tamilnadu

அகில இந்திய மாநாடு 4

கோட்பாட்டின் முன்  கோரமான சிறைகளும் துவண்டன

1940ஆம் ஆண்டின் துவக்கத்தில், கம்யூனிஸ்டுகளின் யுத்த-எதிர்ப்புப் பிரச்சாரம் வலுத்துவரக் கண்ட ஆங்கிலேய அரசாங்கம் அவர்களை வேட்டையாடத் துவங்கியது. இளம் தலைவர் பி.ராமமூர்த்தி, வேப்பத்தூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். மோகன் குமாரமங்கலம், சி.எஸ்.சுப்பிரமணியம் போன்றோர் தலைமறைவானார்கள். ஏராளமான கம்யூனிஸ்டுகள் பாதுகாப்புச் சட்டப்படி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மத்தியக்குழு உறுப்பினர் பி.சுந்தரய்யா சென்னைக்கு வந்து, இரண்டு தலைமறைவு மையங்களை உருவாக்க முடிவெடுத்தார். சி.எஸ்.சுப்பிரமணியம் ஒரு துணிச்சலான செயலில் இறங்கினார் - வீட்டுக்காவலிலிருந்த ராமமூர்த்தியை நள்ளிரவில் சைக்கிளின் பின்புறம் ஏற்றி கும்பகோணம் வரை கொண்டுவந்து, அங்கிருந்து வாடகைக் காரில் சென்னைக்கு அழைத்து வந்தார். திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கே ராமமூர்த்தியை தங்கச் செய்தார். பெரம்பூரிலும் மற்றொரு மையம் அமைக்கப்பட்டது. சுந்தரய்யாவின் திட்டப்படி, பெரம்பூர் மையம் கட்சியின் செயற்குழு செயல்படும் இடமாகவும், தி.நகர் மையம் பிரசுரங்களைத் தயாரிக்கும் இடமாகவும் செயல்பட்டன. பி.ராமமூர்த்தி யோசனைப்படி, ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம், சுப்பிரமணிய சர்மா, சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகிய நான்கு பேர் கொண்ட செயற்குழு அமைக்கப்பட்டது. மோகன் குமாரமங்கலம் தலைமை மையத்தை நிர்வகித்தார்; மற்றவர்கள் மாவட்ட அமைப்பாளர்களாக பணியாற்றினர். ஒருகால் ஊனமுற்ற ராமமூர்த்திக்கு உதவியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்.உமாநாத் அழைக்கப்பட்டார். ராமமூர்த்தி எழுதிய தமிழ்ப் பிரசுரங்கள் சைக்ளோஸ்டைல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. பம்பாயிலிருந்த மத்திய மையத்திலிருந்தும் பிரசுரங்கள் வந்து சேர்ந்தன. இந்த ஆவணங்கள் மக்களை தட்டியெழுப்பின. ஆங்கிலேய அரசாங்கத்தின் காவல்துறை கம்யூனிஸ்டுகளின் தலைமறைவு வேலைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. சென்னையில் காகிதத் தாள்கள், அச்சு மை விற்கும் இடங்களைச் சுற்றி ரகசியப் போலீசை நிறுத்தி வைத்தது. கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற இடங்களிலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்றது. 1940 நவம்பரில் பத்திரிகைகளில் களைகட்டிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டது: “100 ரூபாய் இனாம் - தேடப்படும் கம்யூனிஸ்டுகளைப் பிடித்துத் தருபவர்களுக்கு!” ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், மோகன் குமாரமங்கலம், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோரின் வயது, உயரம், நிறம், உடல்வாகு, அடையாளங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டன. “இந்த நான்கு நபர்களையும் உபசரிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என முடிந்தது அந்த அறிக்கை. விரைவில், இரண்டு மையங்களும் பிடிபட்டன. பி.ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம், சி.எஸ்.சுப்பிரமணியம், ஆர்.உமாநாத், சுப்பிரமணிய சர்மா, அனுமந்தராவ், கேரளீயன் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டு, வரலாற்றுப் பிரசித்திபெற்ற “சென்னை சதி வழக்கு” தொடரப்பட்டது. 1940 டிசம்பரில் துவங்கிய விசாரணையில், 1929 மீரட் சதி வழக்கின் பாரம்பரியத்தைப் பின்பற்றி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தை கொள்கை முழக்கம் செய்யும் மேடையாக்கினர். பிரபல வழக்கறிஞர்கள் பாஷ்யம், ஜகன்னாததாஸ், பி.எஸ்.கைலாசம் போன்றோர் சுயவிருப்பத்துடன் அவர்களுக்காக வாதாடினர். வெளியில் தலைமறைவாகச் செயல்பட்டு வந்த கட்சி மையம் சிறையிலிருந்தவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து, அவர்களின் மனோபலத்தை உயர்த்தியது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் பி.ராமமூர்த்தி தலைமையில் இந்த வழக்கு நடத்தப்பட்டது. ராமமூர்த்தியின் உரை பல வாரங்கள் நீடித்தது: “நாங்கள் சதிகாரர்கள் அல்ல, சுதந்திரப் போராட்டக்காரர்கள். 40 கோடி இந்திய மக்களுடன் சேர்ந்து சதி செய்தோம் என்றால் ஒப்புக்கொள்கிறோம். எங்களைத் தூக்கிலிடலாம், ஆனால் போராட்டம் இதோடு நின்றுவிடாது.” தீர்ப்பில் ராமமூர்த்திக்கு 4 ஆண்டு, மோகனுக்கு 3.5 ஆண்டு, உமாநாத்துக்கு 2.5 ஆண்டு, மற்ற நால்வருக்கு 3.5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மோகன், சி.எஸ்.சுப்பிரமணியம் தவிர மற்ற ஐவருக்கும் ‘சி’ வகுப்பு அளிக்கப்பட்டு, அனைவரும் பெல்லாரி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகள், உரைகள் அனைத்தும் நாளிதழ்களில் வெளியாகி, தமிழகத்திலும், அதற்கு வெளியேயும் லட்சக்கணக்கான மக்களால், குறிப்பாக மாணவர்களால், இளைஞர்களால் ஆர்வத்துடன் படிக்கப்பட்டன. தீர்ப்பு வெளியானதும், சென்னை நகரமெங்கும் மக்களின் கோபம் கொந்தளித்தது. தொழிற்கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் “கம்யூனிஸ்ட் தலைவர்களை விடுதலை செய்” என்ற முழக்கம் எதிரொலித்தது. ஏழு தியாகிகளின் தரைமறைவு வாழ்க்கையும், நீதிமன்ற வாதங்களும் மக்களை விழிப்படையச் செய்து, எதிர்காலத்தில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு சாவு மணி அடித்தன.

றையிலும் சிந்தனையில் சுதந்திரம்

1949-ல் நெல்லை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட சதி வழக்கு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை. 97 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட இந்த வழக்கில், 92 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். “அரசமைப்பை கவிழ்க்க முயற்சித்தல்”, “ரயில் பாலங்களை தகர்க்க முயற்சித்தல்”, “தொழிலாளர்களை வேலைநிறுத்தத்திற்கு தூண்டுதல்”, “வெடிகுண்டுகள் வைத்திருத்தல்” போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது. விசாரணை 1951 ஆம் ஆண்டில் துவங்கி, சிறப்பு நீதிமன்றத்திலும், சிறப்பு செஷன்ஸ் நீதிமன்றத்திலும் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்தது. பாளை சண்முகம், என்.டி.வானமாமலை போன்ற தலைசிறந்த வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக போராடினர். அழகிரி தேவர், ஜேக்கப், சுப்பையா ரெட்டி, சுடலைமுத்து, டி.ஜி.சுப்ரமணியன், ஆர்.வி.