மதுரை:
உயர்நீதிமன்றம் குறித்து இழிவாகப் பேசிய பாஜகவின் முக்கிய நிர்வாகியான எச்.ராஜா மீது இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை , ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகாவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2018ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போது பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா காவல்துறையை மதிக்காமல், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான சொற்களில் விமர்சித்தார். இதுதொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில், எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதால் அவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது.இந்நிலையில் திருமயம் காவல்நிலையம் விசாரித்த வழக்கில், விசாரணையை முடித்து விரைவில் எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை , 2 மாதத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே தொடர்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது.இந்த வழக்கை புதனன்று விசாரித்த நீதிபதி ஹேமலதா, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள்ளாக நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தார். வழக்கின் விசாரணை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.