற்று முக்கியமான பங்களிப்பை செய்தார். அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன கடமையை சிறப்பாக அவர் செய்து முடித்துள்ளார். இந்த அகில இந்திய மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்த உரிய பங்களிப்பை அவர் வழங்கியது பாராட்டுக்குரியது. தோழர் யெச்சூரி கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவர் தேறி வந்துவிடுவார் என நினைத்தோம். தோழர் பிருந்தா காரத் தொடர்ச்சியாக மருத்துவர்களை தொடர்பு கொண்டு சிகிச்சைகளை ஒருங்கிணைத்து அவரை எப்படியாவது தேற்றிவிட வேண்டும் என்று கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். உடலை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பல முறை நாங்கள் தோழர் யெச்சூரியிடம் தெரிவித்திருக்கிறோம். நீங்கள் ஆற்றவேண்டிய பல பணிகள் உள்ளன. கட்சியின் பல மாநில மாநாடுகளுக்கு செல்லவேண்டியிருக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தோம். இயற்கையை வெல்லமுடியாத நிலையில் அரசியல் தலைமைக்குழுவும் மத்தியக் குழுவும் கூட்டுச் செயல்பாடு மூலம் இயங்கியது. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு உழைக்கக்கூடிய இந்த கட்சி ஒரு அசாதாரணமான கட்சி என்பதை நாம் நாட்டிற்கு உணர்த்தினோம். கடினமான காலக் கட்டங்களில் கட்சி எந்தவித பின்னடைவையும் சந்திக்காமல் செயல்படுவதற்கான ஆற்றல் கட்சிக்கு உள்ளது என்பதை நாம் கூட்டுச் செயல்பாடு மூலமாக உணர்த்தியுள்ளோம்.

ஆக்கப்பூர்வமான விவாதம்

இந்த மாநாடு ‘ஒற்றுமை’ மற்றும் ‘கலந்தாலோசனை’ என்ற அடிப்படையில் நடைபெற்றுள்ளது. கட்சியைப் பலப்படுத்துவது குறித்து விரிவான விவாதமும் நாம் எங்கு பலவீனமாக இருக்கிறோம் என்பது குறித்தும் கடந்த 3 ஆண்டுகளில் நமது செயல்பாடுகள் குறித்தும் ‘விமர்சனம்’, ‘சுயவிமர்சனம்’ என்ற அடிப்படையில் ஆக்கப்பூர்வமாக விவாதங்களை நடத்தினோம். விவாதத்தின் போது பெரும்பாலான பிரதிநிதிகள் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்தனர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தங்களது செயல்பாடுகள் குறித்து ‘சுய விமர்சனம்’ செய்து கொள்ளவேண்டும் என்று கூறினர். இதை அரசியல் தலைமைக்குழு ஏற்றுக்கொள்கிறது.

வெற்றிகரமாக செய்து முடிப்போம்    

      கடந்த அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தியை எந்தளவுக்கு செயல்படுத்தியுள்ளோம் என்பதை நாம்  பரிசீலித்திருக்கிறோம். அதில், நாம் எந்தளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறோம்; எந்தளவுக்கு பின்னடைவை சந்தித்திருக்கிறோம் என்பதை இந்த மாநாட்டில் விவாதித்தோம். அதன் அடிப்படையில் அரசியல் தீர்மானத்தை உருவாக்கி வருங்காலத்தில் புதிய அரசியல் நடைமுறை உத்தியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதை மத்தியக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நாம் விவாதங்களை அமைத்துக் கொண்டோம். இந்த பணிகளை நாம் வெற்றிகரமாக செய்து முடிப்போம்.

தெளிவான எதிர்கால பாதை

எதிர்காலத்திற்கான பாதை தெளிவாக உள்ளது. ஜனநாயக ரீதியாக பல்வேறு  இயக்கங்களை நடத்தும் போது நம்முன் பல சவால்கள் உள்ளன. சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு உழைப்பாளி மக்களையும் அணிதிரட்டி, ‘அரசியல் சாசனத்தின் மாண்புகள்’, ‘ஜனநாயகம்’, ‘மதச்சார்பின்மை’ ஆகியவற்றைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ‘நவ பாசிச போக்கு’களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

நவபாசிச அச்சுறுத்தல்    

ஆளும் வர்க்கங்களோடு இணைந்து, நரேந்திரமோடி - அமித்ஷா, நாக்பூரில் அமர்ந்துகொண்டுள்ள மோகன் பகவத் ஆகியோர் நாட்டைக் கற்காலத்திற்கு  அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். இதற்கு அண்மையில் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்- பிரபல திரைக்கலைஞர்கள் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படமே சாட்சி. அந்த திரைப்படம் குஜராத் மாநிலத்தில் சங்-பரிவாரங்கள் நடத்திய வன்முறையையும் இனப்படுகொலையையும் குரூரமான வன்முறையையும் தோலுரித்துக் காட்டுகிறது என்பதால் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த படத்தையே தடைசெய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வருகிறது.

