விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
சாத்தூர் அருகே உள்ளது அச்சங்குளம். இங்கு சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் சூரங்குடி, அன்பின் நகரம், மார்க்கநாதபுரம், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை தொழிலாளர்கள் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 1.20 மணியளவில் பட்டாசுகளுக்கு வேதிப் பொருட்களைக் கலக்கும் அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை வெடித்துச் சிதறியது.கண் இமைக்கும் நேரத்தில் தீ மற்ற அறைகளுக்கும் பரவியது. இதில் பத்து அறைகள் வரை சேதமானது. 14தொழிலாளர்கள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீக்காயமடைந்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் கருகியதால் அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை மாலை ஐந்து மணி வரை அடையாளம் காணமுடியவில்லை. பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கவேண்டும். காயத்திற்கு ஏற்ற வகையில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். விதிமுறைகளை மீறி பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிச்சாமி, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் சிகிச்சை செலவுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.