அனந்த கிருஷ்ணன் போன்ற தலைவர்கள் அனைவரும் இதில் அடங்குவர். விசாரணையின் முடிவில், 78 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ப.மாணிக்கம், ஆர்.நல்லகண்ணு, ஆர்.வேலுச்சாமித் தேவர், வேலாயுதம், கே.பி.எஸ்.மணி, வி.அழகமுத்து, ஐ.மாயாண்டி பாரதி, ஆர்.கிருஷ்ண கோனார், எம்.பொன்னு ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மூவருக்கு 5 ஆண்டுகளும், ஒருவருக்கு 2 ஆண்டுகளும், மற்றொருவருக்கு 1 ஆண்டும் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் பாலதண்டாயுதம், மீனாட்சி நாதன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பயில்வான் அருணாசலத்திற்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. சிறையில் இருந்த ஐ.மாயாண்டி பாரதி ஜனசக்திக்கு எழுதிய கடிதம் நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது: “மக்களுக்கு இறுதி மூச்சுள்ள வரையும் தொண்டு புரிவதை நிறுத்தப் போவதில்லை, முன் வைத்த காலை பின் வைக்கப் போவதில்லை. தொழிலாளி வர்க்கப் பரம்பரைக்கு ஏற்ப கௌரவமாக நடந்து கொள்வோம்.” அவர் தனது தண்டனையை விவரிக்கையில், “எனக்கு 21 வருடம், வேலுச்சாமி தேவருக்கு 21 வருடம், நல்லகண்ணு 21 வருடம், கே.பி.எஸ்.மணிக்கு 40 வருடம், அழகமுத்து, வேலாயுதம் தலா 42 வருடம், பொன்னு 35 வருடம், கிருஷ்ணக் கோனார் 43 வருடம், பி.மாணிக்கம் 21 வருடம்” என குறிப்பிட்டார். “அரசியல் கைதிகளை விடுதலை செய், வழக்குகளை வாபஸ் வாங்கு” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் கிளர்ச்சிகள் எழுந்தன. சென்னையில் டி.நாகிரெட்டி, பி.ராமமூர்த்தி, ஜீவா தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இடைவிடாது குரல் எழுப்பினர். நெல்லை சதி வழக்கு நிதிக்காக தூத்துக்குடியில் “புதுமைத் தம்பதிகள்” என்ற நாடகம் நடத்தப்பட்டு, மணலி கந்தசாமி தலைமை வகித்தார். அப்போது அரசியலைப் பற்றி பேசக்கூடாது என்று ராஜாஜி 144 தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால் மக்கள் எழுச்சியின் விளைவாக, ராஜாஜி அரசாங்கம், ஆயுள் தண்டனை பெற்ற 9 பேரையும் விடுதலை செய்தது. ஆனால் சில தோழர்களுக்கு வேறு தண்டனைகள் இருந்ததால், அவர்கள் மேலும் சில ஆண்டுகள் சிறையிலிருக்க வேண்டியிருந்தது. வெடிகுண்டு வைத்திருந்ததற்காக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையை அனுபவித்து 1956 டிசம்பர் 13 அன்று, ஆர்.நல்லகண்ணு விடுதலை செய்யப்பட்டார். 14ஆம் தேதி ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் பெரும் வரவேற்பும், திறந்த காரில் ஊர்வலமும் நடைபெற்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல - போராட்டமே  வாழ்க்கையான  தியாகிகள்

தஞ்சை மாவட்டத்தின் வரலாறு ஏராளமான சதி வழக்குகளால் நிறைந்தது. மாயவரம், நாணலூர், நெடும்பலம், ஆம்பலாப்பட்டு, வடக்காலத்தூர், திருப்பூந்துருத்தி, செம்பாலூர், கோவில்பத்து என அடுக்கடுக்காய் வழக்குகள். ஒரு மாவட்டத்தில் இத்தனை சதி வழக்குகள் என்பதே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செல்வாக்கை காட்டும். நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். வெங்கடேச சோழகர், களப்பால் கோவிந்தசாமி, பி.எஸ்.தனுஷ்கோடி, கே.ஆர்.