திரைப்படத்துறையினருக்கு மிரட்டல்

ஒன்றிய அரசின் தணிக்கைத் துறையின் உரிய தணிக்கைக்கு பிறகே அந்தப் படம் திரைக்கு வந்துள்ளது. அந்த தணிக்கை வாரியத்திலும் ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள் தான் அதிகமாக உள்ளனர். ஆனால், நாடு முழுவதும் அந்தத் திரைப்படம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதால் படத்தின் சில காட்சிகளை வெட்டவேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர். மேலும் அந்த திரைப்படம் தொடர்புடைய அனைவரது வீடுகளிலும் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையை கொண்டு தொடர்ச்சியாக சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அச்சுறுத்தலை எதிர்கொள்வோம்   24-ஆவது அகில இந்திய மாநாட்டுக்கான அரசியல் தீர்மானத்தை தயாரிக்கும்போது, நாம் என்ன சொன்னோமோ- அது நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் ‘நவ பாசிச போக்கு’. அதை ஆளும் வர்க்கம் உழைப்பாளி மக்கள் மீதும் உழைப்பாளி மக்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் அனைவரின் மீதும் ஏவியுள்ளது. இந்தச் சவாலை நமது கட்சி எதிர்கொள்ளும். ‘ஜனநாயகம்’, ‘மதச்சார்பின்மை’, ‘மக்கள் ஒற்றுமை’க்கு எழுந்துள்ள இந்த அச்சுறுத்தலை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள கட்சியின் சுயேச்சையான பலத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்தும் இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டுச் செயல்பாட்டை அதிகரிப்பது குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதித்துள்ளோம். அரசியல் கடமை நரேந்திர மோடி அரசு பின்பற்றிவரும், நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கான கோரிக்கைகளுக்காகவும் போராடும் அதேவேளையில் இந்துத்துவா, கார்ப்பரேட், மதவாதக் கூட்டணியையும் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதற்கான அரசியல் கடமை தெளிவாக உள்ளது. உழைப்பாளி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டிய கடமை செங்கொடி இயக்கத்திற்கு உண்டு. நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பகுதி ஏழை எளிய மக்களை எப்படி பிளவுவாத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் நமது இயக்கங்களுக்கு பின்னால் அவர்களை பெருமளவில்  ஏன் அணிதிரட்ட முடியவில்லை என்பதையும்  நாம் மாநாட்டில் ஆழமாக விவாதித்தோம். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்தியக் குழு பின்னர் இதுகுறித்து தீவிரமாக விவாதிக்கும். இதுகுறித்து கட்சியின் மாநிலக் குழுக்களுடனும் விவாதிக்கப்பட்டு 24ஆவது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமல்படுத்தப்படும். பெண்களின் பங்கேற்பு அவசியம் நமது எதிர்கால அரசியல் கடமைகளை நிறைவேற்றுவதில் பெண்களின் பங்கேற்பும் மிக மிக அவசியம். நமது கட்சியின் பால் மேன்மேலும் பெண்களை ஈர்க்க நாம் திட்டமிட்டு சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் இந்த மாநாடு தேர்ந்தெடுத்துள்ள மத்தியக்குழுவில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. மத்தியக்குழுவில் ஏற்கெனவே பெண்களின் விகிதம் 17 விழுக்காடாக இருந்தது. ஆனால், இந்த மத்தியக்குழுவில் அந்த விகிதம் 20 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநாடு, மத்தியக் குழுவை வெற்றிகரமாக தேர்ந்தெடுத்துள்ளது. முடிவெடுக்கும் அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் இந்த மாநாடு மிகவும் குறிப்பிடத்தக்க பணியை செய்துமுடித்துள்ளது. மூத்த தலைவர்களின் பங்கேற்பு இந்த மாநாட்டில்தான், வயது வரம்பு காரணமாக அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் குழுவில் இருந்து விடுபடுவோர் விகிதமும் புதிதாக இணைக்கப்பட்டோர் விகிதமும் மிகமிக அதிகம். கட்சியின் அனைத்து மட்டங்களில் அடுத்த தலைமுறை வரவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இதில் கட்சி மிகவும் கவனமாக உள்ளது. இந்த மாநாட்டோடு அரசியல் தலைமைக் குழு, மத்தியக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தலைவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து கட்சிக்கு உதவும் வகையில் சம்மந்தப்பட்ட மாநிலக்குழுக்களுடன் இணைந்து செயல்படுவார்கள். கட்சிக் கடமைகளை நிறைவேற்றுவோம் மதுரை மாநாடு முடிந்த பின்னர், நாம் நமது மாநிலங்களுக்குச் செல்லும் போது, மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பல்வேறு விஷயங்களை உள்வாங்கிக்கொண்டு, கட்சி அளித்துள்ள பணிகளைச் சரியாக செய்துமுடிக்க வேண்டியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரை கட்சி அமைப்புகளில் பல்வேறு தளங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் விவாதங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் தான் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும். பல்வேறு மட்டங்களில் இருந்து வரக்கூடிய கருத்துக்களை உள்வாங்கி செயல்படுவதன் மூலம் கட்சியை பலப்படுத்த முடியும். அந்த விவாதங்களில் இருந்து, வரக்கூடிய சரியான விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலமே உழைப்பாளி வர்க்க கட்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும். உறுப்பினர் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அனைத்து மாநிலங்களில் உள்ள மாநிலக்குழுக்கள்- மாவட்டக் குழுக்கள் கிளைகள் இணைந்து செயல்பட்டு வெகுமக்கள் இயக்கத்தை பலப்படுத்துவதன் மூலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலம் பொருந்திய கட்சியாக மாற்ற முடியும், அந்த உறுதியோடு இந்த மாநாட்டில் இருந்து நாம் விடைபெற்றுச் செல்வோம். இவ்வாறு எம்.ஏ. பேபி பேசினார். மாநாட்டின் முடிவில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி நன்றி கூறினார். சர்வதேச கீதம் பாடப்பட்ட பின்னர் உணர்ச்சிகர முழக்கங்களுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.