மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
மதுரை, பிப்.14- மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை சனிக்கிழமை உயர்ந்துள் ளது. கோவில்கள் மற்றும் வீடுகளில் பூக்களுக்கு தேவை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மல்லி - ரூ.2,000, பிச்சி - ரூ.1,500, முல்லை - ரூ. 1,800, செவ்வந்தி - ரூ.250, சம்பங்கி - ரூ.400, செண்டு மல்லி - ரூ.100, கனகாம்பரம் - ரூ.1,000, ரோஸ் - ரூ.300, பட்டன் ரோஸ் - ரூ.250, பன்னீர் ரோஸ் - ரூ.350, கோழிக் கொண்டை - ரூ.150, அரளி - ரூ.400, மரிக்கொழுந்து - ரூ.100, தாமரை (ஒன்றுக்கு) - ரூ.50 என்று கிலோவுக்கு சனிக்கிழமை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மலர் சந்தைக்கு சனிக்கிழமை சுமார் 1 டன் அள விற்கு பூக்கள் வரத்து இருந்ததாகவும், விற்பனை சுமா ராக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரியையொட்டி இந்த விலை உயர்வு ஞாயிறு, திங்களன்று தொடரும் என வியாபாரிகள் கணித்துள்ள னர்.
அக்காவை தாக்கி கொலை மிரட்டல்: தம்பி சிறையில் அடைப்பு
தேனி, பிப்.14- ஆண்டிபட்டி அருகே அடிக்கடி பணம் கேட்டு அக்கா மீது தாக்குதல் நடத்தி கொலைமிரட்டல் விடுத்ததாக தம்பியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் சரோஜா (50). இவரது தம்பி ராமச்சந்திரன். இவர் களது பாட்டனார் சொத்து சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விற்கப்பட்டதாக கூறப்படு கிறது. இதில் சரோஜாவிற்கும், சரோஜாவின் அக்கா முத்துலட்சுமிக்கும் தலா ரூ.3 லட்சம் என ராமச்சந்திரன் கொடுத்துவிட்டு தனக்குரிய பங்கை பெற்றுக் கொண்ட தோடு, மீதமுள்ள பணத்தை மது குடித்து செலவு செய்துள்ளார். இந்நிலையில், போதிய பணம் இல்லாததால் ராமச்சந்திரன் அடிக்கடி தனது அக்கா சரோஜா மற்றும் மற்றொரு அக்காவான முத்துலட்சுமி ஆகியோரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று சரோஜாவின் வீட்டிற்குச் சென்ற ராமச்சந்திரன், அங்கு அவதூறாகப் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட முத்துலட்சுமியை கையால் அடித்தும், சரோஜாவின் மகள் கார்த்திகாவின் முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளியும், கொலை மிரட்டல்விடுத்தார். இது குறித்து சரோஜா அளித்த புகாரின் பேரில், ஆண்டி பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமச் சந்திரனை கைது செய்தனர்.
பிளஸ்-2 மாணவி தற்கொலை
தேனி, பிப்.14- ஆண்டிபட்டி அருகே உள்ள ஆசாரிபட்டி, வேலா யுதபுரத்தைச் சேர்ந்தவர் பாலசிகாமணி. இவரது மனைவி பூபதி (39). இவர்களது மகள் மதுபாலா (17). இவர் ஆண்டி பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மதுபாலா கடந்த 11 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததாகவும், 12 ஆம் வகுப்பு கணித பாடத்தில் தேர்வில் எதிர்பார்த்ததை விடக் குறைவான மதிப்பெண்களே எடுத்துள்ளதாக கூறப்படு கிறது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுபாலா உடலில் தீ வைத்துக் கொண்டு தீ காயங்களுடன் இருந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி மதுபாலா, சிகிச்சை பல னின்றி வெள்ளியன்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து ராஜதானி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகை அணையில் 44 அடிக்கு கீழ் சரிந்த நீர்மட்டம் கோடையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
தேனி, பிப்.14- வைகை அணையின் நீர்மட்டம் 44 அடிக்கு கீழ் சரிந்து வருவதால், வரும் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதி களான வருசநாடு, வெள்ளி மலை, அரசரடி மற்றும் மூல வைகை ஆறு உள்ளிட்ட பகு திகளில் கடந்த சில வாரங்க ளாக போதிய மழை இல்லை. முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை இல்லை. இதன் கார ணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாகக் குறைந்து வருகிறது. சனிக் கிழமை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 346 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத் திற்காக கடந்த 6 நாட்களாக முறைப்பாசன அடிப்படை யில் தொடர்ந்து தண்ணீர் திற ந்து விடப்பட்டது. நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிக மாக இருந்ததால் அணை யின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்தது. இந்நிலையில், முறைப்பாசன கால அளவு முடிந்ததை அடுத்து முதல் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் சனியன்று 43.70 அடி யாக குறைந்துள்ளது. தற் போது குடிநீர் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 44 அடிக்கும் கீழ் சென்று விட்டதாலும், போதிய மழை இல்லாததாலும் வரும் கோடை மாதங்களில் மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அடுத்தகட்ட பாசனத்திற்கு போதிய நீர் இருக்குமா என்ற அச்சத்தில் விவசாயி கள் உள்ளன.
மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த ஒன்றிய அரசு முறியடித்து சாதனை படைத்த முதல்வர்: திருச்சி சிவா புகழாரம்
தேனி, பிப்.14- தேனி திமுக தெற்கு மாவட்டம், ஆண்டி பட்டி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஆண்டிபட்டி நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆண்டிபட்டி சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து வரவேற்பு உரையாற்றினர். கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்க ளவை குழுத் தலைவருமான திருச்சி சிவா சிறப்புரையாற்றினார். மேலும், தேனி தெற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் எம்எல்ஏவுமான ராமகிருஷ்ணன், மாநில தீர்மானக் குழு இணைச் செயலாளர் ஜெயக் குமார், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டியன், தலைமை செயற் குழு உறுப்பினர் ஆசையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா பேசிய தாவது: ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத் திட்டத்தை அறிவித்து, அந்த சுமையை அரசே ஏற்றுக்கொண்டது ஒரு புரட்சிகர மான திட்டம். வரி இல்லாத வருமானத்தை 41 சதவீதம் உயர்த்தி காட்டியவர் நமது முதலமைச்சர். மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட் டத்தை முடக்க ஒன்றிய பாஜக அரசு முயற் சித்தது. ஆனால், அதனை முறியடித்த முதலமைச்சர், பெண்கள் கையில் மொத்த மாக 5000 ரூபாய் சேரும் வகையில் செய்து சாதனை படைத்துள்ளார். வரும் சட்டப் பேரவை கூட்டத்தொடரிலும் மக்களுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. ஒரு குழந்தை ஏன் அழுகிறது என்பது தாய்க்குத்தான் தெரியும். அந்தத் தாயை விடவும் மேலாகச் சிந்தித்து, பள்ளிக் குழந் தைகளுக்குக் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் நம் முதலமைச்சர். சத்து ணவுத் திட்டத்தில் 5 நாட்களும் முட்டை வழங்க சொன்னவர் கலைஞர். நாங்கள் இந்தி மொழிக்கு எதிரிகள் அல்ல. எந்த மொழியும் ஒழிய வேண்டும் என்பது எங்களது நோக்கமும் இல்லை. மொழி கற்பது அவரவர் விருப்பம். ஆனால், ஒரு மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநி லங்களில் இருந்து இங்கு வந்து பணிபுரி பவர்கள் கூட, ‘தமிழ்நாடு எங்களுக்குப் பிடித்துள்ளது, இங்கு எல்லாம் கிடைக்கி றது’ எனப் பாராட்டும் அளவிற்குத் தமிழகம் திகழ்கிறது. ஆண்டிபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச்சாலைத் திட்டம், வரும் தேர்தல் அறிக்கையில் நிச்சயம் இடம்பெறும். அது விரைவில் நிறை வேற்றித் தரப்படும் என்றார்.
இலவச வீட்டுமனைப் பட்டா மோசடி: ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு
மதுரை, பிப்.14- அரசு புறம்போக்கு நிலத்தில் மோசடி யாக பெறப்பட்டதாக கூறப்படும் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் தொடர்பாக, ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கூடக்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் தாக்கல் செய்த மனு வில், போத்தநதி கிராமத்தில் வல்லாந்தை ஊராட்சி முன்னாள் உறுப்பினர் தனது பெயர், மனைவி மற்றும் தாயார் பெயரில் அரசு நிலத்தில் 7 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அதே கிராமத்தில் ஏற்கனவே சொந்த வீடுகள் இருந்தும் அதை மறைத்து பட்டா பெற்றதாகவும், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவ தாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற விசாரணை யில், பரமக்குடி வட்டாட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில் வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டதாக நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அரசு நிலத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருவதாக மனுதாரர் புகார் அளித்தார். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராம கிருஷ்ணன் அமர்வு, பட்டா ரத்து செய் யப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு களை உடனடியாக அகற்ற இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்ட அதி காரிகளும் நடவடிக்கை எடுத்து, அது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக் கல் செய்ய உத்தரவிட்டனர்.
