tamilnadu

img

அறிவியல் கதிர்

உயிர் ரோபோக்கள் 

சுரங்கங்களிலோ கட்டடங்களின் அடியிலோ சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்ற கருவண்டுகளை(beetles) பயன்படுத்தும் புதிய முறையை ஆஸ்திரேலிய மற்றும் சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஸைபார்க் (cyborg) தொழில்நுட்பம் என்றழைக்கப்படுகிறது. வண்டுகளின் மேல் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப் மூலம் அதன் உணர்விழைகளுக்கு மின் சமிக்கைகள் அனுப்பப்படுகின்றன. வண்டு செல்ல வேண்டிய வெவ்வேறு வழிகள் இதன் மூலம் உணர்த்தப்படுகின்றன.  இந்த வண்டுகள் மிகவும் சிறியவை மற்றும் சாதுரியமானவை என்பதால் ரோபோக்கள் செல்ல முடியாத இடுக்குகளிலும் செல்கின்றன. இவற்றின் உணர்விழைகளை தூண்டும்போது அவை திரும்பவோ, வேகத்தை குறைக்கவோ, பின்னால் நகரவோ செய்கின்றன. இரண்டு இறக்கைகளையம் தூண்டும்போது வேகம் எடுக்கவும் முன்பக்கம் நகரவும் செய்கின்றன; ஒரு இறக்கையை மட்டும் தூண்டும்போது பக்கவாட்டில் நகர்கின்றன. கிடை மட்டத்திலிருந்து செங்குத்தாக ஏறவும் செய்கின்றன. வண்டுகளை பயன்படுத்துவதால் ரோபோக்களுக்கு தேவைப்படும் பல்வேறு இயந்திர பாகங்களை செய்ய வேண்டியதில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பரிணாமத்தில் வண்டுகளுக்கு அவை இயற்கையாகவே தோன்றியுள்ளன.  இந்த ஆய்வாளர்கள் வண்டுகளின் உடல்நலத்தையும் பராமரித்து அற வழிகளையும் பின்பற்றுகிறார்களாம். இது அட்வான்ஸ் சயின்ஸ் எனும் இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது.

