பாக். பகுதியில் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல்!
பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் உட்பட 90 பேர் வரை பலி?
புதுதில்லி, மே 7 - ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் புதன்கிழமை அதிகாலை துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதில், 80 முதல் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர், உதவியாளர்கள் 4 பேர் கொல்லப் பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் 4 காவலர்களை கொன்ற பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற சியால் கோட்டில் உள்ள சர்ஜல் முகாம், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையிடம், மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்தியா முழுவதும் 250- க்கும் மேற்பட்ட இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது. முகாம்கள் தாக்கி அழிப்பு! ஆனால், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், புதன்கிழமை (மே 7) அதிகாலை 1:44 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பவல்பூர், முரிட்கே, சர்ஜால், சியால்கோட் குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத்தில் 2 இடங்கள் என மொத்தம் 9 முகாம்களை குறிவைத்து இந்தியாவின் முப்படைகள் துல்லிய தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம், “சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய ராணுவம் ‘ஆப ரேஷன் சிந்தூர்’ எனும் மிஷனை முன்னெடுத்தது. இதன்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் மீது பயங்கரவாதத் தாக்குதலை தொடுக்கத் திட்டம் தீட்டிய தீவிரவாத முகாம்களின் மீது தாக்கு தல் நடத்தி உள்ளோம்.
பாக். ராணுவ நிலைகள் மீது தாக்குதல் இல்லை!
மொத்தமாக 9 இடங்களைக் குறிவைத்து தாக்கி உள்ளோம். எங்களின் (இந்திய) ராணு வம் தெளிவாகத் திட்டமிட்டு குறிவைத்து இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தின் முகாம்கள் எதையும் நாங்கள் தாக்கவில்லை. மேற்கொண்டு பதற்றத்தை அதிகரிக்காத வகையில்தான் இந்தத் தாக்கு தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பஹல்காமில் தீவிரவாதிகள் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி 25 இந்தி யர்களையும் ஒரு நேபாள நாட்டவரையும் சுட்டுக் கொன்றதற்கான எதிர்வினைதான் இந்த ஆப ரேஷன் ‘சிந்தூர்’ தாக்குதல். பஹல்காம் தாக்குத லில் ஈடுபட்டவர்கள் அதற்கான பலனை அனு பவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக் கிறோம். ஆபரேஷன் சிந்தூர் பற்றி பின்னர் விரிவாக கூறுகிறோம்,” என தெரிவித்திருந்தது.
வெளியுறவுத்துறை செயலாளர் பேட்டி
அதன்படி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விமானப்படைக் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ‘ஆப ரேஷன் சிந்தூர்’ குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் நாட்டு மக்களுக்கு அதிகாரப் பூர்வமாக விளக்கம் அளித்தனர். இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறும்போது, “காஷ்மீரின் பஹல் காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல் மிகவும் கொடூரமானது. அப்பாவி மக்கள் மீது கொடூரமான முறையில் துப்பாக்கி சூடு நடத்தப் பட்டது. 26 அப்பாவி மக்கள், குடும்ப உறுப்பினர் கள் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் தொடர்பு விசாரணையில் நிரூபணம்
பஹல்காம் தாக்குதலுக்கு, ‘தி ரெசிஸ்ட ன்ஸ் பிரண்ட்’ என்ற அமைப்பு பொறுப்பேற் றது. இந்தக் குழு ‘லஷ்கர்-இ தொய்பா’வுடன் தொடர்புடையது. இந்தத் தாக்குலில் ஈடுபட்ட வர்கள் பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பில் இருந்தது விசாரணையில் தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள், அதன் பின்னணியில் இருப்போர் என்று அந்த அமைப்பில் உள்ள அனைவரின் தெளிவான உருவப்படங்களை உளவுத்துறை மூலம் உருவாக்கியுள்ளோம். இது பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதலுடன் ஒத்துப் போகிறது. அத்துடன், இந்தியா மீது மேலும் சில பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த திட்ட மிட்டிருந்ததும் உளவுத்துறை மூலம் தெரிய வந்தது. ஜம்மு - காஷ்மீரின் அமைதி, சமூக முன் னேற்றத்தை சீர்குலைப்பது தான் அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது.
தற்காக்கும் உரிமையை பயன்படுத்தினோம்
எனவே, பயங்கரவாதிகளின் இந்த தாக்கு தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில், இந்தியா தன்னை தற்காத்துக் கொள்ள இருக்கும் உரிமை யைப் பயன்படுத்தியது. தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பை அகற்றும் வகையில் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரி வித்தார். “இந்த விவகாரத்தில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு எல்லாம் அழுத்தம் கொடுக்கும் பாகிஸ்தான், ஆனால், 15 நாட்களுக்கு மேலாகியும், தங்கள் மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும் மிஸ்ரி குறிப்பிட்டார்.
துல்லியத் தாக்குதல் வீடியோவும் வெளியீடு
விமானப்படை கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், “பஹல்காம் பயங்கரவாத தாக்கு தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. 9 பயங்கர வாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு முழுமை யாக அழிக்கப்பட்டன” என்றார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிர மிப்பு காஷ்மீரில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த ப்பட்டது என்பது குறித்தும் வீடியோவையும் கர்னல் சோபியா வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோர் முரிட்கே (Muridke) என்ற இடத்தில் பயிற்சி பெற்றனர். அந்த இடத்தையும் தாக்கி அழித்துள் ளோம். பாகிஸ்தானின் ராணுவ சொத்துக்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை. இந்திய ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தானில் பொது மக்கள் யாரும் கொல்லப்படவில்லை. தீவிர வாதிகளின் நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம்” இவ்வாறு கர்னல் சோபியா குரேஷி கூறினார்.
மசூத் அசாரின் குடும்பத்தினர் உட்பட 80 பேர் வரை பலி?
இந்திய ராணுவத்தின், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில், 75 முதல் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படும் நிலையில், மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர், உதவியாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் பஹாவல்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மசூத் அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர், அவரது மருமகன், மகள், மருமகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப் பட்டதாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001-இல் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2008-இல் நடந்த மும்பை தாக்குதல் உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர் தான் மசூத் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.