மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, பச்சைப்பயிறு, உளுந்து, எள் உள்ளிட்ட பயிர்களை வேளாண்மை அதிகாரிகள் நேரில் கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அல்லது நிவாரணம் வழங்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். திருவாரூர் மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த பருத்தி, எள், பச்சைப்பயிறு, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் மழையில் மிகுந்த சேதம் அடைந்து, விவசாயிகள் பெரும் இழப்பில் உள்ளனர். இந்நிலையில், வேளாண்மை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்து, கணக்கீடு எடுத்து உரிய இழப்பீடு அல்லது நிவாரணம் வழங்க வழிவகை செய்யுமாறு திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜாவிடம் கோரிக்கை மனுவை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். சேகர், மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ஜி. பவுன்ராஜ் உள்ளிட்டோர் வழங்கினர். இதில், குளிக்கரை பகுதி கிராமவாசிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.