“வணக்கம் திருவாரூர்’’ நூல் வெளியீட்டு விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
திருவாரூர், ஜன.4- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய “வணக்கம் திருவாரூர்’’ நூல் வெளியீட்டு விழா, திருவாரூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் மாவட்டக்குழு சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மு. சௌந்தரராஜன் தலைமை ஏற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. பைரவநாதன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு.தியாகராஜன், கு.வேதாரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முனைவர் ஜீ. வெங்கடேசன் அறிமுக உரையாற்றினார். விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், ச. செந்தில்நாதன் எழுதிய “வணக்கம் திருவாரூர்’’ என்ற நூலை வெளியிட்டார். இந்து சமய அறநிலைத் துறை உதவி ஆணையர் பா. ராணி, வட்டாட்சியர் ஆ.ஸ்டாலின் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் பி.ராஜாராமன், பேராசிரியர் ஜவகர், மாவட்ட நூலக வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் மா. ஆசைதம்பி ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர். முன்னதாக, தீக்கதிர் நாளிதழ் திருச்சி மண்டல பொறுப்பாளர் ஐ.வி. நாகராஜன், சென்னை சந்தியா பதிப்பகம் உரிமையாளர் சந்தியா நடராஜன், ஏ.கே.எம். குழும மேலாண்மை இயக்குநர் மருத்துவர் பி. செந்தில் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நா. முத்துநிலவன் நூல் மதிப்புரையாற்றினார். எழுத்தாளர் ச.செந்தில் நாதன் ஏற்புரையாற்றினார். விழாவில், முனைவர் இனிய மித்ரா இயக்கி நடித்த குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் யு.எஸ். பொன்முடி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், வாசிப்பாளர்கள் பங்கேற்றனர்.