சிவகங்கையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் நலச்சங்கம் தர்ணா
சிவகங்கை, பிப்.14- தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சிவகங்கை மாவட்டக் கிளை சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. மாநில மாநாட்டு அறைகூவலின்படி மாவட்டத் தலைநக ரங்களில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர் சுசிலாதேவி முன்னிலை வகித்தார். தொடக்க உரையை தமிழ்நாடு ஓய்வு பெற்ற மின் ஊழியர் நலச் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.விநாயக மூர்த்தி நிகழ்த்தினார். மாநில பொருளாளர் பா.கிருஷ்ணன் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி விளக்கி பேசினார். செல்லமுத்து, ம.சகாயம், ஜோசப் சேவியர், அ.தேவி, சண்முகவேல் முருகன், இ.ஆறுமுகம், மாவட்ட இணைச் செயலாளர்கள் பூ.கருப்பாயி, ரெங்கசாமி, பிச்சையப்பன், உ.பாஸ்கரன், ஜோசப் இருதயம், ஏ.ஆர்.கிருஷ்ணன், வடி வேலு மீனாட்சிசுந்தரம், வே. பெர்னாட், ஞான அற்புத உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மலைப் படிக்கட்டுகளில் தெரு நாய்களால் அச்சம் நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருவில்லிபுத்தூர், பிப்.14- திருவில்லிபுத்தூர் அருகிலுள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் செல்லும் மலைப் படிக்கட்டு களில் தெரு நாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிவதால் பக்தர் கள் அச்சமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட இந்த மலைக்கோவிலுக்கு தினமும் ஏராள மான பக்தர்கள் செல்கின்றனர். ஆனால் படிக்கட்டுகளில் நாய்கள், பக்தர்களை விரட்டும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது. சிலர் நாய்க்கடிக்கு உள்ளா னதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மலைப் பாதையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அகற்றவும், பக்தர்கள் பாதுகாப்பாக கோவிலுக்கு செல்ல தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற் கொள்ளுமாறு கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமநாதபுரத்தில் சிபிஎம் தேர்தல் பணிக்குழு அமைப்பு
இராமநாதபுரம், பிப்.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.ராஜா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் கே.பி.பெருமாள் பங்கேற்றார். மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, முதுகுளத்தூர், திரு வாடானை உள்ளிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக் கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணி குழுக்கள் அமைக்கப்பட்டன. இராமநாதபுரம் தொகுதிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா. கலையரசன், பரமக்குடி தொகுதிக்கு தி.ராஜா, திருவாடானை தொகுதிக்கு எம்.சிவாஜி, முது குளத்தூர் தொகுதிக்கு வி.மயில்வாகனன் மற்றும் 29 மாவட்டக் குழு உறுப்பினர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட இடைக்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முன்னணி ஊழி யர்களை உள்ளடக்கிய தேர்தல் பணி குழுக்கள் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் ரெ.குருவேல் தெரிவித்தார்.
