world

வங்கதேசத்தில் மதச்சிறுபான்மையினர்  மீதான தாக்குதல் அதிகரிப்பு

வங்கதேசத்தில் மதச்சிறுபான்மையினர்  மீதான தாக்குதல் அதிகரிப்பு

டாக்கா,ஜன.6- வங்கதேசத்தில் நாளுக்கு நாள் மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றது. மாணவர் இயக்கத்தலைவராக இருந்த உஷ்மான் ஹாடி கடந்த டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதும் எதிர்க்கட்சியினர் மீதும் தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக் கால அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது என தொடர் குற்றச் சாட்டுக்கள் உள்ளன. இந்நிலையில் இந்து  சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டின்  மைமென்சிங் மாவட்டத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த தொழிலாளி தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது உடலைக் கட்டித் தொங்கவிட்டு, தீ வைத்து எரித்த கொடூரம் நடந்தது.  இதனைத் தொடர்ந்து  ராஜ்பாரி என்ற  பகுதியில் அம்ரித்  மொண்டல் என்ற இந்து இளைஞர் மத வெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கோகோன் சந்திர தாஸ் என்ற தொழிலதிபர், தனது கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது வெட்டப்பட்டு  தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டார்.  இந்த நிலையில் தான் வங்கதேஷி டெய்லி (Bangladeshi daily) என்ற  பத்திரிகை நிறுவனத்தில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராணா பிரதாப் என்பவரை மர்மநபர்கள்  சுட்டு அவரது தலையையும் துண்டித்து மிகக்கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம்  நடந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே நர்சிங்டி மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் சரத் சக்ரவர்த்தி என்பவர் சிலரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டுள்ளார். இந்தியாவிலும் மதச்சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பழங்குடியினர் மீது இந்துத்துவா மதவெறியர்கள் கொடூர தாக்குதல்களையும் படுகொலைகளையும் செய்து வருகின்றனர். இதே போல இங்கிலாந்து, ஐரோப்பியா என உலகம் முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில் இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ்  பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத் துவா அமைப்புகள் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக  வங்கதேச சிறு பான்மை இந்துக்களின் மீதான  கொலைகள் தாக்குதல்களை பயன்படுத்தி எல்லையோர மாநிலங்களில் கலவரத்தை உருவாக்கி வருகின்றன.