கிடப்பில் உள்ள பல்வேறு பணிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி குடவாசல் சிபிஎம் மனு அளிப்பு
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி பகுதியில் கொள்ளிடம்-வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலை ஓரமாக குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட இடங்களில் கருங்கல் ஜல்லி கொண்டு சாலை அமைக்கப்படாமல், வெறுமனே குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட இடங்களில் எடுத்த மண்ணைக் கொண்டு மூடிய நிலையில் கடந்த ஆறு மாதமாக உள்ளது. இதனைக் கண்டித்தும், சீர்செய்யக் கோரியும், கடந்த அக்டோபர் மாதம் சிபிஎம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சில இடங்களில் பெயருக்கு ஜல்லி மட்டும் கொட்டி சீர் செய்யப்பட்டது. தற்போது வரை முறையான பணி தொடராமல் நிலுவையில் இருப்பதால் விபத்து ஏற்படும் அவல நிலையில் ஏற்பட்டு உள்ளது. பாதி சாய்ந்த டாரஸ் லாரி குடவாசல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை அருகே உள்ள இறைச்சி மார்க்கெட் முன்பாக, புதன்கிழமை காலை பெரம்பலூரில் இருந்து எம் சென்ட் லோடுடன் வந்த டாரஸ் லாரி, சாலை ஓரமாக நிறுத்த செல்லும்போது ஐல் ஜீவன் திட்டத்தில் குழாய் பதிப்புக்குப் பின் மண்ணைக் கொண்டு மூடிய இடத்தில், லோடுடன் டாரஸ் லாரி உள்வாங்கியது. நல்வாய்ப்பாக பாதி டயர் உள்வாங்கிய நிலையில் டாரஸ் லாரி ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் பெரும் விபத்து எதுவும் ஏற்படாமல் கவிழாமல் நின்றுவிட்டது. இதனை அடுத்து, குடவாசல் சிபிஎம் நகர செயலாளர் டி.ஜி.சேகர் தெரிவிக்கையில், குழாய் பதிப்பிற்காக சாலை ஓரமாக தோண்டப்பட்ட பள்ளத்தை சீர் செய்ய குடவாசல் பேரூராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் வாரியம் சாலையை சீர் செய்ய சுமார் ரூ.82 லட்சம் நிதி வழங்கப்பட்ட நிலையில், டெண்டர் விட்டும் தற்போது வரை சாலை சீர் செய்யாமல் உள்ளது. இதனால், இது மாதிரி விபத்து ஏற்படுகிறது. இந்த கோடைக் காலத்தைப் பயன்படுத்தி ஜல்ஜீவன் திட்டத்திற்காக பேரூராட்சி பகுதிகளில் குழாய் பதிப்பு முடிந்த இடங்களில் தோண்டப்பட்ட சாலை பகுதிகளை உடனடியாக தரமாக சீர் செய்ய வேண்டும். எரியாத மின்விளக்குகள் மேலும், குடவாசல் பேரூராட்சி பகுதியில் பல திட்டங்கள் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் பெற்ற நிலையில் வேலை நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. ஒப்புதல் கிடைத்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதேபோல், குடவாசல் அரசு மருத்துவமனை நுழைவாயிலுக்குச் செல்லும் பகுதியில், மின்கம்பங்கள் இருந்தும் முறையாக பராமரிப்பில்லாமல் அந்தப் பகுதி ஓகை மாரியம்மன் கோவில் இருந்து கொரடாச்சேரி சாலை அரசூர்-தண்டலை வரை மின்விளக்கு எரியாமல் உள்ளது. உடனடியாக மின்விளக்குகளை எரியச் செய்ய வேண்டும். கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் குடவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள சுண்ணாம்பு பாளையம் பகுதியில் செல்லும் வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதாலும், வாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதாலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே உடனடியாக வாய்க்காலில் கழிவு நீர் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டாத வகையில் உரிய நடவடிக்கை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு, பொதுப்பணித்துறையில் பேசி கோடை காலத்தை பயன்படுத்தி வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையம்,கடைவீதி பகுதிகளில் விபத்து ஏற்படும் வகையில் சுற்றித் திரியும் குதிரை மற்றும் நாய்களைப் பிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் குடவாசல் சிபிஎம் நகர குழு சார்பாக மனு அளித்திருப்பதாக, கட்சியின் நகர செயலாளர் டி.ஜி. சேகர் தெரிவித்தார்.