நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த நிதியமைச்சகம் முன்வர வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
தங்க நகை கடன் பெறுவதில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சாமானிய மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் "நகை கடனை புதுப்பிக்கும் வசதியை" நிறுத்திவிட்டன. "அனைத்து கடனாளிகளும் நகை கடனை முழுமையாக செலுத்திய பின்பு தான் மறு கடன் கொடுக்கப்படும்" என்று அனைத்து வங்கிகளும் முடிவெடுத்து விட்டன. இதன் காரணமாக அவசர தேவைக்கு நகை கடன் வாங்கும் எளிய மக்கள் கடும் துயரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். முழு கடனையும் அடைக்க வசதி இல்லாத பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்களின் நகைகள் மூழ்கி விட்டன.
இதனை ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கும், ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றதற்கு பிறகும் அவை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த வருடம் ஏப்ரல் ஒன்பதாம் தேதி தங்க நகை கடன் சம்பந்தமாக ரிசர்வ் வங்கியின் முழுமையான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இவை இந்த பிரச்சனையை தீர்க்கும் என்று எதிர்பார்த்த நிலையில் "குதிரை குப்புற தள்ளியதோடு நில்லாமல் குழி பறித்த கதையாக" அமைந்தன.
நகை கடனை புதுப்பிப்பது பற்றி இந்த வழிகாட்டும் நெறிமுறையில் எதுவும் இல்லை.
மாறாக
* சொந்த நகையா என்பதற்கு ஆதாரம்,
* ஏற்கனவே நடைமுறையில் இருந்த நகை கடனின் தொகை குறைப்பு
* நகை கடனை எதற்காக செலவிட போகிறார்கள் என்பதற்கான ஆதாரம்
* நகை கடனை திருப்பி செலுத்தும் தகுதி உள்ளதா என்பதை வங்கிகள் சரிபார்க்கும்
* வங்கிகள் மூலமாக விற்கப்படும் தங்க நாணயங்களுக்கு மட்டும்தான் கடன் கொடுக்க முடியும்
* நகை கடன் முழுமையாக அடைத்த பிறகும் நகைகளை திருப்பிக் கொடுக்க ஏழு நாட்கள் அவகாசம்
உள்ளிட்ட பல எதிர்மறையான நிபந்தனைகள் இடம்பெற்றன. இவற்றையெல்லாம் கைவிடக் கோரி நிதி அமைச்சருக்கு இந்த வருடம் மே மாதம் 25ஆம் தேதி நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தேன். ரிசர்வ் வங்கிக்கும் இது சம்பந்தமாக கடிதம் எழுதினேன்.
நிதி அமைச்சகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு எதிர்மறையான நிபந்தனைகளை கைவிடுமாறு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியது. அதன் காரணமாக, இந்த வருடம் ஜூன் மாதம் 6 ஆம் தேதி ரிசர்வ் வங்கி நகை கடன் சம்பந்தமாக வெளியிட்ட முழுமையான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் அனைத்து எதிர்மறையான அம்சங்களும் கைவிடப்பட்டன என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். கூடுதலாக நகை மதிப்பு உயரும் பட்சத்தில் டாப் அப் கடன் வழங்கும் திட்டமும் இந்த புதிய வழிகாட்டும் நெறிமுறைகளில் புதிதாக இடம் பெற்றது.
இந்த சாமான்ய மக்களுக்கு சாதகமான வழிகாட்டு நெறிமுறைகளை மிக விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும், அதிகபட்சமாக 2026 ஏப்ரல் முதல் தேதிக்கு முன்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டியது.
"நகை கடனை புதுப்பிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும்" என்ற ஒரு பாதகமான வழிகாட்டுதல் நெறிமுறையை உடனடியாக அமுலாக்கிய வங்கிகள், சாமானிய மக்களுக்கு சாதகமான வழிகாட்டல் கொள்கைகளை உடனடியாக அமல்படுத்த தயாராக இல்லை.
எனவே இந்த வருடம் ஆகஸ்ட் 8ஆம் தேதி நிதியமைச்சகத்திற்கு இது சம்பந்தமாக மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். அதில் "ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக அமலாக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக 2025 செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்னர் அமல் படுத்தப்பட வேண்டும்" என்று ஒரு கோரிக்கையை இந்த கடிதத்தில் எழுப்பினேன். ஆனால் என்னுடைய கடிதத்திற்கு பதில் கடிதமாக நிதி அமைச்சரிடம் இருந்து சென்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி பெறப்பட்ட கடிதம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த புதிய நெறிமுறைகளை அமலாக்குவதற்கான கடைசி தேதியை 2026 ஏப்ரல் ஒன்றிலிருந்து முன்கூட்டியே மாற்ற முடியாது. அவ்வாறு மாற்றப்பட்டால் அது "அமுலாக்க நடைமுறையில் பல சவால்களை உருவாக்கும் என்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும்" ரிசர்வ் வங்கி கூறுவதாக இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகை கடனை புதுப்பிக்கும் வசதியை ஒரே நாளில் நிறுத்த முடிந்த வங்கிகளால் அதை தொடர்வதற்கு எதற்கு 9 மாதங்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. அரசு வங்கிகள் சாமானிய மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு பதிலாக தனியார் வங்கிகளைப் போல பணக்காரர்களுக்கு சேவை செய்வதற்கான முன்னுரிமையை அளிக்கிறதோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. எனவே உடனடியாக அனைத்து அரசு வங்கிகளும், கிராம வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் இந்த புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை உடனடியாக அமல்படுத்தி சாமான்ய மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனை ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
