திருப்பூரில் மாபெரும் செந்தொண்டர் அணிவகுப்பு
எம்.ஏ.பேபி பங்கேற்பு
திருப்பூர், நவ.23- ரஷ்யப் புரட்சியின் 108 ஆவது ஆண்டு நினைவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் செந்தொண்டர் பேரணி ஞாயிறன்று திருப்பூரில் எழுச்சியுடன் நடைபெற்றது. 1917 நவம்பர் 7 ஆம் தேதி புரட்சியாளர் தோழர் லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி, தொழிலாளர்கள் நலன், பெண்ணுரிமை, அறிவியல் வளர்ச்சி, திட்டமிடப்பட்ட பொருளாதாரம், உலக சமாதானம் என பல்வேறு தளங்களில் உல கிற்கு முன் மாதிரிகளை உருவாக்கித் தந்தது. இத்துடன் உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளி மக்களுக்கு உந்து சக்தியை தந்து, பல நாடுகளில் புரட்சி நடக்க காரண கர்த்தாவாக இருந்தது. மேலும் உலகில் முதன் முதலில் தொழிலாளி வர்க்கப் புரட்சி மூலம் சோசலிச சமுதாயத்தை படைத்துக் காட்டிய ரஷ்யப் புரட்சியின் நினைவு தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக 108 ஆவது ஆண்டு நவம்பர் புரட்சி தின செந்தொண்டர் பேரணி திருப்பூரில் ஞாயிறன்று எழுச்சியு டன் நடைபெற்றது. முன்னதாக, அவிநாசி சாலையில் உள்ள தியாகி பழனிச்சாமி நினைவகத்தின் முன்பு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி செங்கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கான கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அணிவகுத்து பேரணியாக சென்றனர். கட்சியின் மாவட்டக்குழு அலுவல கத்தில் இருந்து தொடங்கிய பேரணி, பி.என். சாலை வழியாக, புஷ்பா தியேட்டர், ரயில் மேம்பாலம், குமரன் நினைவகம், ஜெய்வாபாய் பள்ளி, மிலிட்டரி காலனி வழியாக சென்று ராயபுரத்தில் நிறை வடைந்தது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் தௌ.சம்சீர் அகமது மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