ஞானசம்பந்தம், பண்டரிநாதன், மணலி எம்.ஆர்.வைத்தியலிங்கம், டி.எஸ்.ராஜகோபால், எஸ்.சண்முகசுந்தரம், காளிமுத்து, மகாலிங்கம், மாயூரம் கோவிந்தராஜன், சம்பா ராமசாமி, நல்லகண்ணு போன்ற தலைவர்கள் உட்பட திருச்சி சிறை கம்யூனிஸ்ட்களால் நிரம்பியது. பி.எஸ்.தனுஷ்கோடி ஒருவர் மீதே 57 வழக்குகள் பதிவாகியிருந்தன - ஒரு கம்யூனிஸ்ட் தலைவருக்கு ஆட்சியாளர்கள் கொடுத்த “கௌரவம்”! திரு எம்.பி.கண்ணுசாமி, ஏ.வேதையன், மாரிமுத்து, பன்னீர்செல்வம், வீராச்சாமி, மானைக்கால் வடுகு, அஞ்சான், அய்யாக்கண்ணு, வேலுநாடார், குமாரகிருஷ்ணன், சுந்தரராஜன், உத்திராபதி, மரவக்காட்டு சக்கூர், அணைக்காட்டு சிங்கம் போன்றோர் உட்பட 173 பேர் ரிமாண்ட் கைதிகளாக இருந்தனர். இவர்களோடு திருச்சி ஞானம், கே.பி.எஸ்.கோன், மதுரை எஸ்.குருசாமி, முகவை பெருமாள்ராஜா, ஆசிர்வாதம், விழுப்புரம் பானு, சௌந்திரராஜன், எம்.வி.சுந்தரம் போன்றோரும், கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலனும் சிறிது காலம் திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். உறவினர்களைச் சந்திக்க அனுமதி, பத்திரிகை, வீட்டிலிருந்து வேட்டி-துணி பெறுவது போன்ற அடிப்படை உரிமைகளுக்காக திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. பி.எஸ்.தனுஷ்கோடி, வேல்நாடார், காளிமுத்து, குமாரகிருஷ்ணன், வேதையன் ஆகியோர் 21 நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பில் இருந்தனர். ஆத்திரங்கொண்ட சிறை நிர்வாகம் உண்ணாவிரதம் இருந்தவர்களை நிர்வாணமாக்கி அடித்தது. காயத்தின் மேல் டிஞ்சரைத் தடவி அடித்தும் அவர்களின் உறுதியைக் குலைக்க முடியவில்லை. 22வது நாளன்று பல கோரிக்கைகளை சிறை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. 1950இல் தஞ்சை மாவட்டத்தின் சதி வழக்குகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டு “தஞ்சை மாவட்ட சதி வழக்காக” மாற்றப்பட்டது. ஏ.எம்.கோபு, சம்பா ராமசாமி, நல்லகண்ணு, அப்துல் காதர், எஸ்.ராஜாபாதர், துரைசாமி, பாரதிமோகன், கோவிந்தராஜன், ஞானசம்பந்தம் ஆகிய ஒன்பது பேர் மீது குற்றப்பத்திரிகை சுமத்தப்பட்டது. மாயவரம் நீதிமன்றத்தில் ஓராண்டு நடந்த வழக்கில் அவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முதலில் திருச்சி, பின்னர் சேலம் மத்திய சிறைகளில் தண்டனையை அனுபவித்தனர். நாணலூர் சதி வழக்கில் ஏ.நடராஜன், காசிநாதன், குட்டார், பாப்பு, நாவு, சுப்புடு, லட்சுமணன், சிங்காரு ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சேலம் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆம்பலாப்பட்டு முருகையன் மீது 1950இல் செம்பாலூர் வழக்கு தொடரப்பட்டது. மூன்றாண்டுகள் தலைமறைவாக இருந்த பின், 1953இல் நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. இத்தனை சதி வழக்குகளும் தண்டனைகளும் தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வேரை அறுக்கவில்லை. மாறாக, சிறையே ஒரு பாடசாலையாக மாறி, மக்களுக்காகப் போராடும் தியாகிகளின் வரலாறாக எழுதப்பட்டது. கைதுகளும் சித்திரவதைகளும் அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. அவர்களின் உறுதியும் தியாகமும் இன்றளவும் தஞ்சை மண்ணில் மக்களால் நினைவுகூரப்படுகிறது. 