உங்கள் படுக்கை சுத்தமாக இருக்கிறதா

நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு படுக்கையில் கழிகிறது. தூக்கம் என்பது வெறும் களைப்பை போக்குவது மட்டுமல்ல; அது நமது மூளை, ஒழுங்கு முறையில் வேலை செய்வதற்கும் உடலின் மொத்த நலத்திற்கும் அவசியமான ஒன்று. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். ஆனால் நாம் தூங்கும் சூழலும் முக்கியமானதே. மொறமொறப்பான விரிப்புகள், மென்மையான தலையணைகள், சுத்தமான போர்வைகள் போன்றவை நமக்கு நல்ல உணர்வை தருவதோடு நல்ல ஓய்விற்கும் அனுசரணையாக உள்ளன. சரி எவ்வளவு நாளுக்கு ஒரு முறை நாம் நம் படுக்கை விரிப்புகளை துவைக்க வேண்டும்?  அதற்கு முன்னதாக நமது படுக்கையில் ஒவ்வொரு இரவும் என்ன நேர்கிறது என்பதை தெரிந்து கொண்டால் துவைப்பது என்பது சுத்தத்திற்காக மட்டுமல்ல என்று புரியும். நாம் தூங்கும்போது பல்லாயிரக்கணக்கான சரும செல்களை உதிர்க்கிறோம்; படுப்பதற்கு முன்பு குளித்தாலும் வியர்வை சுரப்பிகளிலிருந்து எண்ணெய் வெளியேறுகிறது. குளித்தபின் வெளியேறும் வியர்வை சுத்தமானதாக, நாற்றமில்லாததாக இருந்தாலும் பேக்டீரியாக்கள் அவற்றை நாற்றமுள்ளதாக மாற்றி விடுகின்றன. அதனால்தான் நாம் தூங்கி எழுந்திருக்கும்போது உடல் நாற்றத்தை உணர்கிறோம். நாம் புரளும்போது நமது சருமத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான பேக்டீரியாக்கள், பூஞ்சைகள் நமது விரிப்புகள், தலையணைகள், போர்வைகள் ஆகியவற்றிற்குச் செல்கின்றன.  பிரச்சனை பேக்டீரியாக்கள் மட்டுமல்ல; பகல்பொழுதில் நமது உடலிலும் தலை மயிர்களிலும் தூசு, மகரந்தம், ஒவ்வாமைப் பொருட்கள் ஆகியவை படிகின்றன. இவையும் படுக்கையில் சேர்கின்றன. இவற்றை சுவாசிப்பதால் ஒவ்வாமை ஏற்படலாம்; படுக்கையறைக் காற்று தரம் குறையலாம். நமது தலையணைகளில் காணப்படும் சிலவகை பூஞ்சைகள் தீவிரமான நுரையீரல் தொற்றுக்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இது பாதிக்கும். வளர்ப்புப் பிராணிகளுடன் தூங்குபவர்களுக்கு அவைகளிலிருந்து உதிரும் மயிர், பொடுகு, அழுக்கு போன்றவைகளால் நுண்கிருமிகள் அதிகரிக்கும்.  சாதாரணமாக விரிப்புகளையும் தலையணை உறைகளையும் வாரம் ஒரு முறை துவைக்க வேண்டும். உடல்நலம் இல்லாமலிருந்தால், மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை துவைக்க வேண்டும். 60டிகிரி சி அல்லது அதற்கு மேல் வெப்பத்தில் துவைத்தால் பேக்டீரியாக்களும் தூசிப் பூச்சிகளும் அழியும். இன்னும் அதிகத் தூய்மை தேவைப்பட்டால், இயந்திர உலர்த்தல் மற்றும் இஸ்திரி செய்யலாம். மெத்தைகளை வாரம் ஒரு முறை ‘வேக்குவம் கிளினிங்’ செய்ய வேண்டும். ஏழு வருடங்களுக்கு ஒரு முறை மெத்தைகளை மாற்றி விடவும். போர்வைகளை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை 60டிகிரி சி அல்லது அதிக வெப்பத்தில் துவைக்கவும்.  தூக்கம் நமது இதய நலம் முதற்கொண்டு மனத்தெளிவு வரை தீவிரத் தாக்கம் செலுத்துவதாக ஆய்வுகள் தொடர்ந்து சுட்டுவதால், தூய்மையான படுக்கைச் சூழல் நமது உடல்நலத்திற்கு சிறிய ஆனால் சக்தி வாய்ந்த முதலீடாகும். இது லெயிஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியர் பிரிம்ரோஸ் பிரீஸ்டோன் அவர்களின் பதிவு (சயின்ஸ் அலர்ட்)

மக்காத்தன்மை வேதிப்பொருள்!

பிஎப்ஏஎஸ்(PFAS) எனப்படும் வேதிப்பொருட்கள் மக்காத தன்மையுடையவை. அதாவது நீண்ட காலம் அழியாதிருக்கும். அழகு சாதனப் பொருட்கள் முதல் குடி தண்ணீர், உணவு பொதிகள் வரை இவை கலந்திருக்கின்றன. இவை சுற்றுச் சூழலுக்கு கெடுதல் செய்வதோடு நம் உடை நலத்திற்கும் கேடு விளைவிக்கின்றன. சிறுநீரகக் கோளாறுகளுக்கும் இவற்றிற்கும் தொடர்பு உள்ளன. நமது குடலிலுள்ள சில பேக்டீரியாக்கள் இவற்றை உட்கொள்கின்றன என்று ஒரு பன்னாட்டு ஆய்வில் தெரிய வந்துள்ளது. எலிகளில் செய்யப்பட்ட சோதனைகளில் ஒன்பது வகை பேக்டீரியாக்கள் அவற்றின் குடலில் செலுத்தப்பட்டன. அவை விரைவாக பிஎப்எஸ் வேதிப்பொருட்களை உட்கொள்வதும் அவை மலம் மூலமாக வெளியேற்றப்படுவதும் காணப்பட்டது. வேதிப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்போது பேக்டீரியாக்கள் கடுமையாகப் போராடி அவற்றை உட்கொண்டன.  இவற்றை அழிக்க இதுவரை வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த ஆய்வு அவற்றை வெளியேற்றும் வழிகளுக்கான வாய்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த ஆய்வு நேச்சர் மைக்ரோ பயாலஜி எனும் இதழில் வெளிவந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது.