விரிந்து பரந்த அணியை கட்டமைப்போம்; சூளும் நவீன பாசிசத்தை முறியடிப்போம்!
புரட்சிகர உணர்வுடன் துவங்கிய சிபிஎம் கேரள மாநாட்டில் பிரகாஷ் காரத் அழைப்பு
கொல்லம், மார்ச் 6 - கேரளத்தின் தொடர்ச்சியான புரட்சிகர பயணத்தின் ஒரு பகு தியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது கேரள மாநில மாநாடு வியாழனன்று கொல்லத்தில் துவங்கியது. வகுப்புவாத - முத லாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதி பத்திய ஆதிக்கத்திற்கு எதி ரான போராட்டத்தை வலுவாக முன்னெடுக்கும் வகையிலான திட்டங்களை வகுக்கும் நோக்கில் மூன்று நாட்களுக்கு நடைபெற வுள்ள இந்த மாநாட்டில் கேரளம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
புரட்சிகரப் பாடலுடன் வானில் உயர்ந்த செங்கொடி
கொல்லத்தில், தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் நகர் (சி கேசவன் நினைவு நகராட்சி டவுன் ஹால்) அரங்கில் வியாழ னன்று காலை மாநாட்டுத் துவக்க நிகழ்ச்சிகள் நடை பெற்றன. கலாச்சார நிகழ்ச்சி கள், அதையடுத்த, கட்சித் தொண்டர்களின் புரட்சிகர கொடிப் பாடலைத் தொடர்ந்து, கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னர் ஏ.கே. பாலன் செங்கொடி யை ஏற்றி வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத் (ஒருங்கிணைப்பாளர்), பினராயி விஜயன் (கேரள முதல்வர்), பிருந்தா காரத், சுபாஷினி அலி, பி.வி. ராகவலு, அசோக் தாவ்லே, எம்.ஏ. பேபி, ஏ. விஜயராகவன் உள்ளிட்ட மாநில மற்றும் அகில இந்தியத் தலைவர்கள் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சமூக- பொருளாதார பிரச்சனைகள் குறித்து விவாதம்
மாநாட்டில், கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் கேர ளம் மற்றும் நாட்டின் முக்கிய மான அரசியல்- சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனை களை, மாநாட்டில் விவாதிப்பார்கள். அதனடிப்படையில் கட்சியின் அடித்தள அமைப்பை வலுப் படுத்துவது; அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பான முடிவுகளை மாநாடு மேற் கொள்ள உள்ளது. இந்த மாநாட்டின் மூலம், தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முன்னணிப் படையாக தனது பங்கை மீண்டும் உறுதிப்படுத்து வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டுள்ளது. அதற் கேற்ப மாநாட்டில், மக்களின் கோரிக்கைகள் அரசியல் விவா தத்தின் மையமாக இருப்பதை உறுதி செய்துள்ளது. தொழி லாளி வர்க்கம், விவசாயி கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூ கங்களை அணிதிரட்டுவதற்கான உத்திகள் குறித்த விவாதங் களை முன்னெடுக்க உள்ளது. வலதுசாரி சக்திகளின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் பெருநிறுவன ஆதரவு கொண்ட கொள்கைகளை எதிர்கொள்வது குறித்தும் கவனம் செலுத்த உள்ளது. பாசிசம்- நவீன தாராளவாதத்தை எதிர்க்க அழைப்பு இம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய, கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிர காஷ் காரத், கேரளத்தை பெரு நிறுவன இந்துத்துவா கூட்ட ணிக்கு எதிரான எதிர்ப்பின் கோட்டையாகக் குறிப்பிட்டார். சமத்துவம், நீதி மற்றும் மதச்சார் பின்மைக்கான போராட்டத்தில் நாட்டிற்கு நம்பிக்கையின் ஒளி விளக்காக கேரளம் திகழ்வதாக தெரிவித்தார். நவ தாராளவாத முதலாளித்துவத்தின் சுரண்டும் சக்திகளை நேரடியாக எதிர்கொள்ளும் மாற்று வளர்ச்சி மாதிரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுதியான அர்ப்பணிப்பை பிரகாஷ் காரத் வலியுறுத்தினார். மதச்சார்பற்ற மதிப்புகளை நிலைநிறுத்து வதற்கும், தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் - பிற் போக்குத்தனமான, அதி காரத்துவ ஆட்சியை மேற் கொள்ள முயலும் இந்துத்துவா வகுப்புவாதத்தின் அதிகரித்து வரும் அலைகளை எதிர்க்கவும் கேரள இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார். பரந்துபட்ட முன்னணியை உருவாக்கவும் அறைகூவல் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை பிரகாஷ் காரத் கடுமையாக விமர்சித்தார். பாஜக அரசு சமூகப் பிரிவுகளை ஆழப்படுத்துவதாகவும், மக்களை மத ரீதியாக அணிதிரட்ட வகுப்புவாத வெறுப்பை தீவிரப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சியின் கீழ் வளர்ந்து வரும் பாசிச ஆபத்து குறித்து அவர் எச்சரித்தார். நாடு நவ-பாசிசத்தில் வீழ்வதைத் தடுக்க பரந்த, ஒன்றுபட்ட முன்னணியை உருவாக்க அழைப்பு விடுத்தார். தமது உரையின் போது, காங்கிரஸ் கேரளத் தலைவர் வி.