tamilnadu

img

சிபிஎம் சார்பில் சலவைத் தொழிலாளர் கேரள மாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

மதுரை, மே 14- மதுரை மாநகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து வீடுகளில் முடங்கியுள்ள சாமானிய மக்களுக்கு பகுதிகுழு வாரியாக நிவாரணம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. முனிச்சாலை பகுதிகுழு சார்பில் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள சலவைத் தொழிலாளர்களுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், பகுதிகுழு உறுப்பினர் ஜெ. லெனின், சிஐடியு சலவைத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ரா. பாலு, கட்சியின் பகுதிகுழு உறுப்பினர் பாண்டி ஆகியோர் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.  மீனாம்பாள்புரம் பகுதிகுழு சார்பில் அகிம்சாபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், பகுதிகுழு செயலாளர் ஏ. பாலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், ஆர். சசிகலா, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் கே. அலாவுதீன் மற்றும் பகுதிகுழு உறுப்பினர்கள் வழங்கினார்கள்.  புதூர் - அண்ணாநகர் பகுதிகுழு சார்பில், கேரள மாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்கள். இதில் கட்சியின் பகுதிகுழு செயலாளர் டி. குமரவேல், வாலிபர் சங்க செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.