மகளின் விவாகரத்தையே விழாவாக மாற்றிய தந்தை
மகளின் அந்த தொலைபேசி அழைப்பில் தந்தை ஆபத்தை உணர்ந்தார்… அன்று தந்தை சொன்ன அந்த ஒரு பதில்தான், இன்று அந்த மகளை உயிரோடு வைத்திருக்கிறது! அப்பா இதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியல...ப்பா... குரல் தழுதழுக்க தன் அன்பு மகள் அந்த வார்த்தையை சொன்னபோது, இங்க பாரு சாமி. கல்யாணம் முடிஞ்சு அடுத்த வீட்டுக்கு போயிட்டா அந்த வீட்டு பழக்க வழக்கங்களை கத்துகிறது தான் முறை. கொஞ்சம் பொறுத்துக்க சாமி. எல்லாம் சரி ஆயிடும்... என்று வழக்கமான அறிவுரையைச் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக அவர் சொன்னார்: போதும். இனி நீ எங்க ஒரு நிமிஷம் கூட இருக்க வேண்டாம். உனக்குன்னு இங்க ஒரு வீடு இருக்கு. உன் அப்பன் நான் உயிரோட இருக்கேன். இது ஒரு சாதாரண பதில் இல்லங்க, மரணத்தோட விளிம்புல நின்னுட்டு இருக்குற ஒரு பொண்ணுக்கு, உன்னோட வாழ்க்கை முடிஞ்சிரல உனக்கு நான் இருக்கேன்னு மேல தூக்கிக்கிட்டு வரக்கூடிய வார்த்தை. நியூடெல்லி பாலம் விமான நிலையத்தில் (IGI Airport) பொறியாளராக வேலை செய்துவரும் உர்வி, கடந்த 8 ஆண்டுகளாக கணவர் வீட்டில் கொடுமைகளை அனுபவித்து வந்தார். வரதட்சணை என்ற பெயரில் அவள் சந்திக்காத அவமானங்கள் எதுவும் இல்லை. அப்படித்தான் அந்த இரவு அவள் தந்தையை அழைத்தாள். தந்தை சொன்ன அந்த வார்த்தை களால்தான், இன்று அவள் உயிரோடு இருக்கிறாள். நீதிமன்றம் அவளுக்கு விவாகரத்தை வழங்கியது. ஆனால் கதை அங்கே முடிந்துவிடவில்லை. விவாகரத்துக்குப் பிறகு மகள் வீட்டிற்கு திரும்பி வரும் நாள். பொதுவாக, இருளின் மறைவில், அண்டை வீட்டாருக்கு தெரியாமல் மகளை வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் பெற்றோர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பி.எஸ்.என்.எல் ஊழியரான அனில் குமார், இங்கேயும் வேறுபட்டவராக இருந்தார். மேளதாளங்கள் முழங்க, பாண்டு இசையுடன், மகளை வரவேற்க அவர் வந்தார். அயலவர்கள் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர் சத்தமாகச் சொன்னார்: “மகளை திருமணம் செய்து அனுப்பியபோது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியிருந்ததோ, அதே பெருமையுடன் இப்போது அவளை மீண்டும் ஏற்றுக்கொள்கிறேன். அவள் தலையை உயர்த்திக்கொண்டே இந்த வீட்டுக்குள் நுழைய வேண்டும்.” வரதட்சணைக் கொடுமைகளால் பல பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும்போது, நாம் அடிக்கடி கேட்கும் கேள்வி ஒன்றுதான்: “அவர்கள் தங்கள் சொந்த வீட்டுக்குத் திரும்பி வர முடியாதா?” திரும்பி வரலாம்… ஆனால், அவர்களை ஏற்றுக்கொள்ள அனில் குமார் போன்ற தந்தைகள் அங்கே இருக்க வேண்டும். “பொறுத்துக்கொள்” என்று அறிவுரை கூறுவதற்குப் பதிலாக, “திரும்பி வா” என்று சொல்ல பெற்றோருக்கு தைரியம் இருந்தால், ஒரு பெண்ணும் கணவர் வீட்டில் விசிறியில் தூக்கிட்டுத் தொங்கமாட்டாள். உயிரற்ற உடலாக மகள் திரும்பி வருவதற்குப் பதிலாக, “விவாகரத்துடன் இருந்தாலும் உயிரோடு இருப்பது” எவ்வளவு நல்லது அல்லவா!
