மாயனூர் கதவணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு
இழப்பீடு தொகை கேட்டு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
ரூ.27 கோடியே 80 லட்சம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் உறுதி
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மாயனூர் கதவணை திட்டத்திற்கு 2008 ஆம் ஆண்டு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்காமல், ஆண்டுக் கணக்கில் பழிவாங்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன், மாநிலத் துணைத் தலைவர் கே. முகமதுஅலி, கரூர் மாவட்ட தலைவர் கே.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், விதொச மாவட்டச் செயலாளர் பி.ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். ஹோச்சுமின், கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் ஜி. தர்மலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.பி. ராஜேந்திரன், பி. சங்கரநாராயணன், பி. வீரமலை, ஒன்றியச் செயலாளர் ஏ. நாகராஜ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சதீஷ் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விஜயராகவன், முருகேசன், தண்டபாணி கரிகாலன், சேகர், சுபாஷ், தண்டபாணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுமூக பேச்சு வார்த்தை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளுக்கு, கரூர் மாவட்ட நிர்வாகம் சுமூக பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)அலுவலர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், மாயனூர் கதவணைக்கு நிலம் கொடுத்து இழப்பீடு தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட 38 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை ரூபாய் 27 கோடியே 80 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, கரூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம், பிப்ரவரி 6 ஆம் தேதி பரிந்துரை செய்து, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அலுவலர் தெரிவித்தார். மேலும், இழப்பீடு தொகையை விரைந்து பெற்றுத் தருவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன், மாநில துணைத்தலைவர் கே. முகமதுஅலி, மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், விதொச மாவட்டச் செயலாளர் பி.ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, மாவட்டப் பொருளாளர் கே.சுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.