அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு
சென்னை: ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் புழல் மத்தியச் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து சுமார் மூன்று மணி நேரம் சோதனை செய்தனர். பெண் சிறைவாசிகளிடம், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை உரிய வகையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறி ந்தனர். பின்னர், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவிடம் இந்த ஆய்வு குறித்து கூறுகையில், சிறையின் அனைத்துப் பகுதிகளும் தூய்மையாக இருந்தது என்றும் முறையாக பராமரிக்கப்படு கிறது என்றும் கூறினர். மேலும், கைதிகளுக்கான உணவு தரமாகவும் சுவையாகவும் இருக்கிறது என்றும் கூறியதுடன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அதிமுக இரட்டை வேடம்
சென்னை: “தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவும் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது. ஆனால் செய்தியாளர்களை சந்தித்த டி. ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசு கிறார். பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றிபெறப் போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை” என்று அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை
சென்னை: சென்னை மண்ணடியில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திற்கு நான்கு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் வியாழக்கிழமை (மார்ச் 6) சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி பாதுகாப்புக்காக அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் வேகமாக பரவியதால், கட்சி அலுவலகம் முன்பு திரண்ட அந்த கட்சியினர் அதிகாரிகளைக் கண்டித்து கோஷமிட்டனர்.
11 ஆயிரம் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’
சென்னை: பிளஸ்-1 பொதுத்தேர்வு புதன்கிழமை தொடங்கியது. இந்த தேர்வை பள்ளி மாணவர்கள் 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 பேரும், பள்ளி மாணவியர் 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 பேரும், தனித்தேர்வர்கள் 4 ஆயிரத்து 755 பேரும், சிறைவாசி தேர்வர்களாக 137 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் எழுதி இருப்பதாக அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது. முதல் நாள் நடைபெற்ற தமிழ் தேர்வை 11 ஆயிரத்து 90 பள்ளி மாணவர்கள் எழுதவில்லை (ஆப்சென்ட்) என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
7 இடங்களில் சதமடித்த வெயில்
சென்னை: தமிழகத்தில் திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி உள்ளிட்ட 7 இடங்களில் ஒரே நாளில் வெயில் சதம் அடித்தது. இதில் அதிகபட்சமாக திருப்பத்தூரில், 102 டிகிரி வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 101, சேலம் மற்றும் கரூர் பரமத்தியில் 100 டிகிரி வெப்ப நிலை பதிவானது.
ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை: பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 14 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: விசாரணைக்கு சென்ற காவலர்களைத் தாக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் பாது காவலர்கள் அமல்ராஜ், சுபாஷ் ஆகியோர் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திரு ந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.
தேவைக்கு அதிகமாக அதிகாரம்
சென்னை: புதிய வருமான வரிச் சட்டத்தில் வரி செலுத்துவோரின் வர்த்தக கணக்குகள், ஆன்லைன் வங்கிக் கணக்குகள், இணைய முதலீட்டு கணக்குகள் உள்ளிட்ட அனைத்திலும் வருமான வரி அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனையிடும் அதிகாரம் வழங்கப் பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் தேவைக்கு அதிகமான இந்த அதிகாரத்தை விலக்கிவிட்டு, சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.