சுதந்திர இந்தியாவிலும் சுடுகாடான சிறைக்கூடங்கள்

விடுதலை பெற்ற இந்தியாவில், பிரிட்டிஷாரின் அடக்குமுறைகள் காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்தன. 1949ஆம் ஆண்டு புனையப்பட்ட இராமநாதபுரம் சதி வழக்கில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிக்கவைக்கப்பட்டனர். முதலில் 73 பேர் மீது குற்றச்சாட்டு; இதில் விருதுநகர் எஸ்.உலகநாதன், ஆர்.எச்.நாதன் ஆகியோர் தலைமறைவாக இருந்ததால் கைது செய்யப்படவில்லை. காவல்துறையின் கொடூர சித்திரவதையில் சேத்தூர் நடராஜன், வத்றாப் கோவிந்தன், கூத்தக்குடி வேலு, நாச்சியார்புரம் இராமநாதன் ஆகியோர் உயிரிழந்தனர். வத்திராயிருப்பு, ராசபாளையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் நடந்த 15 சம்பவங்களை இணைத்து, எதிலும் சம்பந்தமில்லாத பலரையும் சேர்த்து இந்த வழக்கு உருவாக்கப்பட்டது. இந்த வழக்கில் ஒரு அபத்தமான சம்பவம் - விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் எம்.எஸ்.நாடார் “தாளும் மையும் தந்து அனுப்புக” என எழுதிய குறிப்பை, “கம்யூனிஸ்ட் கட்சி அச்சகத்திற்கு உதவி” என முத்திரை குத்தினர். உண்மையில் அவர் கல்லூரி ஸ்டோர் பொறுப்பாளரிடம் எழுதிய சாதாரண குறிப்பேயாகும். “இதில் என்ன சதி?” என்ற நீதிபதியின் கேள்விக்கு, கள்ளம் கபடமற்ற பேராசிரியர் தன் கையெழுத்தை மீண்டும் எழுதிக் காட்டினார். 2 ஆண்டு அநியாயமாக சிறையில் வாடிய அவர் உடனே விடுதலை செய்யப்பட்டார். 59 பேரில் வத்ராப் பகுதியைச் சேர்ந்த சிவனாண்டி, குப்பையாண்டி, நடராஜன், வெங்கடசாமி, ராமசாமி உட்பட 40 பேரும், ராஜபாளையத்தைச் சேர்ந்த அலக்ராஜா, அழகப்ப ராஜா, கே.கே.பெருமாள், ஆசீர்வாதம் உள்ளிட்டோரும், எம்.வி.சுந்தரம், கே.சண்முகம், சங்கரநாராயணன் போன்ற தலைவர்களும் அடங்குவர். “சிறைக் கட்டிடத்தில் நீதி விசாரணை செய்வது நீதியையும், நீதிபதியையும் சிறைப்படுத்துவதாகும்” என பேராசிரியர் சங்கரநாராயணன் தைரியமாக எதிர்த்தார். உடனே, சிறைக்கு வெளியே நீதிமன்றம் அமைக்கப்பட்டது. வத்ராப் பகுதியில் விவசாயிகள் சுத்தவாரப் போராட்டம், மிராசுதார்களின் குளங்களில் மீன்பிடிப்பு, ராஜபாளையத்தில் கொள்ளை, அருப்புக்கோட்டையில் தடைசெய்யப்பட்ட ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு - இப்படி பல குற்றச்சாட்டுகள். போலீஸ் அதிகாரிகள், மிராசுதாரர்களின் விசுவாசிகள் பொய்சாட்சி கூறினர். மதுரை வழக்கறிஞர்கள் வி.ஆச்சாலு அய்யங்கார், கே.சேதுராமன், கே.கண்ணன் ஆகியோர் இலவசமாக வாதாடினர். ஓராண்டு விசாரணைக்குப் பின், எம்.வி.சுந்தரம், எம்.கிருஷ்ணன், திருப்பத்தூர் சண்முகம், கான்சாபுரம் ராமச்சந்திரன் ஆகிய நால்வருக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை; வத்ராப் சிவனாண்டி, ராஜபாளையம் அழகப்பராஜா உள்ளிட்ட 9 பேருக்கு ஓராண்டு தண்டனை; 36 பேர் விடுதலை. ஆனால், விசாரணைக் கைதிகளாக மூன்றரை ஆண்டுகள் சிறையில் வாடியது கொடுமையிலும் கொடுமை. மோகன் குமாரமங்கலம் மேல்முறையீட்டில் வாதாடி, 1954 மார்ச் 2ல் தண்டனைக் குறைப்பு வாங்கினார். பலர் விடுதலையானாலும், சுந்தரம், கிருஷ்ணன், சண்முகம், ராமச்சந்திரன் தொடர்ந்து சிறையில் இருந்தனர். தொழிலாளர், விவசாயி நலனுக்காக வெளியில் போராடிய கம்யூனிஸ்டுகள், சிறைக்குள்ளேயும் அரசியல் கைதிகளின் உரிமைக்காக போராடினர். அவர்களின் போராட்டத்தால் தனிச் சமையல், பத்திரிகைகள், புத்தகங்கள் கிடைத்தன. சிறைச்சாலையின் 9ஆம் நம்பர் பிளாக்கில் அனைவரும் ஒன்றாக இருப்பதற்கு அனுமதி கிடைத்தது. சிறைச்சாலை கல்விச்சாலையாக மாறியது.