ஓய்வூதியர்களின் குறைபாடுகளை கலைந்திடுக! மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில், சந்தாதாரர் மற்றும் 1995 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களின் குறைபாடுகளை எளியமுறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்து வைக்க வலியுறுத்தி, சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசி.சிடியு, எல்எல்எப், யுடியுசி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், செவ்வாய் அன்று பி.எப். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர்கள் சிஐடியு ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், ஐஎன்டியுசி வெங்கட் நாராயணன், எச்எம்எஸ் ஜான்சன், ஏஐசிசிடியு ஞான தேசிகன், எல்எல்எப் தெய்வீகன், யுடியுசி சிவசெல்வம், தொமுச மாநிலச் செயலாளர் எத்திராஜ், சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், பிஎப் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பொது விநியோகத் திட்டத்திற்கு தனித் துறை உருவாக்க வேண்டும் நியாய விலைக்கடை பணியாளர்கள் போராட்டம்
பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும். ப்ளூடூத் முறையை ஒழித்திட வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட சிறப்பு செயலாக்கத் திட்டத்திற்கு ஊக்கத் தொகையாக ஒரு குடும்ப அட்டைக்கு பத்து ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் பிச்சை பிள்ளை தலைமை தாங்கினார். மாநில இணை பொதுச்செயலாளர், அரசு பணியாளர் சங்கம் சிவக்குமார் சிறப்புரை ஆற்றினார். இதில் திருச்சி மாவட்டத்தில் 600 கடைகளை சேர்ந்த ஊழியர்கள் விடுப்பு எடுத்து கடைகளை அடைத்து கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி: மாற்றுப் பாதையின்றி பொதுமக்கள் சிரமம்
பாபநாசம் புது பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டில் திங்கட்கிழமை காலை முதல் பராமரிப்பு பணி நடைபெற்றதால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். பாபநாசம் சாலியமங்கலம் சாலை முக்கியமான சாலையாகும். இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மெலட்டூர், திட்டை, தஞ்சாவூர் செல்பவர்களும் இந்தச் சாலை வழியே செல்கின்றனர். பாபநாசம் - சாலிய மங்கலம் 16 கி.மீட்டர் சாலையில் பல கிராமங்கள் உள்ளன. இந்தச் சாலையில் பாபநாசம் பேரூராட்சி எல்லைக்குள் தனியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி, தனியார் கல்வி குழுமம் ஆகியவை உள்ளன. கேட் மூடப்பட்டதால் மாற்றுப்பாதை இல்லாமல், பள்ளி, கல்லூரி சென்ற மணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் சிரமத்திற்கு ஆளாகினர்.
பேராவூரணி ஊராட்சி பள்ளியில் நூற்றாண்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்குப் பள்ளி நூற்றாண்டு விழா நடைபெற்றது. பேராவூரணி நகரின் மையத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய கிழக்குப் பள்ளி, கடந்த 1924 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்புவரை பேராவூரணியைச் சுற்றி சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த பள்ளி மட்டுமே இருந்ததால், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பலர், இப்பள்ளியில் படித்து உலக அளவிலும், இந்திய அளவிலும் உயர் அலுவலர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாவும் புகழ் பெற்றுள்ளனர். இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவிற்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அய்யாக்கண்ணு (தஞ்சாவூர்), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் (பட்டுக்கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக காலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கல்வெட்டைத் திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் செ.இராகவன் துரை வரவேற்றார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் சுரேந்தர் நன்றி கூறினார்.
அம்மா உணவகத்தை முறையாக செயல்படுத்துக! அறந்தாங்கியில் சிஐடியு நூதன போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே, புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக, நகராட்சி அம்மா உணவகத்தை பாதுகாக்க வலியுறுத்தி மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு மற்றும் அறந்தாங்கி நகராட்சி துறையை கண்டித்தும் அறந்தாங்கி அம்மா உணவகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒர் ஆண்டு காலமாக நிறுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மதிய உணவு சமையல் செய்வதற்கு போதுமான மளிகை சாமான்கள், அரிசி, காய்கனிகள் வழங்க வேண்டும். 2015 2019 வரை நகராட்சி நிர்வாகம் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் கட்டிய ரூ.8 லட்சத்தை ஊழியர் கணக்கில் வரவு வைக்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, மண்சட்டி ஏந்தி அறந்தாங்கி நகர் பகுதியின் பல இடங்களில் பிச்சை எடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் சிஜடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் சி. மாரிகண்ணு, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றியச் செயலாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே, அம்மாபட்டினம் வடக்கு தெரு, 4 ஆவது வார்டு, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டின் பின்புறம் உள்ள கடற்கரைச் சாலையில், வீடுகள் நிறைந்த பகுதியில் பல ஆண்டுகளாக மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பாதையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆபத்தான நிலையில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பியை உயரப்படுத்தி மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.