டி. சதீஷனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரகாஷ் காரத், “பாஜகவுக்கு எதிரான எங்கள் போராட்ட த்தில் கேரளத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை யின் ஒப்புதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேவையில்லை” என்று பதிலடி தந்தார். பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுயேச்சையான நிலைப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார். முந்தைய மாநாட்டிலிருந்து தற்போது வரை ஆர்எஸ்எஸ் - பாஜக வன்முறைக்கு உயிரை ஈந்து தியாகம் செய்த 6 தோழர்களுக்கு பிரகாஷ் காரத்தும் தலைவர் களும் பிரதிநிதிகளும் செவ்வணக்கம் செலுத்தினர். இதனைத் தமது உரையில் சுட்டிக்காட்டிய பிரகாஷ் காரத், பாஜகவின் பாசிச சக்தி களுக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான எதிர்ப்பையும், புரட்சிகர சமூகத்தைப் படைப்பதற்கான தோழர்களின் அர்ப்பணிப்பு மிக்க உயிர்த் தியாகங்களையும் எடுத்துரைத்தார்.
அமெரிக்க மேலாதிக்க வீழ்ச்சி மற்றும் உலகளாவிய மாற்றங்கள்
உலக அரங்கில் மேலாதிக்க சக்திகளின் சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் பிரகாஷ் காரத் விவரித்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியையும், உலக சக்தியாக சீனாவின் எழுச்சியையும் எடுத்துக்காட்டினார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் எதிர்வினைகளை இந்த மாற்றத்திற்கான ஆதாரமாக அவர் சுட்டிக்காட்டி, மாறிவரும் உலக ஒழுங்கின் முன்னிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்று மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
கட்சியின் அடித்தள அமைப்பை வலுப்படுத்துதல்
வரவிருக்கும் தேர்தல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியை மேம்படுத்து வதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் கவனம் செலுத்தப்படும். இந்தத் தேர்தல் போராட்டங் களுக்கு சிபிஐ(எம்) தயாராகும் நிலையில், கட்சியின் அணுகுமுறையை அதிகரிப்பதிலும், ஒவ்வொரு நிலையிலும் சோசலிசம் மற்றும் சமூக நீதிக்கான போராட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பாகவும், கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், கட்சியின் சாதனைகள் மற்றும் சவால்கள் குறித்த அறிக்கையை மாநாட்டில் சமர்ப்பிக்கிறார். தொழிலாளி வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நலன்களை முன்னெடுப்பதில் கட்சியின் பங்கையும் அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
‘புதிய கேரளத்திற்கான புதிய பாதைகள்’ ஆவணம்
மாநாட்டு துவக்க நிகழ்வைத் தொடர்ந்து முதலமைச்சரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பினராயி விஜயன், “புதிய கேரளத்திற்கான புதிய பாதைகள்” என்ற கருப்பொருளில் விரிவான வளர்ச்சி ஆவணத்தை சமர்ப்பித்தார். பெருநிறுவன லாபங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலையான, சமத்துவ மான வளர்ச்சிக்கு அவர் அழைப்புவிடுத்தார். இம்மாநாடு மார்ச் 9 அன்று செஞ்சேனை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது. பெருநிறுவன - இந்துத்துவா கூட்டணிக்கு எதிரான போராட்ட முன்னணியில் கேரளம் தொடர்ந்து இருக்கும் நிலையில், சிபிஐ(எம்) மற்றும் எல்டிஎப் அரசாங்கம் தொடர்ந்து ஒரு புரட்சிகர பாதையை வரையறுக்கின்றன. கேரள மக்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர், கடினமான போராட்டங்களால் பெற்ற தங்களது சாதனைகளைப் பாதுகாக்கவும், சோசலிச இலக்கை நோக்கிய பயணத்தை முன்னெடுக்கவும் தயாராக உள்ளனர், முழு நாட்டிற்கும் நம்பிக்கை மற்றும் எதிர்ப்பின் ஒளிவிளக்காக திகழ்கின்றனர். - (தேசாபிமானி)