இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்! கையெழுத்திட்டது இந்தியா
லண்டன், ஜூலை 24 - இங்கிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில், இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும், பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸும் கையெழுத்திட்டனர். இங்கிலாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இடையிலான சந்திப்பிற்கு பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் 90 சதவிகிதம் வர்த்தகத் தடைகள் நீக்கப்படும். தடையற்ற வர்த்தகம் அமலான பிறகு இரு தரப்பு வர்த்தகம் ஆண்டுக்கு 2.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஜவுளி, ஜெனரிக் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள், தோல் பொருட்கள் மற்றும் விவசாய மற்றும் ரசாயனப் பொருட்கள் உட்பட இங்கிலாந்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள் மீது 99 சதவிகிதம் வரை வரிகள் நீக்கப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், இங்கிலாந்து நிறுவனங்கள் விஸ்கி, கார்கள் மற்றும் பிற பொருட்களை இந்தியா விற்கு எளிமையாக ஏற்றுமதி செய்யலாம் என தெரிவித்துள்ளனர். வர்த்தகம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில், இங்கிலாந்துடன் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.