tamilnadu

img

திருச்சி முக்கிய செய்திகள்

காசநோய்  விழிப்புணர்வு பேரணி

ருச்சி மாவட்ட காசநோய் கழகம் மற்றும் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் இணைந்து காசநோய் விழிப்புணர்வு பேரணியை சனிக்கிழமை நடத்தின. விழிப்புணர்வு பேரணியை, திருச்சி மாவட்ட காச நோய் துணை இயக்குனர் டாக்டர் சாவித்திரி கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்சி அம்மா மண்டபத்தில் துவங்கிய இப்பேரணி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் நிறைவு பெற்றது. காசநோயை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

விபத்து இழப்பீடு வழங்காததால்  திருச்சியில்  அரசுப் பேருந்து ஜப்தி

திருச்சி காஜாமலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் கருப்பையா(59). இவர் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 18.4.2016 அன்று திருப்பூர் பல்லடம் சாலையில் தெற்கு பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, எதிரே வந்த அரசுப்பேருந்து அவர் மீது மோதியதில் உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட கூடுதல் சிறப்பு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் 20.9.2023 இல் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ரூ.12,52,400 கருப்பையா குடும்பத்தாருக்கு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி நந்தினி தீர்ப்பளித்தார். ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர் தரப்பில் 2024 ஆம் ஆண்டு நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.  மனு குறித்து விசாரித்த நீதிபதி நந்தினி, இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான ஒரு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப்பேருந்து ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்து வந்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

விபத்தில் சிக்கிய பள்ளி வேன் ஆசிரியர், உதவியாளர் உட்பட 11 குழந்தைகள் காயம்

உடையார்பாளையம் அருகே, தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் ஆசிரியர், உதவியாளர் மற்றும் 11 பள்ளிக் குழந்தைகள்  காயமடைந்தனர். உடையார்பாளையம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று, அப்பள்ளியில் பயிலும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வெள்ளியன்று திருச்சிக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டது. வேனை தா.பழூர் கிராமத்தை சேர்ந்த சூர்யா(38) ஓட்டியுள்ளார். வேன் மணகெதி சுங்கச்சாவடி வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சுங்கச்சாவடி கட்டிடத்தில் மோதியது. இதில் ஆசிரியர் முருகானந்தம், வேன் உதவியாளர் சரளா(36) மற்றும் பள்ளி குழந்தைகள் 11 பேர் லேசான காயமடைந்தனர். இதையடுத்து, அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து, உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.