tamilnadu

img

மதுரை, தென்மாவட்டங்களில் இருந்து புதிய ரயில்கள் இயக்க வேண்டும்

மதுரை, தென்மாவட்டங்களில் இருந்து புதிய ரயில்கள் இயக்க வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

மதுரை, ஏப்.24 - மதுரை மற்றும் தென்மாவட்டங்க ளில் இருந்து பல்வேறு மாவட்டங்க ளுக்குப் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மதுரை ரயில்வே கோட்ட அள வில், 2024-25 ஆண்டுக்கான ஆலோ சனைக்குழுக் கூட்டம் ஏப்ரல் 24 புதன்  கிழமை மதுரை ரிங் ரோட்டில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்திற்குத் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார். மொத்தம் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்  கப்பட்ட நிலையில், 11 எம்.பி.க்கள்  கூட்டத்தில் பங்கேற்றனர். இவர் களில் வைகோ (மாநிலங்களவை), சு.வெங்கடேசன் (மதுரை), தங்க தமிழ்ச்செல்வன் (தேனி), ஆர்.சச்சி தானந்தம் (திண்டுக்கல்), மாணிக்கம்  தாகூர் (விருதுநகர்), ராணி ஸ்ரீகுமார்  (தென்காசி), ராபர்ட் புரூஸ்  (நெல்லை), தர்மர் (மாநிலங்க ளவை), துரை வைகோ (திருச்சி), அப்துல்லா (புதுக்கோட்டை), கொடி  கொன்னில் சுரேஷ் (மாவேலிக்கரை – கேரளா) ஆகியோர் அடங்குவர். வைகோ எம்பி கூட்டத்தின் ஒருங்கிணைப்பைச் செய்தார். கடந்த கூட்டத்தில் எம்பிக்கள் வலி யுறுத்திய கோரிக்கைகளின் செயல் பாடு குறித்தும், அதிகாரிகள் அளித்த  பதில்கள் குறித்தும் விவாதிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, புதிய கோரிக்கைகள் எழுப்பப்பட்டு, எழுத்துப்பூர்வ மனுக்களாகவும் வழங்கப்பட்டது.  

வைகோ எம்.பி., கருத்து

வைகோ எம்.பி., பேசுகையில், “அவரவர் தொகுதிக்கேற்பத் தேவை யான ரயில்வேத் திட்டங்கள் மற்றும்  அடிப்படை வசதிகள் குறித்து எம்பிக்  கள் வலியுறுத்தினர். திண்டுக்கல் – சபரிமலைக்குப் புதிய வழித்தடம்  அமைக்க வேண்டும். மதுரையிலி ருந்து பல்வேறு ஊர்களுக்குப் புதிய  ரயில்கள் இயக்க வேண்டும். பிரிட்டிஷ் காலத்திலிருந்து இயங்கிவந்த கரிவந்தநல்லூர் ரயில்  நிலையம் தற்போது செயல்பட வில்லை. அதை மீண்டும் செயல் படுத்த வேண்டும். ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரு அதிகா ரப்பூர்வ ரயில்வேக் கூட்டத்தில் பங்  கேற்றது முறைகேடு. அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வில்லை. ஒன்றிய அரசின் ரயில்வேத் துறை யில் இந்திமயமாக்கத்தை முன்னி றுத்தும் முயற்சிக்கு எதிராக எம்பிக்  கள் கருத்து தெரிவித்தனர். சில  இடங்களில் தவிர்க்கப்பட்ட ரயில் நிலையங்களில் மீண்டும் ரயில்கள் நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும். தனி ரயில்வே பட்ஜெட் இருந்த போது, புதிய வழித்தடங்கள், ரயில்கள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், தற்போது ரயில்வே பட்ஜெட்  தனியாக இல்லாதது தவறானதும், அநியாயமானதும் ஆகும்” என்றார்.

தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., கோரிக்கை

இக்கூட்டத்தில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “ரயில்வே ஆலோசனைக்குழுக் கூட்டத்திற்குத் தமிழ் தெரிந்த ரயில்வே அதிகாரிகள் வரவேண்டும்.  தெற்கு ரயில்வேயில் மாநில மொழி தெரிந்தவர்களை நிய மித்தால் தானே ரயில்வே குறித்த மக்கள் பிரச்சனைகளை நாங்கள் எடுத்துரைக்க முடியும். இந்த நடை முறையை மத்திய ரயில்வே வாரி யம் மேற்கொள்ள வேண்டும். அடுத்த  கூட்டத்தில் இதை நடைமுறைப் படுத்துங்கள்” என்று வலியுறுத்தி னார்.