tamilnadu

img

இந்திய தாவரவியலில் புரட்சி செய்த விஞ்ஞானி : லியோ டி சூசா! - நந்தி்தா ஜெயராஜ்

இந்திய தாவரவியலில் புரட்சி செய்த விஞ்ஞானி : லியோ டி சூசா!

இந்தியத் தாவரவியல் துறையின் முன்னோடி களில் ஒருவரான டாக்டர் லியோ டி’சூசா (பாதிரியார் லியோ), கடந்த ஜனவரி 2026-இல் தனது 93-ஆவது வயதில் காலமானார். கத்தோ லிக்கத் திருச்சபையின் பாதிரியாராகவும், தலைசிறந்த அறிவியல் விஞ்ஞானியாகவும் திகழ்ந்த இவர், முந்திரி வளர்ப்பில் உலகமே வியக்கும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியவர். திசு வளர்ப்பின் முன்னோடி 1960-களில் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தில் உலகத்தரம் வாய்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து பயிற்சி பெற்றவர் டாக்டர் லியோ. 1970-இல் இந்தியா திரும்பியபோது, பொருத்தமான ஆராய்ச்சித் தலைப்பைத் தேர்ந்தெடுக்க அவர் சந்தித்தது தில்லியில் இருந்த எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களைத்தான். லியோவின் சொந்த ஊர் மங்களூரு என அறிந்ததும், சுவாமிநாதன் அவருக்கு ‘முந்திரி’ (Anacardium occidentale) செடியைப் பரிந்துரைத்தார். 16-ஆம் நூற்றாண்டில் பிரேசிலிலி ருந்து போர்த்துகீசியர்களால் கொண்டு வரப்பட்ட முந்திரி, 1980-களில் முக்கிய பணப்பயிராக மாறியிருந்தாலும், உற்பத்தி அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. முந்திரி ஆலைகளில் பணியாற்றிய ஏழைப் பெண்களின் சுரண்டப்பட்ட நிலையும், சிறு விவசாயிகளின் வறுமையும் லியோவின் மனதை ஆழமாகப் பாதித்தன. இதற்குத் தீர்வாக, ‘திசு வளர்ப்பு’ (Tissue Culture) மூலம் அதிக விளைச்சல் தரும் வீரிய ரகங்க ளை உருவாக்க அவர் முடிவெடுத்தார். தாவர உயிர்தொழில்நுட்பத் துறை (DBT) இந்தி யாவில் உருவாவதற்கு முன்பே, 1975-இல் பெங்களூருவின் செயின்ட் ஜோசப் கல்லூரி யில் நவீன ஆய்வகத்தை நிறுவினார். ஆய்வகத்திலிருந்து நிலத்திற்கு … முந்திரிச் செடியைத் திசு வளர்ப்பு முறையில் வளர்ப்பது உலக விஞ்ஞானிகளுக்கே சவாலாக இருந்தது. மாம்பழம் போன்ற தாவரங்களோடு ஒப்பிடும்போது, முந்திரி வளரும்போது ‘பீனாலிக்’ சேர்மங்களை வெளியிட்டு வளரும் செல்களை அழித்துவிடும். பத்து ஆண்டுகாலத் தீவிர முயற்சிக்குப் பிறகு, 1990-இல் லியோவின் முதல் முனைவர் பட்ட மாணவி ஐசி டி’சில்வா, உலகிலேயே முதன்முறையாகச் சோதனைக்குழாயில் வளர்த்த முந்திரிச் செடியைத் துல்லியமான மரபணுத் தன்மையோடு மண்ணில் மாற்றி நட்டுச் சாதனை படைத்தார். இக்கண்டுபிடிப்பு முந்திரித் தொழிலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அறிவியலும் மனிதநேயமும் லியோ டி’சூசா ஒரு சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார். 1986-இல் ஆண்கள் மட்டும் பயின்ற அலோய்சியஸ் கல்லூரியில் பெண்களையும் சேர்த்துச் சமத்துவத்திற்கு வித்திட்டார். ஆதரவற்ற சிறுவர்களுக்காக ‘Aloysians’ Boys’ Home’ என்ற இல்லத்தை நடத்தி, அவர்களைப் பேருந்து ஓட்டுநர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் மாற்றிக் காட்டியதில் அவர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடையில் அவர் எந்த முரண்பாட்டையும் காணவில்லை. “பாதிரியார் கிரிகோர் மெண்ட்டல் ஆலயத்திலேயே முடங்கிக் கிடந்திருந்தால் உலகம் மரபியல் அடிப்படைகளை இழந்திருக்கும்” என்று அவர் அடிக்கடி கூறுவார். ஜெர்மனி மாணவர்கள் அவரது பாதிரியார் அடையாளத்தை வியப்போடு பார்த்தபோது, ஒரு பாதிரியார் தேவாலயத்தில் மட்டுமல்லாது ஏழை மக்களுக்குப் பயன்தரும் அறிவியல் பணியையும் செய்ய வேண்டும் என்பதைத் தனது வாழ்நாள் முழுவதும் நிரூபித்தார். விஞ்ஞானி கிரிகோர் மெண்டல் போல, அறிவியலையும் மனிதநேயத்தையும் இணைத்த லியோ டி’சூசாவின் வாழ்க்கை, இந்திய அறிவியல் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும். தமிழில்: மோசஸ் பிரபு நன்றி: தி இந்து (ஆங்கிலம்) 10.2.26