மதுரை:
சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்குப் பின் இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள், தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்து க்கு மாறாக, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்து வருகின்றன. வைகைக்நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தமிழகத்தில் நடந்துள்ள அகழாய்வு களிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல்எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் தெரிவிக்கின்றனர்.சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டி ருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன. முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையா டிய சில்லு, தாயக்கட்டை, சதுரங்க காய்கள், சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன.அழகன் குளத்தில் நடந்த அகழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயா்ரக ரவுலட், ஹரிடைன் மண்பாண்டங்கள் கிடைத்ததுபோன்று கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளது. அந்த வகையில் அழகன் குளம்துறைமுகப் பட்டிணத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி பள்ளிச்சந்தை புதூா் இருந்திருக்கலாம். மேலைநாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகா்கள் இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.கீழடியில் ஏழாம் கட்டம், கொந்தகை, அகரம், மணலூரில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நான்கு இடங்களிலும் செப்.15-ஆம் தேதிக்குப் பின்னர் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது.தமிழக அரசின் தொடர் கண்காணிப் போடு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றிய அரசு மேற்கொண்ட பணிகளோடு ஒப்பிட்டால் 100 சதவீதம் வேகம் பிடித்துள்ளது.
தண்ணீர் உணவுபொருட்களை சூடேற்ற அடுப்பு
கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள்நடைபெற்று வருகிறது. கீழடியில் தொழிற்சாலைகள் இருப்பதற்கான சான்றுகள் கடந்த ஆறு கட்ட அகழாய்வில் தெரியவந்துள்ளது. ஏழாம் கட்ட அகழாய்விற்காக மொத்தம் ஏழு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழியும் குறைந்தது நான்கு மீட்ர் ஆழம் உள்ளது.இங்கு குறிப்பிட வேண்டியது. வட்டச்சில்கள் அதிகம் கிடைத்துள்ளது. இதை பெண்கள் “பாண்டி” விளையாடுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம். பாசி மணிகள் கிடைத்துள்ளன. இவற்றை மக்கள் அணிந்திருக்கலாம். அல்லது பாசி மணி கோர்ப்பதை பெண்கள் கைத் தொழிலாக மேற்கொண்டிரு க்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு குழியிலும் சிவப்பு-கருப்பு வண்ணத்தில் பானைகள் உள்ளன.
கண்களுக்கு வர்ணம்தீட்ட...
செம்பு நாணயங்கள் கண்டறியப் பட்டுள்ளது. இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளன. சில பொருட்கள் நீளமாக இருப்பதால் அது ஆணி உள்ளிட்ட பொருட்களாக இருக்க வாய்ப்புள்ளது. அரிவாள் போன்ற தோற்றமுடிய பொருளும் கிடைத்துள்ளது.தண்ணீர், உணவுப் பொருட்களை சூடேற்றுவதற்கான அமைக்கப்பட்டுள்ள அடுப்பின் ஒரு சிறு பகுதி கிடைத்துள்ளது. பெண்கள் கண்களில் வர்ணம் பூசுவதற்காக பயன்படுத்தப்பட்ட மிக நுண்ணியப் பொருட்களும் கிடைத்துள்ளது.
எலும்புக்கூடுகள் - இறுதிச் சடங்கு பொருட்கள்
கொந்தகையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவரும் இடம் இறந்தவர்களை புதைக்கும் மயானப்பகுதியாக இருந்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டு அவை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எலும்புக்கூடுகள் கண்டறியப் பட்டுள்ள இடத்தில் தண்ணீர் சேமித்து வைக்கும்பானைகள் போன்ற அமைப்பு உள்ளது. மயானம் என்பதால் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் ஆச்சரியப்படத்தக்கது என்வென்றால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக அவை மூடிகளுடன் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றைப் பார்க்கும் போது அது தற்போது செய்யப்பட்டது போல் அவ்வளவு சிரத்தையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பத்து உறை கிணறுகள்
அகரத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப்பணிகளில் அது வாழ்விடப் பகுதியாக இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கீழடியோடு ஒப்பிட்டால் இங்கு உறைகிணறுகள் அதிகம் அறியப்பட்டுள்ளது. மொத்தத்தில் பத்து உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது.
வேட்டையாட பயன்படுத்தப்பட்ட நுண் கருவிகள்
அகரத்தில் (Micro Lithic Tools) மிக நுண் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய விலங்குகளை மக்கள் வேட்டையாடி இருக்கலாம். அல்லது வேட்டையாடிய விலங்கின் தோலையும் சதையையும் துல்லியமாக பிரித்தெடுப்பதற்கு இந்தக் கருவிகளை பயன்படுத்தியிருக்கக் கூடும். வழக்கம் போல் பாசிமணிகள் இங்கும் கிடைத்துள்ளது. இங்கும் நான்கு மீட்டர் ஆழத்திற்கு குழிகள் உள்ளன. ஆற்று மணல் எத்தனை மீட்டர் ஆழத்தில் கிடைக்கிறதோ அதுவரை குழிகள் தோண்டப்படுகின்றன. ஆற்று மணல் கண்டறியப்பட்டால் அதற்கு மேல் பொருட்கள் ஏதும் கிடைப்பதற்கு சாத்தியம் இல்லை என்கின்றனர்மணலூரும் ஒரு வாழ்விடப் பகுதியாக இருந்ததற்கான சான்றுகளே கிடைக்கப்பெற்றுள்ளன. இங்கு தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளது. மணலூரில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் தான் எதிர்காலத்திலும் ஆய்வுப் பணிகள் நடைபெறும் நிலை உள்ளது.அகரத்தைப் பொறுத்தமட்டில் அரசுக்குச் சொந்தமான இடத்திலேயே பணிகள் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்டப் பணிகளும் அரசுக்கு சொந்தமான இடத்திலேயே மேற்கொள்ள உள்ளது.
ச.நல்லேந்திரன்
படங்கள்:ஜெ.பொன்மாறன்