10–11 ஆம் நூற்றாண்டு முருகன் கோவில் கண்டறியப்பட்டது
மானாமதுரை, பிப்.14- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்ட பழமையான முருகன் கோவில் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாக சிவகங்கை தொல்நடைக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகை ஆறு மணலில் 1980களில் கிடந்த கல் தூணை அப்பகுதி மக்கள் கரைக்குக் கொண்டு வந்தனர். அதில் கல்வெட்டு இருப்பதை அறிந்து தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் அதை வாசித்து ஆவ ணப்படுத்தினார். பின்னர் பல ஆண்டுகள் பராமரிப்பு இன்றி கிடந்த இத்தூண், 2025 ஆம் ஆண்டு சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டு தற்போது பாதுகாக்கப்படுகிறது. கல்வெட்டின் தகவல்கள் கல்வெட்டின் ஒரு பக்கத்தில் ராஜராஜ சோழன் ஆட்சியின் 14 ஆம் ஆண்டான கி.பி. 999 ஆம் ஆண்டு குறிப்பு உள்ளது. சேந்தன் செங்கோட னின் மனைவி பூதனம்பியம்மை தினமும் ஒரு அளவு நெய் வழங்கி விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்ததை பதிவு செய்கிறது. மற்றொரு பக்கத்தில் ஸ்ரீ வல்லப பாண்டியன் ஆட்சியின் 5 ஆம் ஆண்டான கி.பி. 1019 குறிப்பு உள்ளது. கருங்குடி நாட்டைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் கோன் மேநட்டூர் பூவன் நெய் விளக்கு வழங்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இரு கல்வெட்டுகளும் அருகிலிருந்த முருகன் கோவிலில் விளக்கு எரித்ததைக் குறிப்பதாகும். கல்வெட்டின் படி இப்பகுதி “திருக் குமர மங்கலம்” என அழைக்கப்பட்டதாகவும் தற்போது அது “குலாலர் தெரு” என வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒரே கல் தூணில் சோழர் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பழமையான சுப்பிரமணியர் கோவில் மானாமதுரை குலாலர் தெருவில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் உள்ளது. தற்போது காணப்படும் கட்டிடம் சமீபத்தியதாக இருப்பதால் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட கோவில் இதுவா என்ற சந்தேகம் எழுந்தது. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முருகன் சிலை தொடர் ஆய்வின் போது அருகிலுள்ள மாயாண்டி சுவாமிகள் மடத்தில் பழமையான முருகன் சிலை கண்டறியப்பட்டது. நான்கு கரங்களுடன், வஜ்ராயுதம் ஏந்திய போர்க் கடவுளாகவும், கிரீடம் மற்றும் அணிகலன்களுடன் காட்சி தரும் இந்த சிலை 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில், இவ்விடத்தில் நீண்டகாலமாக முருகன் கோவில் இருந்திருக்கலாம் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட “குமர மங்கலம்” என்பதே இன்றைய குலாலர் தெரு ஆக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆய்வில் சிவகங்கை தொல்நடைக் குழு இணைச் செயலா ளர் முத்துக்குமரன் உடனிருந்தார் என கா. காளிராசா தெரிவித்தார்.
மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கிற்கு புதிய வாழ்க்கை
திருவில்லிபுத்தூர், பிப்.14- மறுசுழற்சி செய்ய கடின மான மல்டி லேயர்டு பிளாஸ்டிக் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றும் சுற்றுச் சூழல் முயற்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிப்ஸ், ஸ்நாக்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருள் பாக்கெட்டு களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பல அடுக்குகளால் ஆனதால் வழக்கமான முறை யில் மறுசுழற்சி செய்ய முடி யாது. இதனால் இக்கழிவுகள் பெரும்பாலும் குப்பை மேடு களில் சேரவோ அல்லது எரிக் கப்படவோ செய்து சுற்றுச்சூழல் மாசுக்கும் காலநிலை மாற்றத் திற்கும் காரணமாகின்றன. இந்த பிரச்சனைக்கு மாற்று தீர்வாக, இந்த பிளா ஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு வலுவான பலகைகள் மற்றும் பயன்பாட்டு பொருட்களாக மாற்றப்படுகின்றன. இவ்வாறு குப்பையாக மாற வேண்டிய கழிவுகள் மீள்பயன்பாட்டுக்கு ரிய தயாரிப்புகளாக உரு வாக்கப்படுகின்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக பல்வேறு தயாரிப்பு கள் காட்சிப்படுத்தப்பட்டன. பள்ளி மாணவர்கள் பயன்படும் எழுதும் மேசைகள், பெஞ்சு கள், கூரை மற்றும் பிரிவு தகடு கள், புகைப்பட சட்டங்கள், செடி தொட்டிகள் மற்றும் மேசை தொட்டிகள், துணி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட தரை மேடுகள், பிளாஸ்டிக் எரிப்பைத் தவிர்ப்பதன் மூலம் கார்பன் உமிழ்வு குறைக்கப்படுவது டன், மரப் பொருட்களுக்கு மாற்றாக இத்தயாரிப்புகள் பயன்படுத்தப்படுவதால் வனச்சேதமும் குறைகிறது. “கழிவு ஒரு சுமை அல்ல; அது ஒரு வளம்” என்ற சுற்றுச்சுழல் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்த சுற்றுச்சூழல் நட்பு திட்டத்தை நகரத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவ னம் முன்னெடுத்து வரு கிறது. பள்ளிகள், அலுவல கங்கள் மற்றும் சமூக பயன் பாட்டிற்கான பொருட்களை தயாரித்து வழங்கும் இந்த நிறுவனம், பசுமை இயக்கத்தில் பொதுமக்களும் இணையு மாறு அழைப்பு விடுத்துள்ளது.