தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்கக் கோரிக்கை
புதுக்கோட்டை, மே 23- தையல் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கான தையல் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என தொழிலாளர் சங்க ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்ட மகளிர் தையல் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு தையல் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். தையல் தொழிலாளர் நலவாரிய அட்டை வைத்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ளபடி பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தையல் தொழிலாளிக்கு 55 வயது நிறைவடைந்தவுடன் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கலைஞர் கைவினத் திட்டத்தின் மூலம் நல வாரிய அட்டை உள்ள தொழிலாளிக்கு வங்கி மூலம் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவைக் கூட்டத்துக்கு, எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் க. முதமதலிஜின்னா தொடங்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலர் ஏ. ஸ்ரீதர் முடித்து வைத்துப் பேசினார். மாநாட்டில் புதிதாக, மாவட்டத் தலைவர் - எஸ். ஆறுமுகம், மாவட்டச் செயலர் - சி. மாரிக்கண்ணு, மாவட்டப் பொருளாளர் - எஸ். தேவசேனா உள்ளிட்ட நிர்வாகக் குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.