tamilnadu

மார்ச் 23-இல் மாநிலம் முழுவதும் உண்ணாநிலைப் போராட்டம்! ஜாக்டோ - ஜியோ நடத்துகிறது

மார்ச் 23-இல் மாநிலம் முழுவதும் உண்ணாநிலைப் 
போராட்டம்! ஜாக்டோ - ஜியோ நடத்துகிறது

“தமிழக அரசின் பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானதால் மார்ச் 23 அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும்” என்று ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் வெள்ளியன்று (மார்ச் 14) சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ஜாக்டோ - ஜியோ 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. எங்களது போராட்டக்களத்திற்கு வந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-ஆம் மாநில மாநாட்டிலும், 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டிலும் ‘உங்களுக்கு அளித்த வாக்குறுதியை மறக்கவில்லை, மறுக்கவில்லை. மறைக்கவில்லை’ என மீண்டும் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். கடந்த பிப். 25 அன்று மறியல் நடத்த இருந்த நேரத்தில் 4 அமைச்சர்கள் குழு ஜாக்டோ - ஜியோவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, 4 வார கால அவகாசம் கேட்டது. இதனால் மறியல், தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. இதையடுத்து மார்ச் 13 அன்று ஜாக்டோ - ஜியோவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த முதலமைச்சர், பழைய ஓய்வூதியத் திட்ட அமலாக்கம், சரண் விடுப்பு வழங்குவது, தொகுப்பூதிய ஊதியர்களை காலமுறை ஊதியத்தில் வரைமுறைப்படுத்துவது, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களைவது மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி நம்பிக்கை அளித்தார். ஆனால், நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எனவே, மார்ச் 23 அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியர் சங்கம் ஆதரவு

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன், பொதுச்செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. இந்தாண்டு நிதிநிலை அறிக்கை முழுமையானது என்பதால் எதிர்பார்ப்பு மிகையாக இருந்தது. ஆனால், முதலமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது. நம்பிக் கெடுவது ஒருவகை. நம்பிக்கை துரோகம் மற்றொரு வகை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்ற கூச்ச உணர்வு அரசுக்கு இல்லை. எனவே, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்போம். மேலும், ஏப். 22 அன்று சென்னையில் தர்ணாவை வலுவாக நடத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.