tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பிற்கான கருத்தரங்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கிவரும், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் சார்பாக வேலைவாய்ப்பு திறன்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை தலைமை ஏற்று பேசினார். வணிக நிர்வாகவியல் தலைவர் முனைவர் மு.அன்பழகன் வரவேற்றுப் பேசினார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி வணிக நிர்வாகவியல் உதவி பேராசிரியர் முனைவர் ரஜினிகாந்த் வேலைவாய்ப்பு திறன்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் அனைத்துத் துறை தலைவர்கள், இருபால் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை வணிக நிர்வாகவியல் மூன்றாம் ஆண்டு மாணவி செந்தமிழ் செல்வி தொகுத்து வழங்கினார். மூன்றாம் ஆண்டு மாணவி காயத்திரி நன்றி கூறினார்.

நூறுநாள் வாசிப்பு சேலஞ்சிங் பயிற்சி  நிறைவு

பாபநாசத்தை அடுத்த கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100 நாள் வாசிப்பு சேலஞ்சிங் பயிற்சி நிறைவு நாள் நடைபெற்றது.  வட்டாரக் கல்வி அலுவலர் கார்த்திகேயினி தலைமை வகித்தார். இதில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தமிழ், ஆங்கில வாசிப்புத் திறன், கணித அடிப்படைத் திறன் செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் பல்வேறு மின்னட்டைகள் மூலம் சோதித்து அறியப்பட்டன.  இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேந்திரநாத், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மஞ்சுளா உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.