tamilnadu

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த 129 ஆம் ஆண்டு

தேனி, அக்.10- முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட 129 ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக, லோயர் கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முல்லையாற்றில் மலர்தூவி மரியாதையும் செலுத்தினர். 5 மாவட்டங்களில் நீராதாரமாக விளங்கி வரும் முல்லைப்பெரியாறு அணை இங்கிலாந்து  பொறியாளர் பென்னிகுக்கால் 1895 இல் கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டு (இந்திய நேரப்படி) அக்டோபர் 10, 1895 மாலை 6 மணிக்கு சென்னை மாகாண கவர்னர் வென்லாக் தேக்கடிக்கு வந்து, பெரியாறு அணை தண்ணீரை தமிழக பகுதிக்கு திறந்துவைத்தார். அன்றிலிருந்து இன்று வரை 129 ஆண்டுகளாக தலைமுறைகள் கடந்தும் தண்ணீர் கொடுத்து தமிழகத்தை காத்து வருகிறது பெரியாறு அணை. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நாளான அக்டோபர் 10 ஆம்தேதியை, தென் மாவட்டங்களிலுள்ள பொதுமக்களும், விவசாயிகளும் கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு வியாழனன்று விவசாயிகள் லோயர் கேம்ப் பென்னிகுக் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.