நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க அறிவுறுத்தல்
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை மழையில் நனையாத வகையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு. அருணா அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், செயல்பட்டுவரும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, மாவட்ட ஆட்சியர் மு. அருணா புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, மழையில் நனையாத வகையில் பாதுகாப்பாக திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதையும், நெல்மணியின் ஈரப்பதத் தன்மை அதிகரிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும், நெல் மூட்டைகளை பாதுகாப்பாக சேமிப்புக் கிடங்கிற்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை, மழையில் நனையாத வகையில் பாதுகாப்பாக வைத்திட சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர்கள்(வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, ரகமத் நிஷாபேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.