சென்னை,டிச.26- அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு வன்கொடுமை நிகழ்ந்த வழக்கை மூடிமறைக்கவில்லை; வெளிப்படையாக விசாரணை நடைபெறுகிறது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளியை கைது செய்திருக்கிறோம். வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் திமுகவின் நிர்வாகி என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது. யார் வேண்டுமானாலும் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அமைச்சர்களை மக்கள் சந்திப்பதை தடுக்க முடியாது. கைதான ஞானசேகருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாலியல் வன்கொடுமை வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கோ, முதலமைச்சருக்கோ கிடையாது. வழக்கின் விசாரணை வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றவாளியை காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை; குற்றவாளிக்கு உரிய தண்டனை நிச்சயமாக பெற்றுத் தரப்படும். பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்க நினைத்தால் அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.