மயிலாடுதுறையிலிருந்து தொடங்கிய சத்யாவின் வெற்றிப் பயணம்
காவிரி வளம் சூழ்ந்த மயிலாடுதுறை மாவட்டத்தின் முடிகண்டநல்லூர் கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுமியின் கைகளில் கூடைப்பந்து ஒன்று வந்து சேர்ந்த போது, அது வெறும் விளையாட்டுப் பொருளாக இல்லை. அது அவளது வாழ்க்கையின் திசையையே மாற்றிய திருப்பு முனையாக அமைந்தது. மே 25, 2004 அன்று இவ்வுலகில் அடியெடுத்து வைத்த எஸ்.சத்யா என்ற அந்த சிறுமி, இன்று இந்திய தேசிய கூடைப்பந்து அணியில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். தியாகமும் கனவின் தொடக்கமும் ஒவ்வொரு வெற்றிகரமான விளையாட்டு வீரரின் பின்னாலும் ஒரு துணிச்சலான குடும்பம் இருக்கிறது என்பது இவரது வாழ்க்கையில் நிஜமானது. 2012ஆம் ஆண்டில் குடும்ப தலைவரை இழந்த பின்னர், தலைவி மஞ்சுளாவின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. அவர், திருப்பூரின் பனியன் தொழிற்சாலைகளில் கடும் உழைப்பில் ஈடுபட்டார். அவரது கைகள் நூல்களை நெய்து கொண்டிருந்தன. ஆனால் அவரது இதயம் மகள்களின் கனவுகளை நெய்து கொண்டிருந்தது. வறுமை அவர்களைச் சோர்வடையச் செய்யவில்லை, மாறாக வலுவாக்கியது. உழைப்பின் மகத்துவத்தையும் அர்ப்பணிப்பின் அவசியத்தையும் கற்றுத்தந்தது. “தந்தை இல்லாத நிலையிலும் இருவரையும் வளர்த்தது ஒரு தாயின் வெற்றிகரமான போராட்டத்தின் உச்சமாகும். வீட்டில் தவறிப் போகும் சமையல் நேரத்தைக் காட்டிலும் மதிப்புமிக்கது என்று உணர்ந்த தியாகம்தான் சத்யாவின் வெற்றியின் முதல் படியாக அமைந்தது. சிறு வயதிலிருந்தே கூடைப்பந்து மீது அசாதாரணமான ஈர்ப்பு கொண்டிருந்த சத்யா, விளையாட்டை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல் ஒரு கலையாகவும் விஞ்ஞானமாகவும் அணுகினார். பந்தின் ஒவ்வொரு துள்ளலும், கூடையை நோக்கிய ஒவ்வொரு எறிதலும் அவருக்கு ஒரு பாடமாக இருந்தது. மாநில அளவில் பங்கேற்றபோது, தமிழகத்தின் பெருமையாக விளங்கினார். வெற்றிகள் அவரை உயர்த்தின, தோல்விகள் அவரை வலிமைப்படுத்தின. சிறகு விரிக்கும் பயணம் 2021ஆம் ஆண்டு, சத்யாவுக்கு பொன்னான காலம் என்றே சொல்லலாம். ஜோர்டானில் நடந்த ஆசியக் கோப்பை இந்திய அணியில் தமிழகத்திலிருந்து மூன்று பேர் பங்கேற்றனர். இவர்களில் சகோதரிகளான புஷ்பா, சத்யா இருவரும் மயிலாடுதுறை ராஜீவ் காந்தி சிறப்பு விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இந்த பயிற்சி மையம் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள் பயிற்சி மையமும் இதுதான். இதையும் வாரணாசிக்கு மாற்றம் செய்தது ஒன்றிய பாஜக அரசு. சு.வெங்கடேசன் எம்.பி., தலையீட்டால் பாஜக அரசு கைவிட்டது தனிக் கதை. இந்த சகோதரிகளின் வெற்றி வெறும் தனிப்பட்ட சாதனையல்ல, தமிழக விளையாட்டுத் துறை வளர்ச்சியின் சாட்சியம். இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து மைதானத்தில் நின்றபோது, அது அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும், சொந்த கிராமத்திற்கும், மாநிலத்திற்கும் கிடைத்த பெருமையாக இருந்தது. 2023ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்ஷோ நகரில் நடந்த 19ஆவது ஆசிய விளையாட்டில், முன்கள வீராங்கனையான சத்யா இந்தியாவை கவுரவித்தார். மிகச்சிறந்த வீரர்களுடன் போட்டியிட்டு, வெவ்வேறு விளையாட்டு பாணிகளை எதிர்கொண்டு தனது திறமையையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார். இந்திய மூவர்ணக் கொடி பறந்த அந்த விளையாட்டு அரங்கில், சத்யாவின் இதயத்தில் தமிழகத்தின் பெருமையும் பறந்தது. நேபாளத்தின் அழகிய நகரமான போக்ராவில், இமயமலை தனது பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் அந்த மண்ணில் நடந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் சத்யா தங்கப் பதக்கத்தை வென்று தனது வாழ்க்கையில் மறக்க முடியாத அத்தியாயத்தை எழுதினார். இது உழைப்பின் பலன், எண்ணற்ற தியாகங்களின் பரிசு, குடும்பத்தின் கனவுகளின் நனவாக்கம். மேடையில் நின்று இந்திய தேசிய கீதத்தை கேட்டபோது, சத்யாவின் கண்களில் மகிழ்ச்சி நீரும், இதயத்தில் பெருமையும் பொங்கின. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய சவால், விளையாட்டுக்குப் பிந்தைய வாழ்க்கை பாதுகாப்பு. ஆனால் தமிழக அரசு, விளையாட்டு வீரர்களின் இந்த கவலையை நீக்கி உறுதியான எதிர்காலத்தை வழங்கும் முன்னோடியாக செயல்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையின் கீழ், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தில் மார்க்கெட்டிங் நிர்வாகியாக சத்யாவுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் வேலை வாய்ப்பு அல்ல, அது அரசின் அக்கறையின் வெளிப்பாடு, விளையாட்டு வீரர்களின் மதிப்பின் அங்கீகாரம். பெண் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவதில் தயக்கம் காட்டும் பெற்றோர்களுக்கு, சத்யாவின் வெற்றி பதிலாக அமைகிறது. அவர் இதுவரை சாதித்தது வெறும் ஆரம்பம் மட்டுமே. இன்னும் பல உச்சங்கள் காத்திருக்கின்றன. அவரது கனவுகள் வளர்கின்றன, தமிழகத்தின் பெருமை உயர்கிறது.