வருமான வரித்துறைப் பணி
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு(97 பணியிடங்கள்) வந்திருக்கிறது. ஆண், பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். தடகளம் உள்ளிட்ட 16 பிரிவுகளில் சாதனைகள்(மார்ச் 4, 2024க்குப் பிறகு) புரிந்தவர்கள் இதற்குத் தகுதியானவர்களாவர். 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். விளையாட்டுத்தகுதி, சாதனைகள், உடற்தகுதி மற்றும் மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு இருக்கும். இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுவிபரங்களை www.incometaxmumbai.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜனவரி 31, 2026 ஆகும்
செவிலியர் உதவியாளர் - 999 பணியிடங்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் செவிலியர் உதவியாளர்(கிரேடு II) பணிக்கான காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 999 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் இந்தப் பணியிட நிரப்பும் பணியை மேற்கொள்கிறது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, செவிலியர் உதவியாளருக்கான பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்துத் தேர்வுகள் எதுவும் கிடையாது. தகுதி அடிப்படையில் தேர்வு இருக்கும் என்று அறிவிக்கை கூறுகிறது. தேர்ச்சி பெற்றபிறகு அடிப்படை ஊதியம் ரூ.15,700 ஆக இருக்கும். ஆண்டாண்டுக்கு கூடும் வகையில் அமைக்கப்பட்டு ரூ.58,100 என்ற அளவு வரையில் இருக்கும். பதவி உயர்வு, ஊதிய மாற்றம் ஆகியவற்றால் இந்த ஊதிய அளவிலும் மாற்றங்கள் இருக்கும். விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக மட்டுமே நிரப்ப முடியும். வேறு எந்தவகையில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். விண்ணப்பிக்கும் பட்டியலின, பட்டியலின(அருந்ததியர்), பழங்குடியின, ஆதரவற்ற விதவை, மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு ரூ.300 தேர்வுக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மற்ற தேர்வர்கள் ரூ.600 செலுத்த வேண்டும். வயது, கல்வித்தகுதிகள், பொதுவான பிற தகவல்கள், தகுதி நிபந்தனைகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பெற மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள முழுமையான அறிவிக்கையை http://www.mrb.tv.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பத்தை நிரப்பி ஒப்படைப்பதற்கான கடைசித்தேதி பிப்ரவரி 8, 2026 ஆகும்.
ராணுவத்தில் பெண் அதிகாரிகள்
இந்தியத் தரைப்படையில்(Indian Army) அதிகாரிகளாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு பெண்களுக்கு வந்துள்ளது. விண்ணப்பிக்கும் பெண்களுக்குத் திருமணம் ஆகியிருக்கக்கூடாது. இந்தப் பணியிட நிரப்புதலில் தேர்ச்சி பெறக்கூடிய வர்கள் லெப்டினென்ட் என்ற ரேங்கில் பணியமர்த்தப்படு வார்கள். மொத்தம் 31 இடங்கள் நிரப்பப்படுகின்றன. இவற்றில் சிவில்(7), கணினி அறிவியல்(4), மின்துறை (3), மின்னணு(6), மெக்கானிக்கல்(9), பொறியியல் அல்லாத(2) பிரிவுகளில் இடங்கள் உள்ளன. வயது வரம்பு - 20 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது அக்டோபர் 1, 2026 ஆம் தேதிப்படி கணக்கிடப்படும். கல்வித்தகுதி - பல்வேறு பாடப்பிரிவுகளில் (முழுப்பட்டியல் அறிவிக்கையில் தரப்பட்டிருக்கிறது) பி.இ. அல்லது பி.டெக். இளநிலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது இறுதி ஆண்டில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை - Services Selection Board நடத்தும் நேர்முகத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்து வத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். உடற்தகுதியைப் பொறுத்தவரையில், 2.4 கி.மீ. தூரத்தை 13 நிமிடங்கள் 30 விநாடிக்குள் கடக்க வேண்டும். இது உள்ளிட்ட மேலும் பல சோதனைகள் இருக்கும். பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் அக்டோபர் மாதத்தில் பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள். கல்வித்தகுதிக்கான பாடப்பிரிவுகள், உடற்தகுதிக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட வற்றிற்கான முழு விபரங்களை www.joinindian army.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி பிப்ரவரி 4, 2026 ஆகும்.
அணுசக்திக் கழகத்தில் வேலை
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்திய அணுசக்திக் கழகத்தில்(NPCIL) 114 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. பல்வேறு வகையான வேலைகளுக்கு ஆள் எடுக்கிறார்கள். பணிக்கேற்ற கல்வித்தகுதிகள், வயது வரம்பு, அனுபவம் உள்ளிட்டவை தேவைப்படுகின்றன. வயது வரம்பில் அரசு விதிமுறைகளின்படி தளர்ச்சி இருக்கும். பட்டியலின, பழங்குடி, மாற்றுத்திறனாளி, பெண் தேர்வர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது. தேர்வு முறை உள்ளிட்ட முழு விபரங்களுக்கு www.npcilcareers.co.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி பிப்ரவரி 4, 2026 ஆகும்.